புதிய மோட்டார் வாகனச் சட்டம் – பல மாநிலங்கள் எதிர்ப்பு தமிழகம் அமைதி

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய மோட்டார் வாகனச் சட்டம், நாட்டில் உள்ள அனைத்து வகையான வாகன ஓட்டிகளையும் பீதியடையச் செய்துள்ளது. போக்குவரத்து விதிமுறை மீறல்களுக்கான அபராத தொகைகள் கடுமையாக உயர்த்தப்பட்டதால், வாகன ஓட்டிகள் பல்வேறு பாதிப்புகளைச் சந்தித்து வருகின்றனர்.

புதிய மோட்டார் வாகனச் சட்டம் கடந்த 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தாலும் கூட, மேற்கு வங்கம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அதனால், அந்த மாநிலங்களில் இன்னும் அமல்படுத்தப்படவில்லை.

மற்ற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், 1 ஆம் தேதி முதல் புதிய மோட்டார் வாகனச் சட்டம் அமலுக்கு வந்துவிட்டது. பல்வேறு விதிமீறல்களுக்கு ஒன்று சேர்த்து ஒரு வாகன ஓட்டிக்கே, ரூ. 30 ஆயிரம், ரூ.40 ஆயிரம் என்று பல ஆயிரம் ரூபாய் மதிப்பில் அபராதத்தை விதித்து அதிகாரிகள் வாகன ஓட்டிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி வருகின்றனர்.

பல மாநிலங்கள் புதிய மோட்டார் வாகனச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இச்சட்டம் குறித்து தமிழக அரசு மவுனமாக இருப்பதால் குழப்பமாக உள்ளதாக வாகன ஓட்டிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

பாஜ ஆளும் மற்றும் ஆதரவு கட்சி ஆளும் மாநிலங்களில் மட்டுமே புதிய சட்டம் அமலுக்கு வந்துள்ளது. காங்கிரஸ் மற்றும் மற்ற கட்சிகள் ஆளும் மாநிலங்களில் புதிய மோட்டார் வாகனச் சட்டம் அமல்படுத்தவில்லை.

குஜராத்: புதிய சட்டப்படி உயர்த்தப்பட்டுள்ள அபராதத்தை குறைத்து குஜராத் அரசு நடவடிக்கை எடுத்து உள்ளது. அந்தவகையில் ஹெல்மெட் போடாமல் இருசக்கர வாகனம் ஓட்டுவோருக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள அபராத தொகையை ரூ.1000 என்பதில் இருந்து ரூ.500 ஆக குறைத்துள்ளது. இதேபோல் லைசென்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டுவோருக்கு விதிக்கப்படும் அபராத தொகை ரூ.5 ஆயிரம் என்பதை, இரு சக்கர வாகனம் ஓட்டுனர்களுக்கு ரூ.2 ஆயிரமாகவும், 4 சக்கர வாகனம் ஓட்டுவோருக்கு ரூ.3 ஆயிரமாகவும் குறைத்துள்ளது.

ஒடிசா: ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில், புதிய மோட்டார் வாகன சட்டத்தை, 3 மாதத்திற்கு பின்பு அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. முன்னதாக, புதிய மோட்டார் விதிமுறைகளைப் பற்றி வாகன ஓட்டிகள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. புதிய சட்டத்தின்படி திருத்தப்பட்ட விதிகளை அமல்படுத்தியதன் காரணமாக, மாநிலத்தின் சில பகுதிகளிலிருந்து, குறிப்பாக புவனேஸ்வர் வரும் வாகன ஓட்டிகள் தேவையற்ற மனக்கசப்புக்கு ஆளாவதாக முதல்வர் பட்நாயக் கவலை தெரிவித்துள்ளார்.

மத்திய பிரதேசம்: ‘உயர்த்தப்பட்ட கட்டணங்கள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட்ட பின்னர், புதிய சட்டம் செயல்படுத்தப்படும்’ என்று மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் தலைமையிலான அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து சட்டத்துறை அமைச்சர் பி.சி.சர்மா கூறுகையில், “இப்போது ரூ.250 – 500 வரை போக்குவரத்து விதிமீறல்களுக்கு அபராதம் விதிக்கும் நிலையில், அபராதம் ரூ.5000 ஆக உயர்த்தப்பட்டால் எப்படி என்று மக்கள் கேட்கிறார்கள். எனவே விழிப்புணர்வு ஏற்படுத்திய பின் அமல்படுத்த முடிவு எடுக்கப்படும்’’ என்றார்.

