
‘உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு’ என வாழ்ந்த அய்யா சி.பா.ஆதித்தனார் அவர்களின் 34-வது நினைவு நாளில் அவருடைய கனவை நனவாக்க உள உறுதியேற்றும் வீர வணக்கம் செலுத்தியும் நாம் தமிழர் கட்சி அறிக்கை வெளியிட்டிருக்கிறது. அதில் சீமான் கூறியிருப்பதாவது:
‘தமிழப் பேரரசு’ என்கிற பெருங்கனவு கண்ட பெருமகன் தமிழர் தந்தை அய்யா சி.பா.ஆதித்தனார் அவர்களின் தமிழுணர்வும் அளவிட முடியாத் தமிழ்த் தொண்டும் ஒவ்வொரு தமிழர்களின் இதயத்திலும் அசைக்க முடியாத ஆணி வேராக நிலைத்திருக்கிறது. தனித் தமிழ்த் தேசம் காணவும், தமிழர் தம் வீரக்கலைகளான கபடி, சிலம்பம் உள்ளிட்டவற்றை அடுத்தடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லவும், அன்றாட அரசியல் தெளிவைக் கடைக்கோடி மக்கள் வரை கொண்டு செல்லவும் அய்யா ஆதித்தனார் அவர்கள் எடுத்த முயற்சிகளும் போராட்டங்களும் மிக அதிகம்.
இங்கிலாந்தில் அய்யா அவர்கள் படித்தபோது அங்கே அயர்லாந்து மக்கள் ‘சின்பைன்’ என்கிற பெயரில் சுதந்திரம் கேட்டு போராடியிருக்கிறார்கள். ஐந்து லட்சம் மக்களே கொண்ட அந்த நாடே தனிநாடாகத் தன்னை அறிவிக்கக் கோரி போராடுகையில், ஐந்து கோடிக்கும் அதிகமாக வாழும் தமிழ் மக்களுக்கென தனி நாடு இல்லாமல் போய்விட்டதே என்கிற வேதனையில் தமிழகத்துக்கு வந்து அதற்கான முயற்சிகளை மிகத் தீவிரமாக்கினார். அயர்லாந்து மக்களின் விடுதலைக்காக அங்கே தொடங்கப்பட்ட ‘டெய்லி மிரர்’ பத்திரிகையைப் போல் தமிழ்நாட்டில் ‘தினத்தந்தி’ பத்திரிகையை அய்யா அவர்கள் தொடங்கினார். பாமரத் தமிழனுக்கும் நாட்டு நடப்புகள் புரியும் விதமாக எளிய தமிழில் பத்திரிகையைப் பிரசுரித்துப் பெரும்பணியாற்றினார். கடைக்கோடி தமிழனுக்கும் அன்றாட நடப்புகளும் அரசியல் நிகழ்வுகளும் புரிகிறதென்றால், அதற்கு அய்யா அவர்கள் கொண்டுவந்த தினத்தந்தி பத்திரிகையே காரணம்.
தமிழ்நாடு, ஈழம் உள்ளிட்ட பகுதிகளை இணைத்து தமிழர் பேரரசு நிறுவும் கனவோடு ‘நாம் தமிழர்’ கட்சியையும் அய்யா அவர்கள் தொடங்கினார்கள். ஈழ விடுதலைக்கு ஆதரவு கேட்டு ஈழத்தந்தை செல்வா அவர்கள் தமிழ்நாட்டுக்கு வந்தபோது முதல் ஆளாக அவருக்கு ஆதரவு கரம் நீட்டியவர் அய்யா ஆதித்தனார் அவர்கள்தான். தமிழர் முன்னேற்றத்திலும் சிறப்பிலும் அவர்கள் தனித்த தேசத்தவர்களாக அடையாளம் பெறுவதிலும் அய்யா அவர்கள் காட்டிய அக்கறையும் போராட்டமும் மகத்தானது. ஒரு கட்டத்தில் நாம் தமிழர் கட்சியை தொடர்ந்து நடத்த முடியாத நிலை வந்தபோது, ‘வழிவழியே வருகிற வீரத் தமிழ்ப் பிள்ளைகள் நாம் தமிழர் கட்சியைத் தொடர்ந்து நடத்துவார்கள்’ எனச் சொன்னார் அய்யா ஆதித்தனார். அவருடைய வார்த்தைகளை உண்மையாக்கும் விதமாகத்தான் இன்றைக்கு நாம் தமிழர் கட்சி தமிழர் விடுதலைக்கான அத்தனை விதமான முன்னெடுப்புகளையும் தீரத்தோடு நடத்தி வருகிறது.
அய்யா அவர்கள் தொடங்கிய பணியைத் தொய்வின்றித் தொடரும் வீரத் தமிழ்ப் பிள்ளைகளாகிய நாம் அனைவரும் அவருடைய நினைவு நாளில் வீர வணக்கம் செய்வோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் சீமான் குறிப்பிட்டுள்ளார்.
