புதிய மோட்டார் வாகனச் சட்டம் தொடர்பாக நிதின்கட்கரி புதிய அறிவிப்பு

புதிய மோட்டார் வாகனச் சட்டம் கடந்த 1 ஆம் தேதி முதல் நாட்டின் பல்வேறு பகுதிகளில் அமலுக்கு வந்துள்ளது. இந்தப் புதிய சட்டத்தின் கீழ் டெல்லியில் மட்டும் 3,900 பேர் முதல் நாளிலேயே அபராதம் செலுத்தி இருந்தனர்.

இந்த அபராத உயர்வுக்கு வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தி ஏற்பட்டு உள்ளது. இந்த அபராதத்தை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் மத்திய- மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

அதுமட்டுமின்றி, புதிய மோட்டார் வாகனச் சட்டத்துக்கு கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மேலும் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், பஞ்சாப் போன்ற மாநிலங்கள் இந்தச் சட்டத்தை இன்னும் அமல்படுத்தவில்லை.

இந்தச் சட்டத்தை அமல்படுத்தமாட்டோம் என்று மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்து உள்ளார்.

இது ஒருபுறமிருக்க புதிய மோட்டார் வாகனச் சட்ட நடவடிக்கைகளில் இருந்து வாகன ஓட்டிகளைப் பாதுகாக்கும் வகையில் குஜராத் மற்றும் ஒடிசா மாநில அரசுகள் சில நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளன.

இந்த புதிய சட்டத்தை அமல்படுத்துவதை 3 மாதங்கள் தள்ளிவைத்துள்ள ஒடிசா அரசு, அதற்குள் வாகன ஓட்டிகள் புதிய சட்டத்தை ஏற்றுக்கொள்ளும் வகையில் தங்களை தயார்படுத்திக்கொள்ளுமாறு கடந்த வாரம் அறிவித்தது.

இதைப்போல புதிய சட்டத்தின் கீழ் விதிக்கப்படும் அபராதத்தை மாற்றியமைத்து குஜராத் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த அபராத தொகை குறைக்கப்படும் எனவும், அது பற்றிய விவரங்கள் வருகிற 16 ஆம் தேதி அறிவிக்கப்படும் எனவும் முதல்வர் விஜய் ரூபானி நேற்று முன்தினம் தெரிவித்தார்.

இந்த மாநிலங்களின் முடிவை மத்திய அரசும் ஏற்றுக்கொண்டு உள்ளது. இதைப்போல பிற மாநிலங்களும் தேவைப்பட்டால் போக்குவரத்து விதிமீறல் அபராதங்களை குறைத்துக்கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்து உள்ளது.

இது தொடர்பாக மத்திய நெடுஞ்சாலை மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி நேற்று டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது….

வாகன ஓட்டிகளிடம் அபராதத்தை பெற்று கஜானாவை நிரப்ப வேண்டும் என்பது அரசின் நோக்கமல்ல. இது ஒரு வருவாய் திட்டம் அல்ல. சாலை போக்குவரத்தைப் பாதுகாப்பானதாக மாற்றவும், விபத்துகளைக் குறைக்கவுமே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

மக்களின் உயிரை விட அபராதம்தான் முக்கியமா? 1½ லட்சம் பேரின் உயிரிழப்பை பற்றி நீங்கள் கவலைப்படவில்லையா? நீங்கள் விதிமீறலில் ஈடுபடாவிட்டால், அபராதம் செலுத்த தேவையில்லை.

எப்படியிருந்தாலும், இந்த அபராதம் குறித்து மாநில அரசுகளே மறு ஆய்வு செய்து கொள்ளலாம். அபராதத்தைக் குறைக்க வேண்டும் என மாநில அரசுகள் விரும்பினால், அதை மாநிலங்களே குறைத்துக்கொள்ளலாம். ஆனால் மக்களின் உயிர் காக்கப்பட வேண்டும்.

அபராத தொகையை மாநில அரசுகள் குறைக்க விரும்புவதால், மக்கள் இந்த சட்டத்தை அங்கீகரிக்கவில்லை என்றோ, சட்டத்தை மதிக்கவில்லை என்றோ பொருளல்ல.

இவ்வாறு நிதின் கட்காரி தெரிவித்தார்.

Leave a Response