இரவோடிரவாக புதிய அம்பேத்கர் சிலையை நிறுவியது அரசு

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள ராஜாளிக்காட்டில் இருந்து ஜீப்பில் ஒருவர் நேற்று மாலை வேதாரண்யத்துக்கு வந்தார். வேதாரண்யம் காவல் நிலையம் எதிரே வந்தபோது ராமகிருஷ்ணாபுரத்தை சேர்ந்த ராமச்சந்திரன் (வயது24) என்பவர் மீது ஜீப் மோதியதாகக் கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த அவர் நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த விபத்து காரணமாக இரு தரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டது. காவல் நிலையம் எதிரே நின்று கொண்டிருந்த அந்த ஜீப்புக்கு திடீரென தீ வைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடையே மோதல் வலுத்து, வன்முறையாக வெடித்தது.

வன்முறையில் ஈடுபட்டவர்கள் அதே பகுதியில் உள்ள அம்பேத்கர் சிலையையும் உடைத்தனர். தொடர்ந்து காவல் நிலையம் மீதும் காவல் துறையினர் மீதும் கற்கள் வீசப்பட்டன. வன்முறையின்போது வீசப்பட்ட ஏராளமான கற்கள், வாகனத்தின் நொறுங்கிய கண்ணாடிகள் சிதறிக் கிடந்ததால் வேதாரண்யம் காவல் நிலையம் அமைந்துள்ள பகுதி போர்க்களம் போல் காட்சி அளித்தது.

காவல் நிலையத்தில் 3 காவலர்கள் மட்டுமே இருந்ததால் அவர்களால் இந்தத் தாக்குதலைத் தடுக்க முடியவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தால், வேதாரண்யத்தில் மட்டுமின்றி தமிழகமெங்கும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. அம்பேத்கர் சிலை உடைப்புக்கு அரசியல் தலைவர்கள் சமூக ஆர்வலர்கள் உட்பட ஏராளமானோர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இடிக்கப்பட்ட அம்பேத்கர் சிலைக்குப் பதிலாக புதிய சிலை இரவோடிரவாக நிறுவப்பட்டது. தமிழக அரசு சார்பில் புதிய சிலை வைக்கப்பட்டுள்ளது.

இதனால் தமிழகத்தில் பதற்றம் தணியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Response