தமிழர்களும் சிங்களர்களும் ஒருபோதும் சேர்ந்திருக்கமுடியாதென நிரூபித்த கோத்தபய – ஐங்கரநேசன் ஆத்திரம்

சிங்கள அதிபர் கோத்தாபய ராஜபக்ச, யாழ்ப்பாணம் மிருசுவிலில் எட்டு அப்பாவித் தமிழர்களைக் கொன்று மலக்குழியில் புதைத்த கொலையாளிச் சிப்பாய் சுனில் இரத்நாயக்காவுக்கு வழங்கப்பட்டிருந்த மரணதண்டனையை நீக்கிப் பொதுமன்னிப்பு வழங்கியுள்ளார்.

உலகமே கொரோனாப் பீதியிலும் ஊரடங்கு அமைதியிலும் உறைந்து கிடக்கும் நேரம் பார்த்து, கொரோனாத் திரைமறைவில் கோத்தாபய ராஜபக்ச இந்த இழிசெயலை அரங்கேற்றியுள்ளார் என்று தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.

மிருசுவில் படுகொலைக் குற்றவாளி கோப்ரல் சுனில் இரத்நாயக்காவுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்திருப்பது தொடர்பாக பொ.ஐங்கரநேசன் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும்,

மிருசுவில் படுகொலையாளிக்கு ட்ரயல் அட்பார் நீதிமன்றம் விதித்த மரண தண்டனையை இலங்கையில் நீதித்துறையின் உச்ச அமைப்பான உயர் நீதிமன்றமும் உறுதி செய்திருந்தது. இந்நிலையில் ஜனாதிபதி இச் சிப்பாயை விடுதலை செய்திருப்பதன் மூலம் நிதித்துறையின் மாண்பையே கேலிக்கு ஆளாக்கியுள்ளார்.

தமிழின அழிப்புக்குச் சர்வதேச விசாரணை வேண்டும் என்று பல தரப்பும் வலியுறுத்தி வருகின்ற நிலையில் நீதிமன்றில் அடையாளம் காணப்பட்ட போர்க்குற்றவாளியை ஜனாதிபதி விடுதலை செய்துள்ளார். இதன் மூலம் இராணுவம் தொடர்பான உள்ளக விசாரணைக்கோ அல்லது சர்வதேச விசாரணைக்கோ இலங்கையில் இடமேயில்லை என்று ஜனாதிபதி தெட்டத் தெளிவாகச் சொல்லியிருக்கிறார்.

சோறு கொடுத்தவர்கள், தங்க இடம் கொடுத்தவர்கள் போன்ற அற்ப காரணங்களுக்காகச் சிறைவைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக் கோரிக்கைகளைக் காதில் வாங்கிக் கொள்ளாத ஜனாதிபதி, தனது இரத்தம் என்ற ஒரே காரணத்துக்காகப் படுகொலைப் புரிந்த சிப்பாயை விடுதலை செய்துள்ளார். இதன் மூலம் ஜனாதிபதி தமிழ் மக்கள் தனக்கு ஒரு பொருட்டே அல்ல என்பதையும் சிங்கள மக்களுக்கான அதிபரே தான் என்பதையும் பட்டவர்த்தனமாக வெளிப்படுத்தியுள்ளார்.

கொரோனா, கடற்கோள் போன்ற பேரிடர்க் காலங்களில் படையினரை அவசப்ர பணிகளில் ஈடுபடுத்துவது ஏற்றுக்கொள்ளத்தக்கதாயினும், ஜனாதிபதி சாதாரண சிவில் நிர்வாக நடவடிக்கைகளிலே படையினரை உள்வாங்கி வருவதோடு, இப்போது உச்சமாக மரணதண்டனைச் சிப்பாய்க்கு விடுதலையும் வழங்கியுள்ளார். இதன் மூலம் ஜனநாயகப் பலத்தைவிட இராணுவப் பலத்தையே தனது ஆட்சித் துணையாக நம்புகிறார் என்பதையும் வெளிப்படுத்தியுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலின்போது இனவாதத்தைக் கக்கி வெற்றியைப் பெற்ற கோத்தாபய ராஜபக்ச அவர்களுக்கு, தமிழ் மக்களைக் கொன்ற சிப்பாயைச் சிறைமீட்டவர் என்ற பிம்பம் வரப்போகும் நாடாளுமன்றத் தேர்தலிலும் பெரு வெற்றியை பெற்றுத் தரக்கூடும். ஆனால், பதவியேற்றது முதல் ஜனாதிபதி தமிழ்மக்கள் தொடர்பாக எடுத்துவரும் நிலைப்பாடுகள் தமிழ் மக்களையும் சிங்கள மக்களையும் ஒருபோதும் ஐக்கியபட முடியாதவாறே துருவப்படுத்தி வருகின்றன.

ஜனாதிபதி தன்னைச் சிங்கள மக்களுக்கான ஜனாதிபதியாக வெளிப்படையாகவே அடையாளப்படுத்தி வருகின்றபோது தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை அவரிடம் இருந்து பெற்றுக் கொள்ள இயலாது என்பது வெள்ளிடைமலை இந்நிலையில், விடுதலைப் புலிகளை அழிப்பதன் மூலமே இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணலாம் என்று சொல்லி இனவழிப்புப் போரை முன்னெடுத்த அரசாங்கத்துக்கு முண்டு கொடுத்த வல்லாதிக்க சக்திகளே இலங்கைத் தீவில் தமிழ் மக்களின் இருப்புக்கான அரசியல் உத்தரவாதத்தையும் வழங்கவேண்டும்

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave a Response