சுஷ்மா சுவராஜ் திடீர் மறைவு – 7 மணிக்கு காஷ்மீர் பற்றி ட்வீட் போட்டவர் 11 மணிக்கு மறைந்தார்

பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவராகவும், பெண் தலைவர்களில் முதன்மையானவராகவும் இருந்தவர் சுஷ்மா சுவராஜ்.

மோடியின் கடந்த ஆட்சியில் வெளியுறவுத்துறை அமைச்சராக பதவி வகித்தார்.

67 வயதான அவர், நீண்ட நாட்களாக சிறுநீரகக் கோளாரால் அவதிப்பட்டு வந்தார். உடல்நலக் குறைவு காரணமாக கடந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிடாமல், தீவிர அரசியலில் இருந்து விலகி, ஓய்வெடுத்து வந்தார்.

இந்நிலையில், நேற்றிரவு அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் உடனடியாக எய்ம்ஸ் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

1953 பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி பிறந்தார் சுஷ்மா சுவராஜ். இவர் உச்சநீதிமன்ற வழக்கறிஞராகப் பணியாற்றியுள்ளார். 25 வயதில் ஹரியானா மாநில அமைச்சராக பதவியேற்ற இவர், இளம் வயது அமைச்சர் என்ற பெருமையைப் பெற்றவர்.

1998-ஆம் ஆண்டு அக்டோபர் 13-ஆம் தேதி முதல் டிசம்பர் 3-ஆம் தேதி வரை டெல்லி மாநில முதலமைச்சராகவும் பதவி வகித்துள்ளார்.

வாஜ்பாய் தலைமையிலான மத்திய அரசில், நாடாளுமன்ற விவகாரம், சுகாதாரம் மற்றும் தகவல் தொடர்புத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்துள்ளார்.

தொடர்ந்து 7 முறை மக்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட இவர், 15-வது மக்களவையின் எதிர்க்கட்சி தலைவராக இருந்தார். முன்னாள் பிரதமர் இந்திரா காந்திக்கு பிறகு, வெளியுறவுத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்த 2-வது பெண் என்ற பெருமையும் இவரையே சார்ந்ததாகும்.

வெளியுறவுத்துறை அமைச்சராக சுஷ்மா சுவராஜ் பதவி வகித்த போது, ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்கள் வாயிலாக வரும், புகார்கள் மீதும், கோரிக்கைகள் மீதும், உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து பலரின் பாராட்டைப் பெற்றார்.

சமூக வலைத்தளங்களில் துடிப்புடன் இயங்கிய இவர் தனது ட்விட்டரில் கடைசியாக பதிவிட்டிருந்தது காஷ்மீர் விவகாரம் குறித்துதான்.நேற்று மாலை 7 மணியளவில், பிரதமர் மோடிக்கு நன்றி எனவும், இந்த நாளுக்காகத் தான் காத்திருந்தேன் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக இரவு பதினொன்றரை மணியளவில் அவர் உயிரிழந்தார் என்று சொல்லப்படுகிறது.

Leave a Response