உலகெங்கும் மனித உரிமைகளை வலியுறுத்தியும் நிறவெறிக்கு எதிராகவும் போராடி வந்தவருமான நோபல் பரிசு பெற்ற தென் ஆபிரிக்காவின் அங்கிலிக்கன் திருச்சபையின் பேராயர் டெஸ்மன்ட் டுட்டு டிசம்பர் 26,2021 ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கேப்டவுன் நகரில் காலமானார்.
சிங்கள அரசு ஈழத்தமிழர்களுக்கு எதிராக நடத்திய போரை நிறுத்தி மனித உரிமை மீறல்களுக்குப் பொறுப்பு கூற வேண்டும் என டெஸ்மன்ட் டுட்டு வலிறுத்தி வந்தார்.
தனது இறுதிக் காலம் வரை ஒடுக்கப்பட்ட இனங்களுக்காக அவா் தொடர்ந்து குரல் கொடுத்தார்.
அவரது மறைவால், நிறவெறியிலிருந்து தென் ஆப்பிரிக்காவை விடுவித்த மேலும் ஒருவரை நாம் இழந்துள்ளோம்,
டெஸ்மண்ட் டுட்டு யாருடனும் ஒப்பிட முடியாத ஒரு தேச பக்தர். உழைக்காமல் கடவுளை மட்டும் நம்புவதால் எந்தப் பலனும் இல்லை என்ற பைபிள் கோட்பாட்டை தனது வாழ்வால் நிரூபித்தவர் என
தென்னாபிரிக்க அதிபர் சிறில் ராமபோசா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
90 வயதான டெஸ்மண்ட் டுட்டு, நோபல் பரிசு பெற்று உயிரோடு இருந்த கடைசி தென் ஆப்பிரிக்கா் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜோஹன்னஸ்பர்க் மற்றும் கேப் டவுன் நகர தேவாலயங்களில் முதல் கருப்பின தலைமைப் பாதிரியாராகப் பொறுப்பு வகித்த அவர், தென் ஆப்பிரிக்காவில் நிறவெறிக்கு எதிராகவும் மனித உரிமைகளை வலியுறுத்தியும் செயல்பட்டு வந்தார்.
அதன் காரணமாக, அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு உட்பட பல்வேறு சர்வதேச விருதுகள் வழங்கப்பட்டன. தென் ஆப்பிரிக்காவில் நிறவெறி ஒழிக்கப்பட்டதில் அவருக்கு முக்கியப் பங்கு உள்ளதாகப் பாராட்டப்படுகிறது.
அவரது மறைவுக்கு பல்வேறு உலக நாடுகளின் தலைவா்கள், மனித உரிமை அமைப்புகளைச் சோ்ந்தவா்களும் இரங்கல் தெரிவித்துள்ளனா்.
பேராயர் டெஸ்மன்ட் டுட்டுவின் மறைவையொட்டி தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் விடுத்துள்ள இரங்கற் செய்தியில்,
மனித உரிமைகளுக்காகவும் உலக சமாதானத்துக்காகவும் தனது தள்ளாத வயதிலும் போராடிவந்த பேராயர் டெஸ்மன்ட் டுட்டுவின் மறைவு ஈழத்தமிழர்களுக்கு ஈடுசெய்ய முடியாத ஒரு பேரிழப்பு ஆகும்.
தென்னாபிரிக்காவில் தனது கறுப்பு இனத்தவர்களுக்கு எதிரான வெள்ளை நிறவெறிக்கு எதிராக ஜனநாயக வழியில் போராடிவந்த டெஸ்மன்ட் டுட்டு மனித உரிமைகளின் ஒரு சர்வதேச அடையாளமாக விளங்கிவந்துள்ளார்.
தென்னாபிரிக்காவைத் தாண்டியும் பூமிப்பந்தில் எங்கெல்லாம் மனிதம் வதைபடுகின்றதோ அங்கெல்லாங்கூட அட்டூழியங்களுக்கு எதிரான ஒரு உலகின் முகவரியாகத் திகழ்ந்தார்.
பேராயரான டெஸ்மன்ட் டுட்டு மனிதம் என்பது இனம், மதம், மொழி என்ற எல்லைகளைக் கடந்த ஓர் உயரிய மாண்பு என்ற நிலைப்பாட்டைக் கொண்டிருந்தார். இதனால், இஸ்ரேலிய யூதர்களால் பாலஸ்தீனியர்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்டுக்கொண்டிருக்கும் வன்முறைகளுக்கு எதிராகக் குரலெழுப்பி வந்தார். ஈராக் மீது பொய்க் காரணங்கள் கூறிப் போர் தொடுத்தார்கள் என்று முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ் முன்னாள் பிரித்தானியப் பிரதமர் ரொனி பிளேயர் இருவரையும் சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றில் நிறுத்துமாறு வலியுறுத்தி வந்தார்.
ஈழத்தமிழர்கள்மீது பௌத்த சிங்களப் பேரினவாதம் நிகழ்த்தியது யுத்தக் குற்றமல்ல; அது இனப்படுகொலையே என்று சர்வதேச அரங்கில் உறுதிபடக்கூறி நின்றார்.
விடுதலைப் புலிகளை உலகம் பயங்கரவாதிகளாகச் சித்திரித்தபோது புலிகளைத் தமிழர்களது பிரதிநிதிகளாகக் கண்டார். ஆனால், வெள்ளையர்களின் கரங்களைப்பற்ற விழைந்த எமது தலைவர்களின் இராஜதந்திரம் துரதிர்ஸ்டவசமாக, ஈழத்தமிழர்களின்பால் இக்கறுப்பினப் போராளி பரிவுடன் நீட்டிய கரங்களை இறுகப் பற்றத்தவறிவிட்டது.
உலக அமைதிக்கான குரலாக ஒலித்ததால் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கிக் கௌரவிக்கப்பட்ட டெஸ்மன்ட் டுட்டு தனது 90ஆவது வயதில், 26.12.2021 அன்று தனது குரலை நிரந்தரமாகவே நிறுத்திக்கொண்டார்.
உலகம் முழுவதிலுமிருந்து அவரை அஞ்சலித்துக் கொண்டிருக்கும் ஒடுக்கப்பட்ட மக்களுடன் ஈழத்தமிழ் மக்களின் சார்பில் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கமும் இணைந்து தனது அஞ்சலியைச் சிரம் தாழ்த்தித் தெரிவித்துக்கொள்கிறது
இவ்வாறு அந்த இரங்கற் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.