இன்று ஆடி 18 – காவிரிக் கரைகளில் மக்கள் கொண்டாட்டம்

இன்று ஆடி 18, ஆடிப்பெருக்கு என்றும் சொல்வார்கள்.இது ஆடி மாதம் 18ஆம் நாள் தமிழக ஆறுகள் பெருக்கெடுத்து ஓடுவதைக் குறிக்கும்.

ஆடிப்பெருக்கினை பதினெட்டாம் பெருக்கு என்றும், ஆடிப்பதினெட்டு என்றும் அழைக்கின்றனர். தமிழர்களின் முதன்மை விழாவான பொங்கல், நாள் எண்ணிக்கை அடிப்படையில் தை முதல் நாளில் வருகிறது. அது போலவே ஆடிப் பெருக்கும் ஆடி மாதத்தில் 18 ஆவது நாள் என்று நாளின் எண்ணிக்கையை கணக்கில் கொண்டு நடத்தப்படும் விழாவாக இருக்கிறது.

தென்மேற்குப் பருவத்தில் ஆற்றின் நீர்பிடி இடங்களில் பெய்த மழையினால் ஆறுகளில் புதுப்புனல் பொங்கிவரும். இதனையே ஆற்றுப்பெருக்கு எனக்கூறுவர். இதனால் உழவர்கள் இந்நாளில் நம்பிக்கையுடன் பட்டம் பார்த்து விதை விதைப்பர். இப்பொழுது நெல், கரும்பு முதலியவற்றை விதைத்தால் தான் அவர்கள் தை மாதத்தில் அறுவடை செய்ய முடியும். அதற்கு வற்றா நதிகளை தங்கள் தெய்வமாகப் போற்றி மகிழ்ந்து, பூசைகள் செய்து பின் உழவு வேலையை தொடங்குவார்கள். இதனையொட்டியே ஆடிப்பட்டம் தேடிவிதை என்ற பழமொழியும் விளைந்தது.

இந்நாளில், மக்கள் ஆற்றங்கரைகளில் கூடி ஆற்றுப் பெருக்கைக் கண்டு களிப்பர். கோயில்களில் சென்று வழிபடவும் செய்வர். அன்றைய நாள் பெண்கள் ஆற்றில் குளித்து ஆற்றங்கரையில் ஒவ்வொருவரும் பூஜை செய்ய ஒரு இடத்தைப் பிடித்து அந்த இடத்தைச் சுத்தம் செய்து,மாட்டு சாணத்தால் மெழுகி அதன் மேல் வாழை இலையை விரித்து அகல்விளக்கு ஏற்றி வைக்கின்றனர். வழிபாட்டில் வெற்றிலை, பாக்கு, பழம் படைத்து, பத்தி, கற்பூரம் காட்டி, தடங்கல் இல்லாத விளைச்சலுக்கு நீருக்கு நன்றி செலுத்தி வாழை மட்டையில் விளக்குகள் ஏற்றி, அதை ஆற்றில் விடுவார்கள்.

அது மட்டும் அல்லாமல் தங்கள் வீட்டில் பல விதமான கலப்பு சாதங்கள் (தேங்காய் சாதம், சர்க்கரைப் பொங்கல், எலுமிச்சம் பழம் சாதம், தக்காளி சாதம், தயிர் சாதம்) செய்து அதை ஏதாவது ஆற்றங்கறையில் வைத்து குடும்பத்துடனும், நண்பர்களுடனும் சேர்ந்து குதூகலமாக உணவை சாப்பிடுவார்கள்.

தமிழகத்தின் காவிரிக் கரையில் உள்ள ஊர்களில் இவ்விழா மிகவும் புகழ்பெற்றது.

தமிழகத்தின் ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி முதலாக காவிரி சங்கமிக்கும் பூம்புகார் நகரம் வரை இவ்விழா வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

மேட்டூர் அணை,பவானி கூடுதுறை,ஈரோடு,பரமத்தி-வேலூர்,
குளித்தலை,திருச்சி,தஞ்சாவூர்,மயிலாடுதுறை,பூம்புகார்
சீரங்கத்தில் புகழ்பெற்ற அம்மா மண்டபம் படித்துறையில் காவிரிக்கு சீர்கொடுக்கும் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடக்கும்.

நாமக்கல் மற்றும் சேலம் மாவட்டத்தில் ஆடிப்பெருக்கு நாளில் கொல்லிமலை சென்று அங்குள்ள ஆகாயகங்கை நீர்வீழ்ச்சியில் நீராடுவது வழக்கம்.

பழங்காலம் போல் தற்போது எல்லா ஆறுகளிலும் நீர் பெருக்கெடுத்து ஓடுவது இல்லை என்றாலும், இந்நாளில் காவிரி போன்ற சில ஆறுகளில் மட்டுமாவது அணைகளைத் திறந்து விட்டு நீர் பெருக்கெடுத்து ஓடச் செய்கின்றனர்.

இவ்வாண்டு காவிரியில் ஓரளவு தண்ணீர் இருப்பதால் மக்கள் மகிழ்ச்சியுடன் ஆடி 18 ஐ கொண்டாடிவருகின்றனர்.

Leave a Response