500 கி மீ நடந்து வந்தார் நடுவழியில் இறந்தார் – நாமக்கல் இளைஞரின் சோகக்கதை

நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த லோகேஷ் பாலசுப்ரமணி (21), மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் வேலை செய்து வந்தார்.மார்ச் 25 முதல் இந்தியா முழுவதும் 144 ஊரடங்குச் சட்டம் பின்பற்றப்படும் நிலையில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. இந்தியாவில் குறிப்பிட்ட சில மாநிலங்கள் தங்கள் எல்லைகளையே மூடியுள்ளது.

இதனால் சொந்த ஊரிலிருந்து மற்ற மாநிலங்களுக்கு கூலித் தொழில் செய்யச் சென்ற தொழிலாளர்கள் அத்தியாவசியத் தேவைகள் கிடைக்கப் பெறாமல் கவலை அடைந்து வருகின்றனர். இந்நிலையில் ஒரு சிலர் சாலையின் வழியே நடை பயணமும் மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்நிலையில், வெளி மாநிலங்களில் வேலை செய்து வந்த தமிழகத்தைச் சேர்ந்த 26 பேருடன் லோகேஷும் நாக்பூரில் இருந்து சுமார் 500 கிலோமீட்டர் தூரம் உள்ள தனது சொந்த ஊரான நாமக்கல்லுக்கு நடை பயணம் மேற்கொண்டுள்ளார்.

தற்போது நிலவி வரும் கோடைக்கால வெயிலில் 3 நாட்கள் 500 கி. மீ நடந்து வந்த லோகேஷ், நேற்று முன்தினம் இரவு (புதன்கிழமை) தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத் வந்தடைந்தார். அவருடன் பயணித்த அனைவரும் அங்கு உள்ள சமுதாய நலக்கூடத்தில் இரவு தங்கியுள்ளனர். மிகவும் களைப்படைந்த நிலையில் காணப்பட்ட லோகேஷ் சக பயணிகளுடன் முகாமில் உள்ள ஒரு இருக்கையில் அமரும் போது நிலைகுலைந்து மயங்கி கீழே விழுந்தார்.

அதிர்ச்சி அடைந்த சக பயணிகள் உடனடியாக மருத்துவமனைக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த மருத்துவர், லோகேஷை பரிசோதனை செய்து அவர் உயிரிழந்துவிட்டார் எனக் கூறியுள்ளார். எதிர்பாராத இந்த சம்பவத்தால் அவருடன் பயணித்த பயணிகள் அதிர்ச்சியில் உரைந்தனர்.

இதையடுத்து இந்த நிகழ்வு பற்றிய விவரங்கள் உள்துறை அமைச்சகத்திற்கு தெரிவிக்கப்பட்டு, உயிரிழந்த லோகேஷ் பாலசுப்ரமணியின் உடல் அவரது சொந்த ஊரான நாமக்கலுக்குக் கொண்டு செல்லப்பட்டது.

தனது சொந்த ஊரை அடைய வேண்டும் என 500 கிலோமீட்டர் பயணம் செய்த லோகேஷ் பாலசுப்ரமணியம் இறுதியில் உயிரிழந்த நிலையில் தனது ஊருக்குத் திரும்பிய சம்பவம் நாட்டுமக்களைப் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Leave a Response