கஜ புயல் பாதிப்பு – மத்திய குழு பார்வையும் அதில் நடக்கும் மோசடியும்

தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமாக விளங்கும் காவிரிப்படுகை மாவட்டங்கள் உள்ளிட்ட தமிழ்நாட்டின் ஏழு மாவட்டங்களை முற்றிலுமாகத் தரைமட்டமாக்கிவிட்டுச் சென்றுள்ளது – “கசா” புயல்! கடந்த 2018 நவம்பர் 15 அன்றிரவு வீசிய புயல் காற்று ஒரே நாளில் இம்மாவட்ட மக்களை பல்லாண்டுகளுக்கு பின்நோக்கி இழுத்துவிட்டது.

ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டுக்கும் உணவளித்த உழவர் பெருமக்கள், ஒரே நாளில், ஒரு வேளை உணவுக்காகவும், குடிநீருக்காகவும் பரிதவிக்கும் அவலம் நிகழ்ந்துவிட்டது! ஓட்டு வீடுகளும், குடிசைகளும் சீறும் காற்றால் சின்னாபின்னமாக்கப்பட்டன.

குடிநீர் இல்லை, மின்சாரமில்லை, உதவி கேட்க வெளியுலகோடு தகவல் தொடர்பு இல்லை என்று முற்றிலும் துண்டிக்கப்பட்டு தத்தளித்துக் கொண்டிருக்கின்றனர்.

தற்போதைய நிலவரப்படி, இதுவரை 1.03 இலட்சம் மின் கம்பங்களும் ஆயிரக்கணக்கான மின் மாற்றிகளும் புயலால் விழுந்துள்ளன. சற்றொப்ப 3,559 கிலோ மீட்டர் நீளமுள்ள மின் வயர்கள் சேதமடைந்துள்ளன. இதன் காரணமாக, இம்மாவட்டங்கள் இன்னமும் இருளில் தவித்துக் கொண்டுள்ளன. சற்றொப்ப 12,000 மின்சார வாரிய ஊழியர்களும், தன்னார்வச் செயல்பாட்டாளர்களும் தங்கள் உயிரைப் பணயம் வைத்து மின்சாரக் கட்டமைப்புகளை சீரமைத்து வருகின்றனர்.

இன்னொருபுறம், மாவட்ட ஆட்சியர் உள்ளிடட முகாமையான அரசு அதிகாரிகள் ஆங்காங்கு அமைக்கப்பட்டுள்ள “நிவாரண முகாம்”களில் முடங்கிக் கிடக்கின்றனர். அமைச்சர்கள் அவ்வப்போது இம்முகாம்களுக்கு வந்து போகின்றனர்.

கிராமங்களுக்குச் சென்று, மக்களிடம் பணியாற்றுவதற்கான கடமைப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் தற்போது முடங்கிக் கிடக்கின்றன. கேட்பாராற்ற நிலையில் செயலற்ற தமிழ்நாடு அரசின்கீழ், துயர் துடைப்புப் பணிகளில் பெருஞ்சிக்கல் எழுந்துள்ளது. ஆங்காங்கு மக்கள் நடத்தும் போராட்டங்களும், கொந்தளிப்புகளும் இதன் வெளிப்பாடே!

இந்நிலையில், நேற்று (22.11.2018) காலை புதுதில்லி சென்ற தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இந்தியத் தலைமையமைச்சர் நரேந்திர மோடியை சந்தித்து, “கசா” புயல் பாதிப்புக்காக 14,910 கோடி ரூபாய் நிதி கேட்டு “மனு” அளித்துவிட்டு வந்துள்ளார். இதனையடுத்து, இன்று (23.11.2018) தமிழ்நாட்டிற்கு “நடுவண் குழு” வருகிறது.

நடுவண் குழு ஆதிக்கம்
————————————–
ஒவ்வொரு முறையும் தமிழ்நாடு பேரிடர்களை சந்திக்கும்போது, இவ்வாறு இந்திய அரசின் “நடுவண் குழு” என்ற பெயரில் அதிகாரிகள் வருவதும், அவர்கள் பார்வையிடுவதும் நடப்பது வழக்கமாகிவிட்டது.

