அமைச்சர் பாண்டியராஜனை பதவி நீக்கம் செய்க – தமிழக முதல்வருக்கு பெ.மணியரசன் கோரிக்கை

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழுக் கூட்டம் தஞ்சை பேரியக்க அலுவலகத்தில் நேற்று (21.10.2019), பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் தலைமையில் நடைபெற்றது. பேரியக்கப் பொதுச்செயலாளர் கி.வெங்கட்ராமன் முன்னிலை வகித்தார். பேரியக்கப் பொருளாளர் அ.ஆனந்தன், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் க.அருணபாரதி, பழ.இராசேந்திரன், நா.வைகறை, கோ.மாரிமுத்து, க.முருகன், இரெ.இராசு, க.விடுதலைச்சுடர், ம.இலட்சுமி, தை.செயபால், மு.தமிழ்மணி ஆகியோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் ஒன்று…..

தமிழர் வரலாற்றை சிதைக்கும் தமிழ்த்துறை அமைச்சர் பாண்டியரசனைப் பதவி நீக்கம் செய்க!

தமிழ்த்துறை அமைச்சர் பாண்டியராசன் கீழடி தமிழர் நாகரிகத்தை “பாரத நாகரிகம்” என்று கூறி, தமிழர் வரலாற்றைத் திரிக்கும் கருத்துகளை அண்மையில் கூறினார். இது தமிழர் வரலாற்றை மறைக்கும் செயலாகும்!

ஏற்கெனவே மதுரையில் தமிழன்னை சிலை எழுப்புவதற்கான பன்னாட்டு ஏல அறிக்கை வெளியிட்டதில், சங்ககாலத் தமிழ்ப் பண்பாடு என்பது வேதகால பிராமணப் பண்பாடு கலந்தது என்றும், அதையும் பிரதிபலிக்கும் வகையில் தமிழன்னை சிலை அமைய வேண்டுமென்றும் தமிழ்நாடு அரசு கூறியிருந்தது.

தமிழன்னை பெயரில் சமற்கிருத மாதா சிலை எழுப்பும் திட்டத்தை எதிர்த்து, தமிழ்த்தேசியப் பேரியக்கம், நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழ் உணர்வாளர்கள் மதுரையில் நடத்திய கண்டனப் போராட்டத்தின் விளைவாக தமிழன்னை சிலையில் நடைபெறவிருந்த திரிபு வேலையை தடுத்து நிறுத்தினோம்.

நடப்பாண்டு பன்னிரெண்டாம் வகுப்பின் புதிய ஆங்கிலப் பாடப் புத்தகத்தில், தமிழ் மொழி கி.மு. 3ஆம் நூற்றாண்டில் தோன்றியது என்றும், சமற்கிருதம் கி.மு. 20ஆம் நூற்றாண்டில் தோன்றியது என்றும் கலிபோர்னியா பல்கலைக்கழகப் பேராசிரியர் ஜார்ஜ் எல். ஹார்ட் தவறாக எழுதிய கட்டுரை இடம் பெற்றிருந்தது. இக்கட்டுரையிலும் சங்ககாலத் தமிழர் பண்பாடு என்பது, வேதகால பிராமணப் பண்பாடும், இந்துப் பண்பாடும் கலந்திருந்தது என்று தவறாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த கட்டுரையாசிரியர் ஜார்ஜ் ஹார்ட்டுக்கு 2015ஆம் ஆண்டு, பா.ச.க. அரசு “பத்மசிறீ” விருது கொடுத்து சிறப்பித்தது. இதுவரை இல்லாத வரையில் தமிழர்களின் சங்ககாலப் பண்பாட்டை வேத பிராமணப் பண்பாட்டுடன் இணைந்தது என்ற கூற்றை திரும்பத் திரும்ப சொல்வது அண்மையில்தான் அதிகரித்துள்ளது.

கீழடி நாகரிகத்தை பாரத நாகரிகம் என்பதும், திராவிட நாகரிகம் என்பதும் தமிழர் வரலாற்றையும் தனித்தன்மையுள்ள பெருமிதங்களையும் மறைத்து ஆரியத்துவப் பண்பாட்டிற்கு கீழ்ப்பட்டதாக மாற்றும் கொடுஞ்செயலாகும்!

தமிழ்த்துறைக்கென்று உள்ள அமைச்சர் பாண்டியராசன் கீழடி நாகரிகத்தை பாரத நாகரிகம் என்று குறிப்பிட்டது வேண்டுமென்றே திட்டமிட்டு தமிழை மறைக்க – தமிழர் நாகரிகத்தை மறைக்கக் கூறிய கருத்தாகும்! எனவே, தமிழ்த்துறை அமைச்சர் பாண்டியராசனை அப்பதவியிலிருந்து நீக்குமாறு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு கேட்டுக் கொள்கிறது!

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Response