காஃபி டே அதிபர் மரணத்தில் மர்மம் -காவல் ஆணையர் கருத்தால் பரபரப்பு

கர்நாடக முன்னாள் முதல்வரும், பா.ஜனதா கட்சியின் மூத்த தலைவருமான எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகன் சித்தார்த்(வயது 60). சிக்கமகளூருவை சேர்ந்த தொழில் அதிபரான இவர் உலகம் முழுவதும் ‘காபி டே’ எனும் பிரபலமான தேநீர் விடுதிகளும், தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்பட ஏராளமான நிறுவனங்களும் நடத்தி வந்தவர்.

இவர் ஜூலை 29 ஆம் தேதி மகிழுந்தில் தனது ஓட்டுநர் பசவராஜுடன், மங்களூருவுக்கு சென்றார். மங்களூரு அருகே ஓடும் நேத்ராவதி ஆற்றுப்பாலத்தில் வண்டி சென்றபோது அதை நிறுத்தி இறங்கிச் சென்ற சித்தார்த் அதன் பின்னர் திரும்பி வரவில்லை.

அவர் ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார் என்று கூறப்பட்டது.ஜூலை 31 ஆம் தேதி அதிகாலை 6 மணியளவில் மங்களூரு அருகே ஒய்கை பஜார் பகுதியில் ஓடும் நேத்ராவதி ஆற்றில் சித்தார்த் பிணமாகக் கரை ஒதுங்கினார். இதனைப் பார்த்த மீனவர்கள் கங்கனாடி காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து அங்கு மீட்பு குழுவினருடன் விரைந்து சென்று சித்தார்த்தின் உடலை மீட்டு கரைக்குக் கொண்டு வந்தனர். அதாவது 36 மணி நேர தேடலுக்கு பிறகு சித்தார்த் பிணமாக மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அன்றே, சித்தார்த்தின் உடல் ஆம்புலன்ஸ் மூலம் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, சட்டனஹள்ளி அருகே சேதனஹள்ளி கிராமத்தில் அமைந்திருக்கும் அவருக்கு சொந்தமான காபி தோட்டத்தில் இறுதிச்சடங்குகள் நடத்தப்பட்டு தகனம் செய்யப்பட்டது.

இந்நிலையில்,சித்தார்த் உண்மையாகவே தற்கொலை தான் செய்து கொண்டாரா? என்று உறுதிபட நம்ப முடியவில்லை என மங்களூரு மாநகர காவல் ஆணையர் சந்தீப் பட்டீல் கூறினார்.

தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு மாநகர காவல் ஆணையராகப் பணியாற்றி வந்தவர் சந்தீப் பட்டீல். இவர் தற்போது பெங்களூரு மாநகர இணை ஆணையராகப் பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் நேற்று காலையில் மங்களூருவில் சந்தீப் பட்டீல் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

‘கபே காபி டே’ அதிபர் சித்தார்த் மங்களூரு அருகே நேத்ராவதி ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. தற்போது இச்சம்பவம் குறித்து கங்கனாடி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

மேலும் இவ்வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வழக்கில் சில மர்ம முடிச்சுகள் உள்ளன. அதனால் இவ்வழக்கின் விசாரணையை 3 நாட்களுக்குள் முடிக்கும்படி தனிப்படையினருக்கு உத்தரவிட்டுள்ளேன்.

தனிப்படைகளில் 2 குழுக்கள் சித்தார்த்தின் சாவு குறித்து விசாரித்து வருகிறார்கள். ஒரு குழு பெங்களூருவுக்கு சென்று சித்தார்த்தின் குடும்பத்தினரிடமும், அவருடன் தொடர்பு வைத்துள்ள தொழில் அதிபர்களிடமும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஒரு குழு சைபர் கிரைம் போலீசாருடன் இணைந்து தொழில்நுட்ப ரீதியாக விசாரணை நடத்தி வருகிறார்கள். சித்தார்த் எழுதியதாக கூறப்படும் ஒரு கடிதம் தற்போது வேகமாக பரவி வருகிறது. அந்த கடிதம் அவர் மங்களூருவுக்கு வருவதற்கு முன்னதாகவே பரவ ஆரம்பித்து இருக்கிறது. அது எப்படி என்று விசாரித்து வருகிறோம்.

