தாமாக முன்வந்து வியாபாரிகள் செய்த செயல் – பழ.நெடுமாறன் பாராட்டு

தமிழர் தேசிய முன்னணித் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கையில்….

சென்னை இராயபுரம் மண்டலத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதால் அப்பகுதியில் உள்ள பூக்கடை, கொத்தவால் சாவடி. யானைக் கவுனி ஆகிய மூன்று பகுதிகளில் உள்ள சுமார் 5,000 கடைகளை ஒரு வாரத்திற்கு அடைப்பது என வணிகர்கள் தாமாகவே முன்வந்து அறிவித்ததைப் பாராட்டுகிறேன்.

அதிகாரிகளின் ஆணை எதுவும் இல்லாமல் வணிகர்கள் தங்களுக்கு ஏற்படும் இழப்பையும் பொருட்படுத்தாமல் கடைகளை அடைக்க முன்வந்தது சிறந்ததொரு முன்மாதிரியாகும். இத்தகைய சமுதாயப் பொறுப்புணர்வு அனைவருக்கும் இருக்கவேண்டும். அப்போதுதான் கொடிய கொரோனா தொற்று சமூகப் பரவலாவதைத் தடுக்க முடியும்.

இதேவேளையில் மற்றொரு செய்தியும் மிகுந்த கவலை தருகிறது. தமிழ்நாட்டில் பொது முடக்கத்தை மீறியதாக சுமார் 6 இலட்சம் பேர் கைது செய்யப்பட்டு வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இது சமூகப் பொறுப்பின்மையை காட்டுகிறது.

வரலாறு காணாத வகையில் உலகெங்கும் கொடிய கொரோனா தொற்று நோய் பரவி மக்களைப் பலிகொண்டு வருகிறது. அதைத் தடுப்பதில் அனைவரும் சாதி, மத, அரசியல் வேறுபாடுகளில்லாமல் ஒன்றுபட்டு நின்று சமுதாய காப்பு உணர்வுடன் இணைந்து செயலாற்றினால் நிச்சயமாக இந்த கொடிய நோயிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள முடியும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave a Response