கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி மாவட்ட திரையரங்கு உரிமையாளர்கள் சங்க ஆலோசனைக் கூட்டம் கோவை சின்னியம்பாளையத்தில் நேற்று நடைபெற்றது.
இதற்கு தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்களின் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் 150 திரையரங்கு உரிமையாளர்கள் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் திரையரங்கு உரிமையாளர்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைகள், நட்சத்திர நடிகர்கள் நடித்த படங்களின் தோல்வியால் ஏற்படும் நஷ்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.
கூட்டத்துக்குப் பின்னர் திருப்பூர் சுப்பிரமணியம் செய்தியாளர்களிடம் கூறியதாவது…..
நட்சத்திர நடிகர்கள் நடிக்கும் படங்கள் தோல்வியடைந்தால், நடிகர்களே பொறுப்பேற்றுக் கொண்டு, தயாரிப்பாளர், விநியோகஸ்தர்கள், தியேட்டர் உரிமையாளர்களின் நஷ்டத்தை ஈடுகட்ட வேண்டும். அந்த நஷ்டத்தை சம்பந்தப்பட்ட நடிகர்கள் ஈடுகட்டும் வரை அவர்களது படங்களைத் திரையிட மாட்டோம்.
ஒரு படம் வெளியிடப்பட்டு 100 நாட்களுக்குள் தயாரிப்பாளர்கள் டிஜிட்டல் தளத்தில் (அமேசான், நெட் ப்ளீக்ஸ்) வெளியிடக் கூடாது. அப்படி வெளியிட்டால் அந்தத் தயாரிப்பாளர்களின் படத்தையும் வெளியிட மாட்டோம்.
தமிழக அரசின் மாநில வரியான 8 சதவீதத்தை பிப்ரவரி மாதத்துக்குள் திரும்பப் பெற வேண்டும். இல்லை என்றால் மார்ச் 1 ஆம் தேதி முதல் தியேட்டர்கள் மூடப்படும். இதுதொடர்பாக சங்கக் கூட்டத்தில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
திருப்பூர் சுப்பிரமணியத்தின் இந்தக் கருத்து பலத்த சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர்களுக்கும் விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்களுக்கும் நேரடியாக எவ்வித தொடர்பும் கிடையாது.
தயாரிப்பாளர்களோடு மட்டுமே அவர்கள் ஒப்பந்தம் போட்டுக்கொள்கிறார்கள். அப்படி இருக்கும்போது நடிகர்களைப் பற்றி இவ்வாறு கருத்து தெரிவிப்பது முறையல்ல என்று சொல்கிறார்கள்.