இந்தியா தென்னாப்பிரிக்கா மட்டைப்பந்து அணிகளுக்கு இடையிலான ஐந்து நாள் போட்டித் தொடரின் முதல் போட்டி நேற்று (அக்டோபர் 2) விசாகப்பட்டினத்தில் தொடங்கியது.
இந்தப் போட்டி மூலம் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் நுழைந்துள்ள தென்ஆப்பிரிக்க இடக்கை சுழற்பந்து வீச்சாளர் செனுரன் முத்துசாமியின் பூர்வீகம் தமிழ்நாடு.
அவரது குடும்பம் தமிழகத்தில் இருந்து தென்ஆப்பிரிக்காவுக்குக் குடியேறி விட்டது. செனுரன் முத்துசாமி பிறந்து வளர்ந்தது எல்லாமே தென்ஆப்பிரிக்காவில் தான்.
25 வயதான செனுரன் முத்துசாமி, சுழற்பந்து வீசுவதுடன், பேட்டிங்கும் செய்யக்கூடியவர். இந்தப் போட்டியின் முதல் நாளில் அவரது பந்து வீச்சு எடுபடவில்லை.
முன்னதாக முத்துசாமி அளித்த பேட்டியில்,
என்னுடைய பூர்வீகம் சென்னை. எனது சொந்த பந்தங்கள் நாகப்பட்டினத்தில் உள்ளனர். தலைமுறை கடந்து விட்டாலும் இந்திய கலாசாரம், தமிழக பாரம்பரியம் இன்னும் எங்களை விட்டு அகலவில்லை.
தாயகம் திரும்பியதும் தென்ஆப்பிரிக்காவில் இந்தியர்கள் அதிகம் வசிக்கும் பகுதியான டர்பனில் யோகா செய்வேன். அங்கு தினமும் கோவிலுக்குச் செல்வது உண்டு. எனது உறவினர்களில் சிலர் தமிழ் பேசுவார்கள். துரதிர்ஷ்டவசமாக எனக்குத் தமிழ் தெரியாது. ஆனால் கற்றுக்கொள்ளத் தொடங்கி இருக்கிறேன் என்றார்.