ஒரு வண்டிக் குப்பையை எரிக்க ஒரு தீக்குச்சி போதும்- சீமான் ஆவேசப் பேட்டி.

​​மே-24 நாம் தமிழர் கட்சியின் இன எழுச்சி அரசியல் மாநாடு. ”இதுகாலம் வரை சாதிக்காக, மதத்துக்காக, இந்திய தேசிய அரசியலுக்காக, திராவிட அரசியலுக்காகத் திரண்ட தமிழன், முதன் முறையாகத் தமிழுக்காகவும் தமிழர்க்காகவும் திரள வேண்டிய இன எழுச்சி அரசியல் மாநாடு இது. தமிழ்த் தேசிய எழுச்சியை உலகுக்கு உரைக்கும் நாளாக – தமிழர் மறுமலர்ச்சித் திருவிழாவாக நம்முடைய மாநாடு அமைய வேண்டும். ஆகஸ்ட் 15 இந்திய சுதந்திர நாள், ஜனவரி 26 குடியரசு நாள் என்பதுபோல் 2015 மே 24 -ஐ தமிழர் இன எழுச்சி அரசியல் நாளாக நாட்காட்டியில் குறித்து வைத்துக்கொண்டு, ஒவ்வொரு தமிழ்ப் பிள்ளைகளும் இனத்தின் எழுச்சிக்குப் படை திரட்டி வரவேண்டும்” என அழைக்கிறார் சீமான். மாநாடு வேலைகளில் தீவிரமாக இருந்த சீமானுடன் ஒரு நேர்காணல்.


” உங்களது ஆவேசப் பேச்சுக்கு அச்சாரம் போட்டது யார்?”
”ஆள் பார்த்து பிறந்த பேச்சல்ல இது. நமக்கென ஆள் இல்லையே என்கிற ஆதங்கத்தில் வெடித்த பேச்சு. ஆரம்பத்தில் பெரியாரிய மேடைகளில் சாதாரணனாகத்தான் பேசிக் கொண்டிருந்தேன். ‘நன்றாகப் பேச வரும்’ என்பதுகூட எனக்கு அப்போது தெரியாது. ஈழப் போர் தீவிரமான சூழலில் தத்தளிப்பு அடங்காமல் தாங்கொணா வேதனையோடு ராமேஸ்வரம் கூட்டத்தில் கதறினேன். துண்டிப்பான பல்லியின் வால் துடிப்பதைப்போல் துண்டாடப்பட்ட நம் சொந்தங்களுக்காக என் வாய் துடித்தது. ‘வரலாற்றுச் சிறப்புமிக்க பேச்சு’ என்றார் அய்யா காசி ஆனந்தன். ‘பேசுகிற போது உன்னுடைய உடல்மொழியைக் கவனித்து வியந்து போனேன்’ என்றார் அப்பா பாலு மகேந்திரா. விடுதலைக்காகப் போராடுகிற ஓர் அடிமையின் குரல் ஆவேசம் கொண்டதாகத்தானே இருக்கும். ஈழ சொந்தங்கள் எல்லா விதத்திலும் நாசமாக்கப்பட்ட வேதனை பொறுக்காமல், நமக்கென யாருமில்லையே என்கிற ஆதங்கம் அடங்காமல், அடிக்கிற போது துடிக்கிற புழுவாகவே ஒவ்வொரு மேடைகளிலும் நிற்கிறேன். இழவு வீட்டு ஒப்பாரியாகவே ஒலிக்கிறது எனது குரல்.”
”உங்களுடைய பேச்சில் நீங்கள் தி.மு.க.வை மட்டுமே திட்டுகிறீர்கள். அ.தி.மு.க.வுக்கு எதிராக நீங்கள் பெரும்பாலும் பேசுவதே இல்லையே?”
”என்னுடைய எல்லா பேச்சையும் கேட்டிருந்தால் இப்படியொரு கேள்வியையே கேட்டிருக்க மாட்டீர்கள். அ.தி.மு.க., தி.மு.க. இரண்டுக்குமான மாற்று நாங்கள்தான் எனச் சொல்லும்போதே புரியவில்லையா நாங்கள் அ.தி.மு.க.வையும் எதிர்க்கிறோம் என்று. கொள்கையிலோ கொள்ளையிலோ இந்த இரண்டு கட்சிகளுக்குமே பெரிய வித்தியாசம் இல்லை. குவார்ட்டருக்கும் கோழி பிரியாணிக்கும் வாக்காளர்களை வளைத்து வைத்திருக்கும் இந்தக் கட்சிகளை அடியோடு வீழ்த்துவதே நாம் தமிழர் கட்சியின் இலக்கு. சம தராசாக இருந்தே தத்துவமற்ற இந்த இரண்டு கட்சிகளையுமே நாங்கள் பார்க்கிறோம். அம்மையார் ஜெயலலிதாவைக் காட்டிலும் அய்யா கலைஞரை நான் அதிகம் திட்டுவதாக உங்களுக்குத் தெரியலாம். அதற்குக் காரணம் இந்த அம்மையாரை ஆட்சிக் கட்டிலுக்குக் கொண்டுவந்ததே அய்யா கலைஞரின் கேடுகெட்ட ஆட்சிதானே…”
”திருச்சி மாநாட்டின் நோக்கம் என்ன?”
”தேர்தல் நெருங்கும் வேளையில் கூட்டணி அச்சாரத்துக்காகப் போடப்படும் வழக்கமான மாநாடு அல்ல இது. இன உணர்வும் மான உணர்வும் கொண்ட ஒவ்வொரு தமிழ்ப் பிள்ளைகளும் கூடி நமக்கான மாற்று அரசியலை முன்னெடுக்கிற முடிவு. அடிபட்டும் மிதிபட்டும் கிடந்த தமிழர்கள் தங்களின் வலிமை திரட்டி ‘பகையே வா’ என நெஞ்சு நிமிர்த்தி நிற்க வேண்டிய நேரம் இது. நாம் தமிழர் கட்சி என்பது கட்சியின் பெயர் அல்ல. அது நம் இனத்தின் பெருமைமிக்க அடையாளம் . நம் இனத்தின் எழுச்சிக்கான அரசியலை முன்னெடுக்கும் தமிழ்த் திருவிழாவே திருச்சி மாநாடு.