தமிழ்நாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி இருக்கிறது. இவ்வரசின் சார்பில், புயல் அல்லது வெள்ள சேதங்கள் குறித்த மதிப்பீடுகளும், கோரிக்கைகளும் முன்வைக்கப்படுகின்றன. இதை அடிப்படை ஆவணமாக ஏற்க வேண்டுமே அன்றி, “நடுவண் குழு” இங்கே ஆய்வுக்கு அனுப்பப்படுவது, “தில்லியின் காலனி தமிழ்நாடு” என்பதை வலியுறுத்துவதற்கான நிர்வாகச் செயல்பாடுதான்!

தமிழ்நாடு அளிக்கும் கணக்கீட்டின் அடிப்படையில், தன்னுடைய நிதி வாய்ப்பை விளக்கி, தமிழ்நாடு அரசுடன் உரையாடல் நடத்தி அதனடிப்படையில் பொது முடிவுக்கு வந்து, இடர் நீக்க நிதி வழங்குவதுதான் சனநாயக நடைமுறையாக இருக்க முடியும்! அதைவிடுத்து, தமிழ்நாடு அரசின் சார்பில் முதலமைச்சர் விளக்கமான கோரிக்கை மனு வைத்ததற்குப் பிறகு, “நடுவண் குழு”வை அனுப்பி ஆய்வு செய்வது, தமிழ்நாடு அரசைப் புறக்கணிப்பது மட்டுமல்ல – தமிழினத்தை துச்சமாக மதிக்கும் இன ஆதிக்கமும் ஆகும்!

“நடுவண் குழு ஆய்வு” என்பதே தமிழ்நாட்டிற்கு “பிச்சை” போடுவதற்காகத்தான்! அண்மைக்கால நடப்புகளை ஆய்வு செய்தாலே இது புரியும்.

கடந்த 2011ஆம் ஆண்டு திசம்பரில், தமிழ்நாட்டைத் “தானே” புயல் தாக்கியபோது, இந்திய அரசிடம் தமிழ்நாடு அரசு கேட்ட தொகை 5,249 கோடி ரூபாய்! இந்திய அரசோ இதேபோல் “நடுவண் குழு”வை அனுப்பி வைத்து, “ஆய்வு” என்ற பெயரில் “எசமான நாடகம்” ஆடி, வெறும் 500 கோடி ரூபாயை “பிச்சை” போடுவது போல வழங்கியது.

கடந்த 2015ஆம் ஆண்டின் பிற்பகுதியில், வரலாறு காணாத பெருமழையும் வெள்ளமும் சென்னை உள்ளிட்ட வடதமிழ்நாட்டை உருக்குலைத்த போது, 50,000 கோடி ரூபாய் அளவுக்கு சேதம் ஏற்பட்டது. இந்தியக் குழு பார்வையிட்ட பிறகு, இந்திய அரசு அறிவித்த தொகையோ வெறும் 2195.45 கோடி ரூபாய்தான்!

கடந்த 2016ஆம் ஆண்டு திசம்பரில் வந்த “வர்தா” புயலின்போதும் “நடுவண் குழு” வந்தது. தமிழ்நாடு அரசு கேட்ட 22,573 கோடி ரூபாயில், வெறும் 266.17 கோடி ரூபாயைத்தான் இந்திய அரசு ஒதுக்கியது. அதன்பிறகு, 2017 ஒக்கி புயலின்போது, தமிழ்நாடு கேட்டது 13,250 கோடி ரூபாய்! இந்திய அரசு கொடுத்ததோ வெறும் 280 கோடி ரூபாய்தான்!

இப்போது “கசா” புயலால் தமிழ்நாட்டிற்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சரி செய்ய குறைந்தபட்சம் ஐம்பதாயிரம் கோடிகளாவது வேண்டும்! ஆனால், ஆளும் அ.தி.மு.க. அடிமை அரசோ வெறும் 15,000 கோடியைத் தான் அள்ளிபுள்ளியாகக் கேட்டுள்ளது. அதையும் இப்போது மோடி அரசு முழுமையாகத் தரப்போவதில்லை என்பதே உண்மை!

