ஜெயலலிதாவின் கொடநாடு தொடர் மரணங்கள் மர்மம் – எடப்பாடி பழனிச்சாமி விளக்கம்

ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24 ஆம் தேதி ஒரு கும்பல் புகுந்து அங்கு பணியில் இருந்த காவலாளி ஓம்பகதூரை கொலை செய்தும், மற்றொரு காவலாளியான கிருஷ்ணபகதூரை தாக்கியும் பங்களாவுக்குள் நுழைந்து அங்கிருந்த விலை உயர்ந்த பொருட்கள் மற்றும் ஆவணங்களைக் கொள்ளையடித்துச் சென்றது.

இதுகுறித்து நடத்தப்பட்ட விசாரணையில் ஜெயலலிதாவின் கார் டிரைவர் கனகராஜ் இந்தக் கொள்ளையில் மூளையாகச் செயல்பட்டதும், கேரளாவைச் சேர்ந்த கூலிப்படை மூலம் திட்டத்தை அரங்கேற்றியதும் தெரியவந்தது.

கனகராஜை காவல்துறையினர் தேடி வந்த நிலையில் அவர் சேலம் அருகே கார் விபத்தில் பலியானார். அவரது கூட்டாளியான கோவையைச் சேர்ந்த சயன், பாலக்காடு அருகே கார் விபத்தில் சிக்கிப் படுகாயமடைந்தார்.

இதையடுத்து நடத்தப்பட்ட தீவிர விசாரணையில் கொள்ளை, கொலை சம்பவத்தில் ஈடுப்பட்ட சயன் மற்றும் கேரளாவைச் சேர்ந்த தீபு, சதீசன், உதயகுமார், குட்டி பிஜின், வாளையார் மனோஜ் சாமியார், வயநாட்டைச் சேர்ந்த மனோஜ், சந்தோஷ் சாமி, ஜம்சீர் அலி, ஜிதின் ராய் ஆகிய 10 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

சுமார், 16 மாதங்களுக்குப் பிறகு, கொடநாடு கொள்ளை, கொலை வழக்கில் திடீர் தகவல் கொண்ட ஆவணப்படத்தை (சனவரி 11,2019) டெல்லி பிரஸ் கிளப்பில் தெகல்கா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் வெளியிட்டார்.

அதில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீது குற்றம் சுமத்தப்பட்டிருக்கிறது.

இந்நிலையில், அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று (சனவரி 12,2019) நடந்தது. அந்தக் கூட்டத்துக்குப் பின்னர் வெளியே வந்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அளித்த பேட்டியில் கூறியதாவது…..

தெகல்கா பத்திரிகை முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் சாமுவேல், டெல்லியில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் கோடநாடு எஸ்டேட்டில் 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் 24 ஆம் தேதி நடைபெற்ற ஒரு சம்பவத்தில் என்னை (எடப்பாடி பழனிச்சாமி) சம்பந்தப்படுத்தி ஒரு செய்தி வெளியிட்டுள்ளார். இது முற்றிலும் உண்மைக்கு மாறானது. துளியும் உண்மை இல்லை.

இந்தச் செய்தியை வெளியிட்டவர்கள் மற்றும் அவர்களுக்கு பின்புலமாக உள்ளவர்கள் கண்டறியப்பட்டு கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். இதுதொடர்பாக சென்னை காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டு, வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. காவல் துறையினர் சட்டப்படி நடவடிக்கை எடுப்பார்கள்.

கோடநாடு எஸ்டேட்டில் 24.4.2017-ல் நடைபெற்ற சம்பவத்தில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் 10 பேர் கைது செய்யப்பட்டு, வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்தக் குற்றவாளிகள் இதுவரை நீதிமன்றத்துக்கு 22 முறை சென்று வந்துள்ளனர். நீதிமன்றத்தில் எதுவும் சொல்லாதவர்கள், தற்போது புதிதாக ஒரு செய்தியைச் சொல்லி வழக்கைத் திசை திருப்பப் பார்க்கிறார்கள். அடுத்த மாதம் 2-ந் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வர உள்ளது.

இவர்களுக்கு பின்னால் யார்? யார்? இருக்கிறார்கள் என்பது விரைவில் கண்டறியப்படும். இந்தக் குற்றவாளிகள் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. போக்சோ வழக்கு, ஆள் மாறாட்டம், மோசடி, திருட்டு, கூலிப்படை இப்படி பல்வேறு சம்பவங்களில் இந்தக் குற்றவாளிகள் ஈடுபட்டுள்ளனர் என்று வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் வெளியிட்ட செய்தியில், ஜெயலலிதா கட்சி நிர்வாகிகளிடத்தில் ஆவணங்களைப் பெற்று கோடநாட்டில் வைத்திருந்ததாகவும், அதை எடுக்கச் சென்றதாகவும் அந்த வீடியோவில் கூறி உள்ளனர்.

ஜெயலலிதா, எந்த ஒரு நிர்வாகியிடம் எந்த ஆவணத்தையும் எப்போதும் பெற்றது கிடையாது. ஜெயலலிதாவுக்குக் களங்கம் கற்பிக்கும் வகையில் செய்தி வெளியிட்டுள்ளது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. கட்சி நிர்வாகிகளை தங்களது குடும்ப உறுப்பினராக ஜெயலலிதா பாவித்து வந்தார். கட்சிக்காரர்களிடத்தில் அன்பாகப் பழகி, அவர்களுக்குத் தேவையான பதவி வழங்கி அழகு பார்க்கும் தலைவர் ஜெயலலிதா. அப்படிப்பட்டவர் மீது இப்படி ஒரு களங்கம் கற்பித்தது உண்மையில் கண்டிக்கத்தக்கது.

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு இதற்குப் பின்னால் யார் யாரெல்லாம் இருப்பார்கள்? என்று கண்டறிந்து உலகத்துக்கு வெளிச்சம் போட்டுக் காட்டி, சம்பந்தப்பட்டவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும். இந்தக் குற்றச்சாட்டு குறித்து ஏற்கனவே வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணை முடிவில்தான் உண்மைக்கு மாறான செய்திகளை ஏன் சொன்னார்கள்? என்று தெரியவரும்.

நேரடியாக எங்களை அரசியலில் எதிர்கொள்ள முடியாத, திராணியற்ற, முதுகெலும்பு இல்லாதவர்கள்தான் இப்படிப்பட்ட கோழைத்தனமான குறுக்குவழியைக் கையாண்டுள்ளார்கள். இந்தக் குற்றச்சாட்டில் அரசியல் பின்புலம் இருப்பதாகவே நான் கருதுகிறேன். அதற்காகத்தான் வழக்கு தொடர்ந்துள்ளோம். உண்மை வெளிச்சத்துக்கு வரும். ஜெயலலிதா மருத்துவமனையில் இருக்கும்போதே என்று அவர் பேட்டியில் கூறுகிறார். அப்படியென்றால், ஏற்கனவே ஜெயலலிதா மருத்துவமனையில் இருக்கும்போதே இதெல்லாம் திட்டமிட்டிருக்கிறார்கள் என்று அவர்கள் வெளியிட்ட செய்தியிலேயே தெரிகிறது.

இதையெல்லாம் முறையாக விசாரித்தால்தான் உண்மை தெரியவரும்.இவ்வாறு எடப்பாடி பழனிச்சாமி கூறினார்.

Leave a Response