7 தமிழர் விடுதலை – அமைச்சர் சர்ச்சை கருத்து அற்புதம்மாள் கண்டனம்

மதுரை கோவலன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் அமைக்கப்பட்ட அம்ரூட் பூங்காக்களை அமைச்சர் செல்லூர் ராஜூ பிப்ரவரி 2 ஆம் தேதி திறந்து வைத்தார். பின்னர் ராஜிவ் காந்தி கொலையில் கைதான 7 பேர் விடுதலை குறித்து பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் நடத்தி வரும் கூட்டம் குறித்து கேட்ட கேள்விக்கு அமைச்சர் செல்லூர் ராஜூ,

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் இன்று உயிரோடு வாழ்கிறார்கள் என்றால் அது ஜெயலலிதா போட்ட பிச்சை என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். சட்டமன்றத்தில் தீர்மானம் போட்டு தூக்குத்தண்டனையில் இருந்து அவர்களைக் காப்பாற்றியது ஜெயலலிதா அரசு. எடப்பாடி அரசு பரோலில் வெளியே விட்டது. தமிழக அரசு முழுமையாக கவனம் செலுத்தி நடவடிக்கை எடுத்து வருகிறது. பல்வேறு சட்டச் சிக்கல்கள் குறித்து ஆளுநர் ஆராய்ந்து கொண்டிருக்கிறார். அதை விரைந்து முடிக்க வேண்டும் என்பதுதான் தமிழக அரசின் கருத்து என பதில் அளித்தார்.

அமைச்சரின் இந்தப் பேச்சுக்கு பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள் கண்டனம் தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் மக்களைச் சந்தித்து 7 பேர் விடுதலை குறித்து ஆதரவு கேட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில்,

பேரறிவாளன் உள்பட 7 பேரின் தூக்கு ரத்தானது ஜெயலலிதா போட்ட பிச்சை என அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியது கடும் கண்டனத்திற்குரியது. இதுகுறித்து முதல்வர், சட்டத்துறை அமைச்சரும் தகுந்த விளக்கமளிக்க வேண்டும். தமிழக மக்கள் எங்களுக்காக ஒன்று திரள வேண்டும். விடுதலை தொடர்பாக ஆளுநரைச் சந்தித்துப் பேசவும் உள்ளோம்

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Response