உடுமலை கெளசல்யா பணியிடை நீக்கத்துக்குக் காரணம் இதுதான்

காதல் திருமணம் செய்துகொண்ட உடுமலை கௌசல்யாவின் கணவர் சங்கர் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால், கடந்த 2016 ஆம் ஆண்டு கௌசல்யாவின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களால் படுகொலை செய்யப்பட்டார். சங்கர் படுகொலைக்குப் பிறகு, கௌசல்யா ஆவணக் கொலைகளுக்கு எதிராகப் பொது மேடைகளில் பேசிவருகிறார்.

நிமிர்வு கலையகத்தின் பொறுப்பாளர் சக்தி என்பவரை சமீபத்தில் கவுசல்யா மறுமணம் செய்துகொண்டார்.

மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் கண்டோன்மெண்ட் அலுவலகத்தில் இளநிலை உதவியாளராகப் பணியாற்றிவருகிறார்.

இந்நிலையில் குன்னூர் வெலிங்டன் கண்டோன்மென்ட் கிளார்க் பணியிலிருந்து உடுமலை கவுசல்யா பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசிய குற்றச்சாட்டில் கவுசல்யாவை பணியிடை நீக்கம் செய்து நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளதாகச் சொல்லப்படுகிறது.

அதற்குக் காரணம் இதுதான்….

இந்தியராக இருப்பதை எவ்வாறு உணருகிறீர்கள் என்ற கேள்வியை முன்வைத்து இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள பல தரப்பு மக்களிடம் பிபிசி தமிழ் கருத்து கேட்டு வெளியிட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக கடந்த வாரம் பிபிசி தமிழுக்கு கௌசல்யா அளித்த பேட்டியில், “அம்பேத்கர் இந்தியாவை யூனியனாகத்தான் கருதினார். அரசமைப்புச் சட்டத்திலும் அப்படித்தான் சொல்லப்பட்டிருக்கிறது. தேச மொழி என்று ஒன்று இந்தியாவில் இல்லை. பண்பாட்டுத் தளத்திலும் மக்கள் பிரிந்துதான் இருக்கிறார்கள். தமிழ்நாட்டை ஒரு அடிமைப்படுத்தும் மாநிலமாகத்தான் இந்தியா நடத்திவருகிறது. ஸ்டெர்லைட், நியூட்ரினோ, மீத்தேன் திட்டங்களை தமிழ்நாட்டுக்கு எதிராகத்தான் முன்மொழிந்து செயல்படுத்துவதற்கான காரியங்களையும் செய்துகொண்டிருக்கிறார்கள்,” என்று கூறிய கௌசல்யா, மக்கள் இந்தத் திட்டங்களை எதிர்த்துப் போராட்டங்கள் நடத்தினாலும், அரசு இந்தத் திட்டங்களைக் கைவிடவில்லை என்றும், விவசாயிகள் டெல்லிக்கே சென்று போராடியிருந்தாலும் அவர்களது கோரிக்கைகளை செவிமடுத்துக் கேட்கவில்லை என்றும் கூறி அதனால், தாம் இந்தியாவை ஏற்கவில்லை என்று குறிப்பிட்டிருந்தார்.

அவர் கூறிய இந்தக் கருத்துகள் இந்திய இறையாண்மைக்கு எதிராக இருப்பதாகக் கூறி, தேதி குறிப்பிடாமல் அவரைப் பணியிடை நீக்கம் செய்துள்ளதாக வெல்லிங்டன் கண்டோன்மெண்ட் தலைமை நிர்வாக அதிகாரி ஹரிஷ் வர்மா பிபிசி தமிழிடம் தெரிவித்துள்ளார்.

Leave a Response