ரோகித், தோனி போராடியும் பலனில்லை – ரசிகர்கள் சோகம்

இந்திய மட்டைப்பந்தாட்ட அணி, விராட் கோலி தலைமையில் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.

இவ்விரு அணிகள் இடையே நடந்த 20 ஓவர் போட்டித் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. அதைத் தொடர்ந்து நடந்த ஐந்துநாள் போட்டித் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வென்று புதிய வரலாறு படைத்தது.

இந்த நிலையில், இன்று ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டி நடந்தது.

இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணித் தலைவர் ஆரோன் பிஞ்ச் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன்படி இந்திய அணி முதலில் பந்து வீசியது.

அந்த அணித்தலைவர் ஆரோன் பின்ச் (6) புவனேஷ்குமார் பந்தில் கிளீன் போல்டு ஆனார். ஆஸ்திரேலிய அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்த போதிலும், கணிசமாக ரன்களையும் சேர்க்கத்தவறவில்லை.

அந்த அணியில் உஸ்மான் காவ்ஜா (59), ஷான் மார்ஷ் (54), ஹேண்ட்ஸ்கோம்ப் (73), மார்கஸ் ஸ்டாயின்ஸ் (47) என பொறுப்பான முறையில் ரன்களை சேர்த்து ஆட்டமிழந்தனர்.

ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 288 ரன்களை சேர்த்தது. இதன் மூலம் இந்திய அணிக்கு 289 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து இந்திய அணி விளையாடியது. இதில் ஒரு புறம் தோனி (51) தவிர மற்றவர்கள் குறைந்த ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், தொடக்க ஆட்டக்காரராக விளையாடிய ரோகித் சர்மா நிலைத்து நின்று ஆடினார். அவர் சதம் அடித்து அசத்தினார். ரோகித் 133 ரன்கள் (129 பந்துகள், 10 பவுண்டரிகள், 6 சிக்சர்கள்) எடுத்த நிலையில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்து உள்ளார்.

ஷிகர் தவான் (0), கோலி (3), ராயுடு (0), கார்த்திக் (12), ஜடேஜா (8), குல்தீப் யாதவ் (3) ரன்களில் ஆட்டமிழந்தனர். முகமது ஷமி (1) கடைசி பந்தில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். புவனேஷ்குமார் (29) ரன்கள் எடுத்து ஆட்டமிழக்கவில்லை. அகமது இன்னும் விளையாடவில்லை. இந்த நிலையில் 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 254 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது.

71 ஆண்டுகளுக்குப் பிறகு ஐந்துநாள் தொடரை வென்ற உற்சாகத்தில் இருந்த இந்திய அணியின் ரசிகர்கள் உடனே வந்த இந்தத் தோல்வியால் சோகமடைந்துள்ளனர்.

Leave a Response