சுரண்டப்படும் தமிழ்நாடு
—————————————
தமிழ்நாடு, இந்திய அரசிடம் புயல் பேரிடரைக் காட்டி, “பிச்சை” கேட்கவில்லை! வெள்ளை ஏகாதிபத்தியத்தைவிட தில்லி ஏகாதிபத்தியம் தமிழ்நாட்டில் அடிக்கும் வரிக்கொள்ளையையும், இயற்கை வளச் சூறையாடலையும் நிறுத்தினாலே போதும்! தமிழ்நாடு தனக்கு ஏற்பட்டுள்ள பேரழிவை தானே சரி செய்து கொள்ள முடியும்.

இந்திய அரசு தமிழ்நாட்டிலிருந்து அடிக்கும் கொள்ளையை தொடர்ந்து நாம் கூறி வருகிறோம். இந்த நேரத்தில், அவற்றை மீண்டும் தொகுத்துப் பார்த்துக் கொண்டால், இந்திய அரசின் இன ஒதுக்கலைப் புரிந்து கொள்ள முடியும்!

தமிழ்நாட்டிலிருந்து இந்திய அரசு வசூலிக்கும் வருமான வரித்தொகை, கடந்த 7 ஆண்டுகளில் 138% உயர்ந்துள்ளது. இந்த உண்மையை, கடந்த மாதம் (23.10.2018), இந்திய அரசின் “நடுவண் நேரடி வரி வாரியமே” (Central Board of Direct Tax – CBDT) ஒத்துக் கொண்டுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டிலிருந்து கடந்த 2011 – 2012ஆம் நிதியாண்டில் 28,337 கோடி ரூபாய் வருமான வரியாக வசூலிக்கப்பட்ட நிலையில், இது தற்போதைய 2017 – 2018ஆம் ஆண்டில் 67,583 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. (காண்க : “டைம்ஸ் ஆப் இந்தியா”, 24.10.2018).

கடந்த ஏழாண்டுகளில் இந்திய அரசுக்கு, வருமான வரி வழியாக மட்டும், 3 இலட்சத்து 26 ஆயிரம் (3,26,974) கோடி ரூபாயை தமிழ்நாடு செலுத்தியிருக்கிறது. இது தவிர்த்து, இன்னொரு புறத்தில் இந்திய அரசின் சரக்கு மற்றும் சேவை வரி வழியாகவும் இந்திய அரசுக்கு வரித்தொகை செல்கிறது.

இந்திய அரசின் சரக்கு மற்றும் சேவை வரித்துறை தலைமை ஆணையர் சி.பி. இராவ், கடந்த சூலையில் (01.07.2018), சென்னையில் பேசியபோது, கடந்த ஆறு மாதங்களில் தமிழ்நாட்டிலிருந்து மட்டும் 51,259 கோடி ரூபாய்க்கு ஜி.எஸ்.டி. வரி திரட்டப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். (காண்க : தினத்தந்தி (டி.டி. நெக்ஸ்ட்) – ஆங்கில ஏடு, 01.07.2018).

மாநிலங்களிலிருந்து திரட்டப்படும் இந்திய அரசின் வரி வசூலிலிருந்து, இந்திய அரசமைப்புச் சட்டப்படியே அந்தந்த மாநிலங்களுக்கு ஒரு பங்குத் தொகை பகிரப்படுகிறது. ஆனால், அரசமைப்புச் சட்டப்படி வழங்க வேண்டிய அந்தத் தொகையைக் கூட தமிழ்நாட்டிற்கு முறையாகத் தராமல் மோசடி செய்கிறது இந்திய அரசு!

நிலுவையில் பல்லாயிரம் கோடிகள்

கடந்த 08.10.2018 அன்று, புதுதில்லி சென்று இந்தியத் தலைமையமைச்சரை நேரில் சந்தித்து வந்த தமிழ்நாடு முதலமைச்சர், தமிழ்நாட்டு உள்ளாட்சி அமைப்புகளுக்கும், தமிழ்நாட்டின் இதர திட்டங்களுக்கும் ஒதுக்கப்பட்டு – இதுவரை வராத 19,278.96 கோடி ரூபாய் நிதியை தாருங்கள் என கோரிக்கை வைத்துவிட்டு வந்தார். அந்த நிலுவைத் தொகைகூட இன்னும் வரவில்லை!

