முழுமையாக வெற்றி பெற்ற இந்திய அணி – ரசிகர்கள் மகிழ்ச்சி

இந்தியா – மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் இடையிலான 3 ஆவது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கயானாவில் நேற்று நடந்தது.

இந்திய அணியில் ரோகித் சர்மா, ரவீந்திர ஜடேஜாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. கலீல் அகமது நீக்கப்பட்டார். அவர்களுக்கு பதிலாக லோகேஷ் ராகுல், சகோதரர்கள் தீபக் சாஹர், ராகுல் சாஹர் சேர்க்கப்பட்டனர். இதில் சுழற்பந்து வீச்சாளரான 20 வயதான ராஜஸ்தானைச் சேர்ந்த ராகுல் சாஹருக்கு இதுவே முதல் சர்வதேச போட்டியாகும்.

மழை மற்றும் ஆடுகளம் ஈரப்பதம் காரணமாக ஆட்டம் தொடங்குவதில் 1 மணி 10 நிமிடங்கள் தாமதம் ஏற்பட்டது. தொடர்ந்து 3 முறையாக ‘டாஸ்’ வென்ற இந்திய அணித்தலைவர் விராட் கோலி முதலில் வெஸ்ட் இண்டீசை பேட் செய்ய பணித்தார்.

முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீசுக்கு அடுத்தடுத்து பேரிடி விழுந்தது. சுனில் நரின் (2 ரன்), இவின் லீவிஸ் (10 ரன்), ஹெட்மயர் (1 ரன்) ஆகிய 3 பேரின் விக்கெட்டுகளையும் வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் ‘ஸ்விங்’ தாக்குதல் மூலம் மிரட்டினார். 14 ரன்னுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து பரிதவித்த நிலையில் கீரன் பொல்லார்ட்டும், விக்கெட் கீப்பர் நிகோலஸ் பூரனும் கைகோர்த்து சரிவைத் தடுத்து நிறுத்தினர். பொல்லார்ட் அவ்வப்போது பந்தை சிக்சருக்கு அனுப்பி உள்ளூர் ரசிகர்களுக்கு விருந்து படைத்தார்.

ஸ்கோர் 80 ரன்களாக உயர்ந்த போது பூரன் 17 ரன்களில் கேட்ச் ஆனார். அரைசதம் விரட்டிய பொல்லார்ட் 58 ரன்களில் (45 பந்து, ஒரு பவுண்டரி, 6 சிக்சர்) நவ்தீப் சைனியின் பந்து வீச்சில் கிளன் போல்டு ஆனார். கடைசி கட்டத்தில் ரோவ்மன் பவெல் (32 ரன், 20 பந்து, ஒரு பவுண்டரி, 2 சிக்சர்) அந்த அணியின் ஸ்கோரை ஓரளவு உயர்த்தினார்.

20 ஓவர் முடிவில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 6 விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் சேர்த்தது. இந்திய தரப்பில் தீபக் சாஹர் 3 ஓவர்களில் ஒரு மெய்டனுடன் 4 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். நவ்தீப் சைனி 2 விக்கெட்டுகளும், அறிமுக வீரர் ராகுல் சாஹர் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்.

தொடர்ந்து ஆடிய இந்திய அணி 19.1 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 150 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தவான் 3 ரன்னிலும், லோகேஷ் ராகுல் 20 ரன்னிலும், விராட் கோலி 59 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். விக்கெட் கீப்பர் ரிஷாப் பண்ட் 65 ரன்களுடன் (42 பந்து, 4 பவுண்டரி, 4 சிக்சர்) களத்தில் இருந்தார். சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த இந்திய விக்கெட் கீப்பர் என்ற சிறப்பையும் பண்ட் பெற்றார்.

வெற்றியின் மூலம் இந்திய அணி 20 ஓவர் தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக சொந்தமாக்கியது. இதனால் மட்டைப்பந்து ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அடுத்து இவ்விரு அணிகள் இடையே 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நடத்தப்படுகிறது. முதலாவது ஆட்டம் இதே மைதானத்தில் நாளை நடக்கிறது.

Leave a Response