
இந்திய மட்டைப்பந்தாட்ட அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் போட்டித் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது.
இதில் இதுவரை நடந்துள்ள 3 ஆட்டங்களிலும் இந்திய அணி எளிதில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியதோடு 3-0 என்ற கணக்கில் கம்பீரமாக முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 4 ஆவது ஒரு நாள் போட்டி ஹாமில்டனில் இன்று நடைபெற்றது.
பணிச்சுமை காரணமாக இந்திய அணித்தலைவர் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அணியை ரோகித் சர்மா வழிநடத்தினார்.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் தலைவர் கனே வில்லியம்சன், இந்திய அணியை பேட் செய்யுமாறு பணித்தார்.
இதன்படி இந்திய அணி முதலில் பேட் செய்தது. கடந்த போட்டிகளில் முழுமையாக ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி, இன்றைய போட்டியில் நியூசிலாந்து அணியின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறியது.
நியூசிலாந்தின் நேர்த்தியான பந்து வீச்சால், ஷிகர் தவான் (13 ரன்கள்), ரோகித் சர்மா (7 ரன்கள்), அம்பத்தி ராயுடு (0) , தினேஷ் கார்த்திக் (0), சுப்மான் கில் (9 ரன்கள்) என முன்னணி ஆட்டக்காரர்கள் மின்னல் வேகத்தில் திரும்பினர்.
30.5 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த இந்திய அணி 92 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணியில் ஒரு பேட்ஸ்மேன் கூட 30 ரன்களை எட்டவில்லை. இந்திய அணியில் அதிகபட்சமாக சஹால் 18 ரன்கள் எடுத்தார்.
நியூசிலாந்து அணியில் அதிகபட்சமாக பவுல்ட் 21 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை அள்ளினார்.
இதையடுத்து, 93 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் விளையாடிய நியூசிலாந்து அணி 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 14.4 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டியது.
3-0 என்கிற கணக்கில் வெற்றியில் இருந்தாலும் இவ்வளவு மோசமாகவா தோற்றுப்போவது? என்கிற விமர்சனங்கள் இந்திய அணி மீது வந்துகொண்டிருக்கின்றன.