கடந்த 14ஆவது நிதி ஆணையம் ஒதுக்கியபடி தமிழ்நாட்டு உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்க வேண்டிய 2017 – 2018 ஆம் ஆண்டிற்கான செயல்பாட்டு (Performance Grant) மானியத் தொகை ரூபாய் 560.15 கோடி. உள்ளாட்சி அமைப்புகளுக்கு 2018 – 2019 ஆண்டிற்குத் தர வேண்டிய அடிப்படைத் தொகை ரூ 1,608.03 கோடி. ஆகமொத்தம் உள்ளாட்சித் துறைக்கு இந்திய அரசு தர வேண்டிய பாக்கித் தொகை 2,160.18 கோடி ரூபாய்!

ஒருங்கிணைந்த சரக்கு சேவை வரி (ஜி.எஸ்.டி) வசூலில் ஒன்றிய அரசும் மாநில அரசும் தலா 50 விழுக்காடு பகிர்வு கொள்ள வேண்டும். அதன்படி 2017 – 2018 நிதியாண்டில் (2018 மார்ச்சுடன் முடிவடைந்த நிதி ஆண்டு) தமிழ்நாட்டிற்குத் தர வேண்டிய 5,426 கோடி ரூபாயை இன்னும் தரவில்லை இந்திய அரசு. கடந்த செப்டம்பருடன் முடிவடைந்த 2018 – 2019 முதல்பாதி நிதியாண்டிற்குத் தர வேண்டிய ஜி.எஸ்.டி. வரி வசூல் பங்குத் தொகையையும் இந்திய அரசு இன்னும் தரவில்லை.

கடந்த 13ஆவது நிதி ஆணையம் தமிழ்நாட்டிற்கு 21 திட்டங்களுக்கு ஒதுக்கிய தொகையில் 8,699 கோடி ரூபாய் இன்னும் வரவில்லை. 13ஆவது நிதி ஆணையக் காலம் முடிந்து, 14ஆவது நிதி ஆணையக் காலமும் முடிவெய்தி 15ஆவது நிதி ஆணையம் செயல்பாட்டிற்கு வரவுள்ள நிலையில், பத்தாண்டு கடந்த பின்பும் 13ஆவது நிதி ஆணையம் ஒதுக்கிய நிதியில் இன்னும் நிலுவை உள்ளது. இது வருமா வராதா தெரியாது!

கடந்த 14ஆவது நிதி ஆணையம் தமிழ்நாட்டிற்கு உரியவாறு நிதி ஒதுக்கி ஞாயம் வழங்கவில்லை என்பதற்காக அதை ஈடுகட்ட ரூ 2,000 கோடி தனி ஒதுக்கீடாக அறிவிக்கப்பட்டது. அத்தொகையையும் இன்னும் தரவில்லை!

இதுதவிர, பட்டியல் வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் பத்தாம் வகுப்பிற்கு மேல் கல்வி தொடர்வதற்கு – நிர்வாக ஒதுக்கீட்டில் படிக்கும் மாணவர்களுக்கு வழங்கும் உதவி தொகையில் ஒன்றிய அரசு 60 விழுக்காடு நிதி தர வேண்டும். மாநில அரசு 40 விழுக்காடு நிதி தர வேண்டும். இந்திய அரசு 2017 – 2018 நிதி ஆண்டில் இம்மாணவர்களுக்கு தர வேண்டிய ரூபாய் 985.78 கோடி ரூபாயை இன்னும் தரவில்லை!

மேற்கண்ட ஐந்து வகை இனங்களில் மட்டும் ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்குத் தர வேண்டிய நிலுவைத் தொகை மொத்தம் – 19,278.96 கோடி ரூபாய்! இந்த நிமிடம் வரை அவற்றில் எதையும் தரவில்லை இந்திய அரசு!

இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் குசராத், மகாராட்டிரா ஆகிய மாநிலங்களைத் தொடர்ந்து, தமிழ்நாடு 3-ஆவது இடத்தில் உள்ளது.( காண்க “தமிழ் இந்து”, 31.10.2016). கடந்த ஆண்டு (2015) தமிழ்நாட்டிலிருந்து வேளாண் பொருட்கள், தோல் பொருட்கள், வேதியியல் பொருட்கள், அழகு சாதனப் பொருட்கள், ஆயத்த ஆடைகள், கைவினைப் பொருட்கள், கணினி மென்பொருள் உள்ளிட்ட 20 வகையான பொருட்கள் சற்றொப்ப ரூபாய் 1.96 இலட்சம் கோடி அளவுக்கு 2015ஆம் ஆண்டில் மட்டும் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன என்று இந்திய அரசே கூறுகிறது.

