ஒரு கோடி பரிசு சுவரொட்டிக்கு சீமான் பதிலடி

சென்னை வண்ணாரப்பேட்டையில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்த்துப் போராட்டம் நடத்தியவர்கள் மீது தடியடி நடத்தியதைக் கண்டித்தும், மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை இரத்து செய்ய வலியுறுத்தியும் மதுரை மகபூப்பாளையம் பகுதியில் முஸ்லிம்களின் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்தப் போராட்டம் 8 ஆவது நாளாக நேற்றும் தொடர்ந்தது. இந்தப் போராட்டத்தில் முஸ்லிம் பெண்களும் திரளாகக் கலந்து கொண்டு தங்களது எதிர்ப்பினைத் தெரிவித்து வருகின்றனர். அரசியல் கட்சிகள் மட்டுமின்றி சில அமைப்புகளும் ஆதரவு தெரிவித்து வருகின்றன.

இந்தநிலையில் நேற்று நடந்த போராட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தார். அப்போது அவர் பேசியதாவது….

குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராகத் தமிழகம் முழுவதிலும் போராட்டம் பற்றி எரிகிறது. பெண்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள் என கூறி வரும் அரசு, முஸ்லிம் பெண்களை சாலையில் வந்து போராட வைத்துவிட்டார்கள். பெண்கள் முன்னெடுத்த போராட்டங்கள் வீழ்ந்ததாக சரித்திரம் இல்லை. இந்தப் போராட்டமும் வெற்றி பெறும். மோடி அறிவித்துள்ள இந்த திருத்தச் சட்டம், கொரோனா வைரசை விடக் கொடியது.

நாட்டில் ஏதாவது மோசமான திட்டத்தை அறிவித்துவிட்டு மோடி வெளிநாடுகளுக்குச் சென்று தலைமறைவாகிவிடுவார். எனவே, மக்களின் மன உணர்வுக்கு மதிப்பளித்து குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இதுபோல், மதுரை நெல்பேட்டை சுங்கம்பள்ளிவாசலில் நடைபெறும் போராட்டத்திலும் சீமான் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர், குடியுரிமைத் திருத்தச் சட்டம் முஸ்லிம்களுக்கு எதிரானதல்ல. ஒட்டு மொத்த இந்தியர்களுக்கும் எதிரானது. மத்திய அரசு பொதுமக்களைப் பதற்றத்துடன் வைத்துக் கொள்கிறது. இதனை பயன்படுத்தி பொது நிறுவனங்களை தனியார் மயமாக்கி வருகிறது. மதம் பார்த்து மனிதனைப் பிரிப்பது கொடுமையான விஷயம் என்றார்.

முன்னதாக மதுரை விமான நிலையத்தில் சீமான் கூறியதாவது….

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தால் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காட்டினால் ஒரு கோடி ரூபாய் பரிசு என்று சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. அதனை ஒட்டியவர்கள் தான் முதலில் பாதிப்படைவர். குடியுரிமைத் திருத்தச் சட்டத்தினால் ஆபத்து என்னவென்று தெரிந்ததனால் தான் விழித்துக்கொண்டு முஸ்லிம்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வாக்களித்து வெற்றி பெற வைத்த நாட்டு மக்களுக்குப் பணியாற்றுவது மட்டும் தான் ஆட்சியாளர்களின் கடமை. அதனை விட்டு விட்டு, நாட்டின் குடிமகனா என்று கேள்வி கேட்பது நியாயமற்றது.

அமைச்சர் ஜெயக்குமார், குடியுரிமை இல்லை என்றால் முகாம்களில் அடைக்கப்படுவார்கள் என்று ஏளனமாகப் பேசுகிறார். இன்றைக்கு டிரம்ப் வருகையின்போது குடிசைகள் தெரிந்துவிடக்கூடாது என்று 7 அடி சுவர் எழுப்பி அதனை மறைக்க முயற்சி எடுத்து வருகின்றனர். அந்த செங்கலைக் கொண்டு குடிசைவாசிகளுக்கு வீடு கட்டிக் கொடுத்திருந்தால் அது ஆக்கபூர்வமான செயலாக இருந்திருக்கும்.

இவ்வாறு சீமான் கூறினார்.

Leave a Response