பிக்பாஸ் நிகழ்ச்சியும் அதிமுக ஆட்சியும் – கமல் சாடல்

சென்னையில் நடந்த தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பிறகு, கமல்ஹாசன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது….

நல்ல திட்டங்கள் பற்றி அரசிடம் கோரிக்கை வைக்கலாமே? என்று கேட்கிறார்கள். இந்த அரசிடம் என்ன கோரிக்கைகள் வைத்தாலும் எதுவும் நிறைவேறப்போவதில்லை. வைக்காத கோரிக்கைகள் என்ன இருக்கிறது? என்பதே என் கேள்வி.

வாய்ச் சொல்லில் வீரர்களாக இருக்கிறார்கள். திட்டங்களை பெயருக்கு தொடங்கி பின்பு கிடப்பில் போட்டுவிடுகிறார்கள். பள்ளிகளில் வழங்கப்படும் சத்துணவில் அழுகிய முட்டை போடுகிறார்கள். இதற்கு சம்பந்தப்பட்ட கோழியோ அல்லது சேவலோ பொறுப்பாக முடியுமா?

கட்சியை ஒரு துரித உணவகம் போல நடத்துகிறார், என்று அமைச்சர் ஜெயக்குமார் என்னை விமர்சித்து இருக்கிறார். அவர்களும் என்னைப் போல ஒரு உணவகத்தைத் தான் நடத்துகிறார்கள்.

எனவே போட்டி, பொறாமை காரணமாக இதைச் சொல்லி இருக்கலாம். நான் அவர்களை ஒரு வியாபாரிகளாகவே பார்க்கிறேன். ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி தேவையா? இது கலாசார சீரழிவு என்றும் கூறியிருக்கிறார். ‘இந்த ஆட்சியும் அப்படித்தான் இருக்கிறது’, என்பதைப் பதிலாக அளிக்கிறேன் நான்.

அண்ணா பல்கலைக்கழகத்தில் பகவத் கீதையைப் பாடமாக கொண்டுவந்தது தேவையில்லாதது. படிப்பு முடிந்ததும் தனக்கு தேவையான பிற விஷயத்தை மாணவர்களே தேர்வு செய்துகொள்வார்கள். அதைக் கல்விக் கூடத்தில் கொண்டுவரக் கூடாது.

பிரதமர் நரேந்திர மோடி ‘தமிழ்’ புகழ் பாடிக்கொண்டு இருக்கிறார், இது தமிழகத்தில் பா.ஜ.க.வை காலூன்றச் செய்யும் முயற்சி என்கிறார்கள், இருக்கலாம். அதில் தவறில்லையே. நாகலாந்து சென்றால் அந்த ஊர் தொப்பி அணிந்து கொண்டு ஆடுவதில்லையா? அதுபோல நமது பெருமையையும் தூக்கி சிறிது நாட்கள் தலையில் வைத்துக்கொள்ளட்டுமே.

இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Response