இந்தியாவின் ஒட்டு மொத்த மக்கள் தொகையில் வெறும் 5.96 விழுக்காடு மக்கள் வசிக்கும் மாநிலம் – தமிழ்நாடு! இந்தியாவின் ஒட்டு மொத்த நிலப்பரப்பில் வெறும் 3.95 விழுக்காடு (130,058 சதுர கிலோ மீட்டர்) நிலப்பரப்பைக் கொண்டது – தமிழ்நாடு! ஆனால், இந்திய ஒட்டுமொத்த ஏற்றுமதியில் 13 விழுக்காடு தமிழ்நாட்டிலிருந்து செல்கிறது!

இந்திய அரசுக்கு உத்திரப்பிரதேசம் ஒரு ரூபாய் வரி செலுத்தினால், 1.79 ரூபாய் திரும்பப் பெறுகிறது. பீகாருக்கு 96 காசுகள் திரும்பக் கிடைக்கிறது. மத்தியப் பிரதேசத்துக்கு 75 காசுகள் திரும்பக் கிடைக்கிறது. ஆந்திராவுக்கு 67 காசுகள் திரும்பக் கிடைக்கிறது. கர்நாடகத்துக்கு 47 காசுகள் திரும்பக் கிடைக்கிறது. ஆனால், வரி வசூல் திறனிலும், திரட்டப்படும் வரித்தொகையிலும் முதல் வரிசை மாநிலமாக விளங்கும் தமிழ்நாட்டிலிருந்து ஒரு ரூபாய் இந்திய அரசு எடுத்துச் சென்றால், 40 காசுகளை மட்டுமே பெறுகிறது!

இந்த வரிகள் தவிர்த்து, இந்திய அரசின் அஞ்சலகம், தொடர்வண்டி, தொலைத் தொடர்பு உள்ளிட்ட சேவை களின் வழியாகவும், தமிழ்நாட்டின் கனிம வளங்களைச் சூறையாடி நடத்தப்படும் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம், சேலம் இரும்பு உருக்காலை போன்ற நிறுவனங்கள் வழியாகவும், எண்ணெய் வளங்களை அள்ளிச்செல்லும் ஓ.என்.ஜி.சி., இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிறுவனங்களின் வாயிலாகவும், பொருள் ஏற்றுமதிகள் வழியாகவும் என ஓராண்டுக்கு சற்றொப்ப 3 இலட்சம் கோடி ரூபாய் அளவிற்கு தமிழ்நாட்டிலிருந்து இந்திய அரசு கொள்ளையிட்டுச் செல்கிறது.

கனிம வளக் கொள்ளை
————————————–
தமிழகத்தின் நெய்வேலியிலிருந்து எடுக்கப்படும் பழுப்பு நிலக்கரி, இந்தியாவின் ஒட்டுமொத்த நிலக்கரியில் 74 விழுக்காடு ஆகும். இதனைக் கொண்டு, நெய்வேலி அனல் மின் நிலையத்தில் செய்யப்படும் மின் உற்பத்தியில் – ஒவ்வொரு நாளும், காவிரியைத் தடுக்கும் கர்நாடகத்திற்கு 11 கோடி யூனிட்டும், முல்லைப் பெரியாறு அணையை உடைக்கத் துடிக்கும் கேரளத்திற்கு 9 கோடி யூனிட்டும், பாலாற்றைத் தடுக்கும் ஆந்திரப் பிரதேசத்திற்கு 6 கோடி யூனிட்டும் என சற்றொப்ப 26 கோடி யூனிட் மின்சாரம் இந்திய அரசால் பகிர்ந்து வழங்கப்படுகின்றது. இதன் மூலம் இந்திய அரசுக்குக் கிடைக்கும் வருவாய் பல்லாயிரம் கோடி ரூபாய் ஆகும்.

