சிங்கள அரசின் புதிய பரிந்துரை – இஸ்லாம் பெண்களுக்கு சிக்கல்

இலங்கையில் 2019 ஏப்ரல் 21 ஆம் தேதி, ஈஸ்டர் தினத்தன்று, கிறிஸ்தவ தேவாலயங்கள், நட்சத்திர விடுதிகள் ஆகியவற்றை குறிவைத்து தற்கொலைப்படை பயங்கரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். அவற்றில் 250-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். இலங்கை முழுவதும் இச்சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து, பின்பற்ற வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராயுமாறு தேசப் பாதுகாப்பு தொடர்பான இலங்கை நாடாளுமன்றக் குழு கேட்டுக் கொள்ளப்பட்டது. இக்குழு, தனது ஆய்வை முடித்துள்ளது.

இந்நிலையில், இலங்கை நாடாளுமன்றத்தில், அக்குழுவின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. குழுவின் தலைவர் மாலித் ஜெயதிலகா இதை தாக்கல் செய்தார். அதில், முக்கியமான பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளன.

அவை வருமாறு:-

இலங்கையில் ‘பர்தா’ உடை அணிய உடனடியாக தடை விதிக்க வேண்டும். முகத்தை மறைக்கும்வகையில் யார் உடை அணிந்து இருந்தாலும், அவரது அடையாளம் தெரிவதற்காக, முக மறைப்பை நீக்குமாறு கேட்க போலீசுக்கு அதிகாரம் அளிக்கப்பட வேண்டும். முக மறைப்பை நீக்க சம்மதிக்காவிட்டால், அந்த நபரை வாரண்ட் இல்லாமல் கைது செய்ய அதிகாரம் அளிக்கப்பட வேண்டும்.

இன, மத அடிப்படையிலான அரசியல் கட்சிகளின் பதிவை தேர்தல் கமிஷன் ரத்து செய்வதற்காக புதிய சட்டம் கொண்டுவரப்பட வேண்டும். மத, இன மோதல்களை உண்டாக்கும் பெயருடன் கூடிய அரசியல் கட்சிகளை பதிவு செய்வதை தடை செய்ய வேண்டும். அத்தகைய அமைப்புகள், ஒரு குறிப்பிட்ட காலத்துக்குள் அரசியல் கட்சியாகவோ, மதம் சாராத அரசியல் கட்சியாகவோ மாற்றப்பட வேண்டும்.

மதரசாக்களில் படிக்கும் மாணவர்கள், கல்வி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பள்ளிகளுக்கு 3 ஆண்டுகளுக்குள் மாற்றப்பட வேண்டும். அதுபோல், மதரசாக்களை ஒழுங்குபடுத்த சிறப்பு கமிட்டி அமைக்கப்பட வேண்டும்.

இவ்வாறு நாடாளுமன்ற குழு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இஸ்லாமிய மத நம்பிக்கையின் அடையாளங்களில் ஒன்றான பர்தா அணிய தடை விதிக்கவேண்டும்,அதோடு பர்தா அணிந்தோரை முகத்தைக் காட்ட நிர்ப்பந்திக்க வேண்டும் ஆகிய பரிந்துரைகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.
இது நடைமுறைக்கு வந்தால் முஸ்லிம் பெண்கள் சாலையில் நடமாடினால் வேண்டுமென்றே முகத்தைக் காட்ட கட்டாயப்படுத்தலாம் என்பதாலும் பதட்டம் ஏற்பட்டுள்ளது.

Leave a Response