முகிலன் வழக்கு – நீதிமன்றத்தில் என்ன நடந்தது?

தோழர் முகிலனைக் கண்டறிந்து தரக்கோரி வழக்குரைஞர் ஹென்றி திபேன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடுத்திருந்த ஆட்கொணர்வு மனு 04.03.2019, அன்று விசாரணைக்கு வந்திருந்தது.

நீதிமன்றத்தில் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை 75. அதில் தோழர் முகிலன் சம்பந்தமான ஆட்கொணர்வு மனு 53 ஆவது வழக்காகும்.

எப்படியாவது தோழர் முகிலனை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவார்கள் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் சிபி.சி.ஐ.டி போலீசார், துணை கண்காணிப்பாளர் தலைமையில் மூன்று ஆய்வாளர்கள் மட்டுமே நீதிமன்றத்திற்கு வந்திருந்தார்கள்.

மாலை 5.00 மணியளவில் 50 ஆவது வழக்கு விசாரணை முடிந்ததும் நீதிபதிகள் இன்றைய விசாரணை முடிந்தது மற்ற வழக்குகள் நாளை விசாரிக்கப்படும் என அறிவித்தார்கள்.

அப்போது மூத்த வழக்குரைஞர் சுதா இராமலிங்கம் எழுந்து ‘முகிலன் வழக்கை விசாரிக்க வேண்டும்’ என கோரிக்கை வைத்தார். அதற்கு ‘நாளை விசாரிக்கலாம்’ என்றார். ‘இல்லை, அவசரம்’ என மீண்டும் சத்தமாகக் குரல் எழுப்பினார்.

அதன் பின்பு நீதிபதிகள், சி.பி.சி.ஐ.டி போலீசாரை கூப்பிட்டு ‘உங்கள் பதில் என்ன’ என்று கேட்டார்கள். அதற்கு அரசு தரப்பு வழக்குரைஞர் எழுந்து ‘இதுவரை சி.பி.சி.ஐ.டி போலீசார் 150 நபர்களை விசாரித்து உள்ளார்கள்’ என்றார்.

உடனே நீதிபதி ஒருவர் மூத்த வழக்குறைஞர் சுதா இராமலிங்கத்தை பார்த்து ‘முகிலன் வழக்கில் முறையான விசாரணை நடக்கிறதுதானே!’ என கேட்டார்.

மூத்த வழக்குரைஞர் சுதா இராமலிங்கம் கோபமாக ‘சி.பி.சி ஐ.டி போலீசார் என்ன விசாரித்தார்கள் தெரியுமா? விசாரிக்க வேண்டிய இடத்தில் விசாரிக்காமல் எங்கள் தரப்பு ஆட்களையே விசாரித்து வருகிறார்கள். 2.3.2019 அன்று சென்னை சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் மக்கள் கண்காணிப்பகத்தை சார்ந்த ஆசீர்வாதம் என்பவரை மூன்று மணி நேரம் விசாரணை செய்துள்ளார்கள். எப்படி முகிலன் அறிமுகம், முகிலனுக்கு என்ன மாதிரி உதவிகள் செய்வீங்க, உங்களுக்கு எப்படி சம்பளம் வருது, உங்க குடும்ப பின்னனி என்ன, முகிலனுக்கு பர்சனலா எதாவது பிரச்சனை இருக்கா, இந்த ஆட்கொணர்வு வழக்கு தொடுத்த ஹென்றி திபேன் யார், அவருக்கும் முகிலனுக்கும் என்ன தொடர்பு இருக்கு, எத்துனை வருடமா இருக்கு, டிபைன்னு பேரு வச்சுருக்காரே டிபைன் என்றால் என்ன, அவரோட மனைவி உள் நாடா வெளிநாடா, அவருக்கு எத்தனை பிள்ளைங்க – இப்படித்தான் உங்க சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை செய்து வருகி்றார்கள். இப்படி விசாரணை செய்த இன்ஸ்பெக்டர் பெயர் கிருஷ்ணமூர்த்தி’ என்று சொன்னார்.

மேலும் எக்மோர் ரயில்வே ஸ்டேசனில் உள்ள சி.சி டி வி கேமிராவை முழுமையாக போலீஸ் பார்க்கவில்லை. அதனால் நாங்கள் பார்க்க அனுமதிக்க வேண்டும் என்றார். இதற்கு நீதிபதி, ‘நீங்கள் சி.சி.டி.வி காமிரா புட்டேஜை பார்க்க CrPC சட்டத்தில் இடமில்லை’ என்றார்.

அப்போது அரசு வழக்குரைஞர் ‘மேலும் விசாரணை செய்ய இரண்டு வாரம் அவகாசம் வேண்டும்’ என்றார்.

மீண்டும் மூத்த வழக்கறிஞர் சுதா இராமலிங்கம் ‘சோசியல் பார்ட்டி ஆஃப் இந்தியா அமைப்பின் தலைவர் முகமது கவுஸ் என்பவர் தனது பேஸ்புக்கில் ‘முகிலன் எங்கே’ என பதிவிட்டுள்ளார் என்றும் அதற்கு ராஜபாளையத்தை சார்ந்த நாகராஜன் என்ற பெயருடைய காவல் ஆய்வாளர் ‘சமாதி’ என பதில் பதிவிட்டுள்ளார் என்றும் சொன்னார்.

உடனே நீதிபதி அவர்கள் ‘இச்சம்பவம் குறித்து விசாரணை செய்து, வருகின்ற 18.3.2019 அன்று அறிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும்’ என கூறினார். இத்தோடு விசாரணை நிறைவு பெற்றது.

#WhereIsMugilan

– வழக்குரைஞர் சுந்தர்ராஜன்

Leave a Response