மேலும் அந்தக் கடிதத்தில் உள்ள சித்தார்த்தின் கையெழுத்துக்கும், வருமான வரித்துறை அலுவலகத்தில் உள்ள ஆவணங்களில் இடம்பெற்றிருக்கும் சித்தார்த்துடைய கையெழுத்துக்கும் முரண்பாடு உள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதனால் அந்த கடிதத்தின் உண்மைத்தன்மை குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் இதுவரையில் இதுபற்றிய விசாரணைக்கு ஆஜராகும்படி வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு நோட்டீசு அனுப்பப்படவில்லை.

சித்தார்த்தின் நிதி ஆலோசகர்களிடம் இருந்து முக்கிய தகவல்களை கேட்டு பெற்றுள்ளோம். அவருடைய முக்கிய நிதி ஆலோசகர் வெளிநாட்டில் இருக்கிறார். அவர் இந்தியா வந்தவுடன், அவரிடமும் விசாரணை நடத்தி முக்கிய தகவல்களை பெறுவோம். சில நிதி ஆலோசகர்களிடம் இன்னும் இவ்வழக்கு தொடர்பான விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்கும்படி கேட்டிருக் கிறோம்.

பெங்களூரு மாநகர தெற்குப்பகுதி போலீஸ் உதவி கமிஷனர் கோதண்டராமா தலைமையில் ஊழல் தடுப்பு படை போலீசாரும் சித்தார்த்தின் குடும்ப உறுப்பினர்கள், அவருக்கு வியாபார ரீதியிலும், நட்பு ரீதியிலும் நெருக்கமானவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். குறிப்பாக சம்பவம் நடந்த அன்று மங்களூரு அருகே பிரகமரகூட்லு டோல்கேட் பகுதியில் இருந்து பம்ப்வெல் பகுதி வரையில் உள்ள சித்தார்த்தின் நடமாட்டங்கள் குறித்தும், நேத்ராவதி ஆற்றுப்பாலத்தில் சித்தார்த்தின் கடைசி கட்ட நிமிடங்கள் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி தகவல்களை சேகரித்து வருகிறோம்.

சித்தார்த்தின் உடல், வென்லாக் மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பிரேத பரிசோதனை அறிக்கையை 30 நாட்களுக்குள் சமர்ப்பிப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. ஆனால் அதற்கு முன்பாகவே பிரேத பரிசோதனை அறிக்கையை சமர்ப்பிக்கும்படி கேட்டுள்ளோம்.

இதுவரையில் நடந்த விசாரணையிலும், சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையிலும் சித்தார்த்தின் வழக்கு தற்கொலை என்று நம்பப்படுகிறது. இன்னும் நிறைய கேள்விகளுக்கான பதில்கள் கிடைக்கவில்லை. குறிப்பாக சித்தார்த் அணிந்திருந்த ‘டி-சர்ட்’ அவருடைய உடலில் இல்லை. ஒருவேளை அவர் ஆற்றில் குதித்தபோது அதை கழற்றிவிட்டு குதித்திருக்கலாம். இல்லையெனில் அது ஆற்றில் இருந்து பின்னர் கிடைக்கலாம்.

அந்த ‘டி-சர்ட்’ அவருடைய உடலில் இல்லாததால், அவர் உண்மையாகவே ஆற்றில் குதித்து தற்கொலை தான் செய்து கொண்டாரா? என்பதை உறுதிபட நம்பமுடியவில்லை.

இவ்வாறு சந்தீப் பட்டீல் கூறினார்.

சித்தார்த் தற்கொலை செய்துகொண்டார் என்பதில் சந்தேகம் எனும் சந்தீப் பட்டீலின் இந்தப் பேட்டியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Response