ரிலையன்ஸ் போல் டாடா நிறுவனமும் முன்னுக்கு வருகிறது – ரஜினி பேச்சு

நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா நிறுவனராக இருக்கும் தயா பவுண்டேசன் என்கிற அமைப்பின் சார்பில் குழந்தைகளுக்கான கொண்டாட்ட நிகழ்ச்சி சென்னை திருவான்மியூரில் உள்ள ஸ்ரீராமச்சந்திரா கன்வென்ஷன் மையத்தில் நவம்பர் 24 ஆம் தேதி நடைபெற்றது.

இதில், நடிகர் ரஜினிகாந்த், டாடா டிரஸ்ட் சார்பில் ஹரீஷ், திரிபுரா மற்றும் பீகார் முன்னாள் கவர்னர் பட்டீல், ரஜினிகாந்தின் மகள்கள் சவுந்தர்யா, ஐஸ்வர்யா, மருமகன் நடிகர் தனுஷ், மராட்டிய மாநில முதல்-மந்திரி மனைவி அம்ருதா பட்நாவிஸ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் திரைப்பட இயக்குநர் எஸ்.பி.முத்துராமன், தொழிலதிபர் வி.ஜி.சந்தோசம், நடிகர் விஜய்யின் தாயார் ஷோபா, நடிகர்கள் ஒய்.ஜி.மகேந்திரன், ராகவா லாரன்ஸ், திரைப்படத் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, ரஜினி மக்கள் மன்ற மாநில செயலாளர் ராஜூ மகாலிங்கம், நடிகை மீனா, டாக்டர் பாலாஜி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் குழந்தைகள் பங்கேற்ற கண்கவர் கலை நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்பட்டன. அதனைத் தொடர்ந்து, தயா பவுண்டேசன் அமைப்பின் கீழ் செயல்படும் குழந்தைகளுக்கு அமைதி (பீஸ் பார் சில்ட்ரன்) என்ற அமைப்பின் சார்பில் குழந்தைகளின் பாதுகாப்புக்காகவும், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், பாலியல் கொடுமைகள் ஆகியவற்றை தடுக்கவும் இலவச தொலைபேசி எண், செல்போன் செயலி, அவசர அழைப்பு எண், மின்னஞ்சல் முகவரி, இணையதளம் ஆகியவை அறிமுகப்படுத்தப்பட்டன.

இதை நடிகர் ரஜினிகாந்த் அறிமுகம் செய்து வைத்தார். அதனைத் தொடர்ந்து அவர் பேசியதாவது:-

லதா ‘குழந்தைகளுக்கு அமைதி’ என்ற அமைப்பைத் தொடங்க வேண்டும் என்று ரொம்ப நாட்களாக கனவு கண்டு கொண்டு இருந்தார். அந்தக் கனவு இன்று நனவாகி இருக்கிறது. குழந்தைகள் எப்போதும் நிம்மதியாகத் தான் இருக்கிறார்கள். அவர்களின் நிம்மதியைக் கெடுப்பது பெரியவர்கள் தான். வீட்டில் ஆரம்பித்து பள்ளிக்கூடம், சமுதாயம் வரை அவர்களுடைய நிம்மதியைக் கெடுக்கிறார்கள்.

குழந்தைகள் அழகான பூக்கள். நாட்டின் எதிர்காலம் அவர்கள் தான். அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளில், அரசாங்கங்கள் குழந்தைகளுக்காக செலவழிக்கிற பணமும் சரி, நேரமும் சரி, திட்டங்களும் சரி இவற்றில், நமது மத்திய அரசாங்கமோ, மாநில அரசாங்கமோ செலவு செய்வதும் கிடையாது. குழந்தைகள் மீது அவர்களுக்கு அக்கறையும் இல்லை.

குழந்தைகளையே கவனிக்காத நாடு எப்படி நன்றாக இருக்கும். குழந்தைகளை எந்த அரசாங்கமும் கவனிக்கவில்லை. அதற்காகவே எனது மனைவி இந்த அறக்கட்டளையை ஆரம்பித்தார். இதனுடைய முக்கியத்துவத்தைப் புரிந்து கொண்டு ‘டாடா’ நிறுவனம் இப்போது இதைக் கையில் எடுத்து உள்ளது. ரிலையன்ஸ் போன்று அவர்களும் முன்னுக்கு வந்து கொண்டு இருக்கிறார்கள்.

அரசை நம்பி பிரயோஜனம் இல்லாத காரணத்தால் பெரிய பெரிய முதலாளிகள் இது போன்ற திட்டங்களைக் கையில் எடுத்து இருக்கிறார்கள். அதற்கு லதா செய்திருக்கும் காரியம் எவ்வளவு பாராட்டினாலும் தகும். எனவே, ரஜினிகாந்தின் மனைவி லதா என்று சொல்லிக்கொண்டு இருந்த காலம் போய், இனி லதாவின் கணவர் ரஜினிகாந்த் என்று சொல்லும் காலம் வர வேண்டும். உண்மையில் இது ஒரு மிகப்பெரிய சேவை.

சாலைகளில் பிச்சை எடுக்கும் பிள்ளைகளை போலீஸ் நிலையத்துக்கு போலீசார் அழைத்துச் சென்று உன்னை பிச்சை எடுக்க வைப்பது யார்? என்று விசாரணை செய்ய எவ்வளவு நேரம் தான் ஆகும். இதை யாரும் கண்டுகொள்வது இல்லை. ஒரு மிகப்பெரிய குழந்தைகள் மாபியாவே நடந்து கொண்டு இருக்கிறது.

இதை அரசாங்கமும் கண்டு கொள்வது இல்லை. போலீசாரும் கவனிப்பது இல்லை. சமூகம் கூட அவர்களை பார்த்துக்கொண்டு அப்படியே போய்க்கொண்டு இருக்கிறோம். அவர்கள் பின்னால் ஒரு பெரிய மாபியா இருக்கிறது. குழந்தைகளைக் கடத்திக்கொண்டு போய் அவர்களின் முகவரியை அழித்து, அவர்களின் தாய்-தந்தை இல்லாமல் அவர்களை அனாதைகளாக, பிச்சைக்காரர்களாக, கிரிமினல்களாக, நோயாளிகளாக மாற்றி வாழ்க்கை முழுவதும் செத்து செத்து போய்க் கொண்டு இருக்கிறார்கள். அது எவ்வளவு பெரிய குற்றம்? கொலை செய்தவர்களுக்கு என்ன தண்டனை வழங்குகிறார்களோ? அதே தண்டனையை இந்தக் குற்றத்தில் ஈடுபடும் மாபியாக்களுக்கு தண்டனை வழங்க வேண்டும்

இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Response