சட்டீஸ்கர்: சட்டீஸ்கரில் ஆளும் காங்கிரஸ் அரசாங்கமும், புதிய மோட்டார் வாகனச் சட்டத்தின் அபராத விதிகளை அமல்படுத்தவில்லை. இதுகுறித்து, உள்துறை அமைச்சர் தமரத்வாஜ் கூறுகையில், ‘‘இவ்வளவு அபராதம் இருக்கக்கூடாது. இந்த சட்டத்தை எந்த வடிவத்தில் செயல்படுத்த முடியும் என்பதை மாநில அரசு ஆராய்கிறது. மாநில அரசால் சட்டத்தில் திருத்தம் செய்ய முடியுமா என்பதை ஆராய்ந்து வருகிறோம்’’ என்றார்.

ராஜஸ்தான்: காங்கிரஸ் கட்சி ஆளும் ராஜஸ்தான் மாநிலத்தில், புதிய மோட்டார் வாகனச் சட்டத்தில் விதிக்கப்பட்டுள்ள கடுமையான அபராதங்களை குறைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து, ராஜஸ்தான் போக்குவரத்து அமைச்சர் பிரதாப் சிங் கச்சாரியாவாஸ் கூறுகையில், ‘‘அபராதங்களை கண்டு மக்கள் அச்சமடைந்துள்ளனர். சாதாரண மக்களும் செலுத்தும் வகையிலான அபராதம் விதிக்க வகை செய்யப்படும்’’ என்றார்.

பஞ்சாப்: பஞ்சாப் மாநிலத்தில் பழைய மோட்டார் வாகன சட்டம் தொடர்ந்து நிலவுகிறது. இதுகுறித்து, பஞ்சாப் மாநில போக்குவரத்து அமைச்சர் ரசியா சுல்தானா கூறுகையில், “சாலை விபத்துகளை குறைக்க அபராதம் விதிக்கப்படுவதை ஏற்கிறோம். அதேநேரத்தில் வாகன ஓட்டிகளுக்கு அது பெரும் சுமையாக இருக்கக்கூடாது. தற்போது திருத்தப்பட்ட புதிய மோட்டார் வாகன விதிகள், பஞ்சாப் மாநிலத்திற்கு பொருந்தாது” என்றார்.

தெலங்கானா: தெலுங்கானாவில், புதிய மோட்டார் வாகன சட்டத்தை ஆய்வு செய்ய, மாநில அரசால் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது, மேலும் குழுவின் பரிந்துரைகள் போக்குவரத்து அமைச்சர் மற்றும் முதலமைச்சருக்கு ஒப்புதலுக்காக அனுப்பப்படும். அதுவரை, புதிய அபராதம் மாநிலத்தில் செயல்படுத்தப்படாது. ஆயினும், ஐதராபாத் போக்குவரத்து காவல்துறை புதிய சட்டத்தின் விதிகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறது.

மேற்கு வங்கம்: மேற்குவங்க அரசு, அம்மாநிலத்தில் புதிய மோட்டார் வாகன சட்டப்படி, அபராதங்களை அமல்படுத்தவில்லை. இருந்தும், இதுகுறித்து அதிகாரிகள் மட்டத்தில் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.

கேரளா: கேரளாவில், தற்போது ஓணம் பண்டிகை நடைபெற்று வருவதால், போக்குவரத்து விதிகளை மீறியதற்காக கேரள அரசு வாகன ஓட்டிகளிடம் மென்மையாக நடந்து கொள்வதாக கூறப்படுகிறது. இருந்தும், புதிய மோட்டார் வாகன சட்டம், இங்கு அமல்படுத்தப்படவில்லை. இதுகுறித்து, மாநில சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதாலா கூறுைகயில், ‘‘பாஜ தலைமையிலான அரசாங்கம், ஒருதலைப்பட்சமாக மாநில அரசுகளுடன் கலந்தாலோசிக்காமல், பெரும் அபராதம் விதிக்கும் வகையில் சட்டம் கொண்டு வந்துள்ளது’’ என்றார்.

டெல்லி: ‘‘புதிய மோட்டார் வாகனச் சட்டத்தை அமல்படுத்துவதில் எங்களுக்கு எந்தவிதமான விருப்பமும் இல்லை’’ என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார். ஆனால், மற்ற மாநிலங்கள் அமல்படுத்தும் முறையை ஆய்வு செய்து வருவதாக தெரிவித்தார்.

கர்நாடகா: கர்நாடகாவில் புதிய மோட்டார் வாகன சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், கர்நாடக மாநில முன்னாள் அமைச்சரும், மங்களூரு எம்எல்ஏவுமான யு.டி.கடார் கூறுகையில், ‘‘புதிய மோட்டார் வாகன சட்டத்தை அமல்படுத்துவதை தற்காலிகமாக நிறுத்த வேண்டும். 6 மாத காலங்கள் அவகாசம் வேண்டும். வாகன ஓட்டிகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.

ஆனால், தமிழக அரசு மவுனத்தால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

Leave a Response