1 இன்னிங்ஸ் 202 வித்தியாசத்தில் வெற்றி – இந்திய அணி அபாரம்

இந்தியா மற்றும் தென்ஆப்பிரிக்கா மட்டைப்பந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி ஐந்துநாள் போட்டி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் களமிறங்கி தனது முதல் இன்னிங்சை விளையாடிய இந்திய அணி இரண்டாவது நாள் ஆட்டத்தில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 497 ரன்கள் எடுத்திருந்த போது டிக்ளேர் செய்தது.

இந்திய அணியில் அதிகபட்சமாக ரோகித் சர்மா 212 ரன்களும், ரஹானே 115 ரன்களும், ரவீந்திர ஜடேஜா 51 ரன்களும் எடுத்திருந்தனர்.

தென்ஆப்பிரிக்கா அணியில் அதிகபட்சமாக ஜார்ஜ் லின்டே 4 விக்கெட்டுகளும், காஜிசோ ரபடா 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

இதனையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய தென்ஆப்பிரிக்கா அணி, இந்திய அணியின் பந்து வீச்சினைத் தாக்குப் பிடிக்க முடியாமல், மூன்றாவது நாள் ஆட்டத்தில் 162 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது.

தென்ஆப்பிரிக்க அணியில் அதிகபட்சமாக ஜுபைர் ஹம்சா 62 ரன்கள் எடுத்தார். இந்திய அணியில் உமேஷ் யாதவ் 3 விக்கெட்டுகளும், நதீம், முகமது ஷமி, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

முதல் இன்னிங்ஸில் 335 ரன்கள் பின்தங்கிய நிலையில் பாலோ-ஆன்’ ஆகி, தொடர்ந்து தனது இரண்டாவது இன்னிங்சை ஆடியது தென்ஆப்பிரிக்க அணி.

இந்திய அணியின் அபார பந்து வீச்சால் 133 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தென்ஆப்பிரிக்க அணியில் அதிகபட்சமாக தேனிஸ் டி புருன் 30 ரன்கள் எடுத்தார். இந்திய அணியில் முகமது ஷமி 3 விக்கெட்டுகள், உமேஷ் யாதவ், நதீம் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், அஸ்வின், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதன்மூலம் தென்ஆப்பிரிக்க அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி, இன்னிங்ஸ் மற்றும் 202 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

Leave a Response