இதுகாலம் வரை சாதிக்காக, மதத்துக்காக, இந்திய தேசிய அரசியலுக்காக, திராவிட அரசியலுக்காகத் திரண்ட தமிழன், முதன் முறையாகத் தமிழுக்காகவும் தமிழர்க்காகவும் திரள வேண்டிய இன எழுச்சி அரசியல் மாநாடு இது. தமிழ்த் தேசிய எழுச்சியை உலகுக்கு உரைக்கும் நாளாக – தமிழர் மறுமலர்ச்சித் திருவிழாவாக இந்த மாநாடு அமையும். ஆகஸ்ட் 15 இந்திய சுதந்திர நாள், ஜனவரி 26 குடியரசு நாள் என்பதுபோல் 2015 மே 24 -ஐ தமிழர் இன எழுச்சி அரசியல் நாளாக நிச்சயம் இருக்கும்.

சிங்களத் தாண்டவங்கள் மட்டும் அல்லாது அக்கம்பக்க மாநில அதிகார வெறிக்கும் தமிழர்கள் பலியாகும் பரிதாபக் காலம் இது. அடிபட்டே கிடப்பதற்கு நாம் ஒன்றும் அடிமைக்கூட்டம் அல்ல. ஆண்டாண்டு காலமாக பெரு நிலத்தை ஆண்ட தமிழ் மறவர்களின் வம்சாவழிப் பிள்ளைகள். முறிந்து கிடந்த கிளை, நிமிர்ந்து நிற்கும் நேரம் இது!”

”தனித்துப் போட்டி என்பதில் உறுதியாக இருக்கின்றீர்கள். இது எந்த விதத்தில் சாத்தியமாகும்?”
”சாத்தியத்தில் இருந்து எதுவும் பிறப்பதில்லை. தேவையிலிருந்துதான் பிறக்கிறது. ‘தேவைதான் கண்டுபிடிப்புகளின் தாய்’ என்பார்கள். நல்ல மாற்றத்துக்கான தேவை தமிழகத்துக்கு இப்போது அவசியம். தனித்துப் போட்டி என்பது என் விருப்பம் அல்ல. என் நிலத்தின் விருப்பம். சகிக்க முடியாத ஊழலையும், மோசடிகளையும், சமூகக் கேடுகளையும், பாரபட்சங்களையும், தீவினைகளையும் உருவாக்கியதைத் தவிர, தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் எதையும் செய்துவிடவில்லை. கடைந்தெடுத்த அயோக்கியத்தனமான அரசியலைக் காணச் சகிக்காமல் ஒவ்வொரு வாக்காளனும் மனதில் கொந்தளிப்போடு ‘மாற்றம் வராதா’ என ஏங்கி அலைகிறான். கலைஞரையும் ஜெயலலிதாவையும் விட்டால் வேறு வழியில்லை என்பது தமிழகத்துக்கு எவ்வளவு பெரிய அவமானம்? தனித்துப் போட்டியிட்டால் பரப்புரை தொடங்கி தேர்தல் முடிவு வரை எத்தகைய இக்கட்டுகளுக்கெல்லாம் நாம் ஆளாகுவோம் என்பது எனக்கும் தெரியும். தற்காலிகத் தோல்விக்கும் பயந்தால் நிரந்தர வெற்றியை என்னால் நினைத்துக்கூடப் பார்க்க முடியாது. நாலைந்து சீட்டுக்காக கூட்டு வைக்கிற குறுகிய கொள்கை கொண்டவர்கள் நாங்கள் அல்ல. பத்து வாக்கு வாங்கினாலும் ஒரு தமிழனுக்குத் தமிழ்ப் பிள்ளைகள் அளித்த வாக்கு அது. ஆட்சி மாற்றத்தை எதிர்பார்த்து நாங்கள் அரசியலுக்கு வரவில்லை. எங்களுக்குத் தேவை அரசியல் மாற்றம். தொடக்கத்திலேயே வெற்றியைக் கண்டுவிட வேண்டும் எனத் துடிப்பவர்கள் அல்ல நாங்கள். தனித்து நின்று தோற்கத் தயார், ஆனால் தரம் கெட்ட ஆட்சிகளை ஏற்கத் தயார் இல்லை. ஒரு வண்டி குப்பையை எரிக்க ஒரு வண்டி தீக்குச்சிகள் தேவை இல்லை. ஒரு தீக்குச்சி போதும்.

Leave a Response