அம்பேத்கர் பாடல் வைத்திருந்த இளைஞர் படுகொலை, மகாராஷ்டிராவில் அட்டூழியம்.

மகாராஷ்டிர மாநிலத்தில் அம்பேத்கர் பாடலை செல்லிடப்பேசியின் அழைப்போசையாக (ரிங்டோன்) வைத்திருந்த தலித் இளைஞர் படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக, 4 இளைஞர்களை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் 4 பேரைத் தேடி வருகின்றனர்.
இதுகுறித்து காவல் துறையினர் வெள்ளிக்கிழமை
(மே 22 )கூறியதாவது:
அஹமத்நகர் மாவட்டம் ஷீரடியில் கடந்த 16-ஆம் தேதி நடைபெற்ற திருமணத்துக்கு சாகர் சேஜ்வால் (21) என்ற தலித் இளைஞர் வந்திருந்தார்.
பின்னர், தன் மைத்துனர்கள் இருவருடன் இணைந்து அருகில் உள்ள மதுக்கடைக்கு அவர் சென்றுள்ளார். அங்கு அவரது செல்லிடப்பேசிக்கு அழைப்பு வந்தபோது, அம்பேத்கரின் புகழை எடுத்துரைக்கும் பாடல் ஒலித்துள்ளது.
அதைக் கேட்டு, அந்த மதுக்கடையில் இருந்த இளைஞர்கள் சிலர், செல்லிடப்பேசியை அணைக்குமாறு எச்சரித்துள்ளனர். இதனால், இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் மூண்டது. இதையடுத்து, சாகரை அந்த இளைஞர்கள் மது பாட்டிலால் அடித்துள்ளனர்.
பின்னர், வெளியே இழுத்து வந்து அடித்து,இரு சக்கர வாகனத்தின் மூலம் அருகில் உள்ள காட்டுக்கு கடத்திச் சென்றுள்ளனர்.
இந்தச் சூழலில் அந்தக் காட்டில் சாகர் இறந்த நிலையில் கிடப்பதாக தகவல் கிடைத்தது.
அவரது உடலில் தொடர்ச்சியாக இரு சக்கர வாகனத்தை ஏற்றியும், கல்லால் அடித்தும் காயப்படுத்தியதற்கான அடையாளங்கள் உள்ளன.
இந்நிலையில், சம்பந்தப்பட்ட மதுக்கடையின் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தோம். இதன் அடிப்படையில் ஒருவரைக் கைது செய்தோம். பின்னர், கோவாவில் பதுங்கியிருந்த 2 இளைஞர்களும், புணேவில் பதுங்கியிருந்த ஒருவரும் கைது செய்யப்பட்டனர்.
இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய மேலும் 4 பேரை தேடி வருகிறோம் என்று காவல் துறையினர் தெரிவித்தனர்.

Leave a Response