தென்னாப்பிரிக்காவுடன் கிரிக்கெட் போட்டி – இந்தியா வலுவான தொடக்கம்

இந்தியாவுக்கு வந்துள்ள தென்ஆப்பிரிக்க மட்டைப்பந்து அணி 3 போட்டிகள் கொண்ட ஐந்துநாள் போட்டித் தொடரில் விளையாடுகிறது.

இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது போட்டி விசாகப்பட்டினத்தில் நேற்று தொடங்கியது.

டாஸ் வென்ற இந்திய அணித்தலைவர் விராட் கோலி, பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன்படி மயங்க் அகர்வாலுடன் இணைந்து முதல்முறையாக தொடக்க ஆட்டக்காரராக ரோகித் சர்மா அடியெடுத்து வைத்தார்.

வெரோன் பிலாண்டரும், ரபடாவும் தென்ஆப்பிரிக்காவின் பந்து வீச்சுத் தாக்குதலைத் தொடங்கினர்.முதல் அரைமணி நேரம் தென்ஆப்பிரிக்காவின் பந்து வீச்சை எதிர்கொள்வதில் இந்திய வீரர்கள் தடுமாறினர்.

ரோகித் சர்மாவும், அகர்வாலும் தடுப்பாட்டத்தில் கவனம் செலுத்தி தங்களை நிலை நிறுத்திக் கொண்ட பிறகு, மெதுவான தன்மை கொண்ட இந்த ஆடுகளத்தில் எதிரணியின் பந்து வீச்சை சிரமமின்றி எதிர்கொண்டு ரன்களை திரட்டினர். கேஷவ் மகராஜ், டேன் பீட், செனுரன் முத்துசாமி ஆகிய மூன்று சுழற்பந்து வீச்சாளர்களை பயன்படுத்திப் பார்த்தும் இந்த ஜோடியை அசைக்க முடியவில்லை.

இவர்கள் உணவு இடைவேளையின் போது விக்கெட் இழப்பின்றி 91 ரன்கள் எடுத்திருந்தனர். தொடர்ந்து ரோகித்-அகர்வால் கூட்டணி முழுமையாக கோலோச்சியது. ரோகித் சர்மா, ஏதுவான பந்துகளை எல்லைக்கோட்டுக்கு அனுப்பி உள்ளூர் ரசிகர்களை குதூகலப்படுத்த தவறவில்லை. குறிப்பாக டேன் பீட்டின் ஒரே ஓவரில் தொடர்ச்சியாக இரண்டு பிரமாதமான சிக்சர்களை நொறுக்கினார். அபாரமாக ஆடிய ரோகித் சர்மா தனது 4 ஆவது சதத்தை பூர்த்தி செய்தார். மறுமுனையில் தனது 4 ஆவது அரைசதத்தை கடந்த மயங்க் அகர்வால் ‘கன்னி’ சதத்தை நோக்கி முன்னேறினார்.

இருவரும் ரன்வேகத்தை அதிகரிக்கச் செய்த சமயத்தில் மழை குறுக்கிட்டது. இதையடுத்து தேனீர் இடைவேளை விடப்பட்டது. ஆனால் இடி மின்னலுடன் பலத்த மழை கொட்டியதால் மேற்கொண்டு ஆட்டத்தை தொடர முடியவில்லை.

இந்திய அணி 59.1 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 202 ரன்கள் (ரன்ரேட் 3.41) சேர்த்து இருந்த நிலையில் முதல் நாள் ஆட்டம் முடித்துக் கொள்ளப்பட்டது.

ரோகித் சர்மா 115 ரன்களுடனும் (174 பந்து, 12 பவுண்டரி, 5 சிக்சர்), மயங்க் அகர்வால் 84 ரன்களுடனும் (183 பந்து, 11 பவுண்டரி, 2 சிக்சர்) களத்தில் உள்ளனர். மழையால் முதல் நாளில் 30.5 ஓவர்கள் இழப்பு ஏற்பட்டது.

இன்றைய 2 ஆவது நாள் ஆட்டம் காலை 9.20 மணிக்கு தொடங்கும்.

Leave a Response