தமிழ்நாட்டில் காவிரிப் படுகையில் அமைந்துள்ள நரிமணம், அடியக்கமங்கலம், புவனகிரி, கோயில் களப்பால் ஆகிய இடங்களில் மொத்தம் 28 எண்ணெய், எரிவளிக் கிணறுகள் இருக்கின்றன. இவற்றிலிருந்து மாதந்தோறும் 40 ஆயிரம் கிலோ லிட்டர் பெட்ரோலும், 1.20 இலட்சம் கிலோலிட்டர் டீசலும் கிடைக்கின்றன. தமிழ்நாட்டிலிருந்து ஒரு நாளைக்கு 3.3 மில்லியன் மெட்ரிக் கியூபிக் மீட்டர் இயற்கை எரிவளியை எடுத்துச் செல்கிறது, இந்திய அரசின் பெட்ரோலியத்துறை அமைச்சகம்! இவற்றின் மூலம் இந்திய அரசின் எண்ணெய் நிறுவனங்களுக்கு இலட்சக்கணக்கான கோடி ரூபாய் வருமானம் கிடைக்கிறது.

கடந்த ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாடு தெரிவித்துவரும் எதிர்ப்புகளையெல்லாம் புறந்தள்ளி, சேலம் இரும்பு உருக்காலை, தென் மாவட்ட தாது மணல் உள்ளிட்டவற்றால் இந்திய அரசு எடுத்துச் செல்லும் தொகை பல இலட்சம் கோடி! தான் சுரண்டுவது போதாது என சேலம் கஞ்சமலையிலிருந்தும், திருவண்ணாமலை வேடியப்பர் மலையிலிருந்தும் வடநாட்டுப் பெருமுதலாளி ஜின்டால் குழுமம், இரும்பு தாது வெட்டியெடுத்துக் கொள்ள இந்திய அரசு அனுமதி வழங்கியிருக்கிறது. அதற்காகவே, துப்பாக்கி முனையில் கெடுபிடி சட்டங்களைப் பயன்படுத்தி, தமிழர்களின் வேளாண் நிலங்களை அழித்து எட்டுவழிச்சாலை போடப்படுகிறது.

இந்தியாவின் ஒட்டுமொத்த தோல் பொருட்களில் 70 விழுக்காட்டுப் பொருட்கள், இராணிப்பேட்டை, ஆம்பூர், வாணியம்பாடி, சென்னை குரோம்பேட்டை, திருச்சி, திண்டுக்கல், ஈரோடு என தமிழ்நாட்டின் பல பகுதிகளில் நம் நிலத்தடி நீரை உறிஞ்சி உருவாக்கப்படுபவை. இந்தியாவின் தீப்பெட்டி மற்றும் வெடிப் பொருட்களில் 80 விழுக்காடு, தமிழ்நாட்டின் சிவகாசியிலிருந்து உருவாக்கப்படுபவை.

ஒரு காலத்தில் மோட்டார் ஊர்திகளை உற்பத்தி செய்யும் உலகத் தலைநகரமாக, வட அமெரிக்காவின் டெட்ராய்ட் நகரம் விளங்கியது. ஆனால், தற்போது அந்நகரம் மக்கள் வாழத் தகுதியற்ற நகரமாக அறிவிக் கப்பட்டுவிட்டது. தற்போது, “ஆசியாவின் டெட்ராய்ட் நகரம்” என சென்னை மாநகரத்தைச் சுற்றி பல மோட்டார் ஊர்தி தயாரிப்பு நிறுவனங்கள் இந்திய அரசால் அனுமதிக்கப்பட்டுள்ளன. இந்நிறுவனங்கள், பல இலட்சம் லிட்டர் நிலத்தடி நீரை உறிஞ்சி, அவரவர் நாடுகளுக்கு மகிழுந்துகளையும் ஊர்திகளையும் அனுப்பி வைக்கின்றன.

இவ்வாறு தமிழ்நாட்டின் இயற்கை வளங்களைச் சுரண்டி பல இலட்சம் கோடி ரூபாய் வருமானம் ஈட்டும் இந்திய அரசு தமிழ்நாட்டிற்குத் தரும் ஈவுத்தொகை (ராயல்டி) எவ்வளவு தெரியுமா? வெறும் 689.58 கோடி ரூபாய்! இது 2015ஆம் ஆண்டுக் கணக்கு!

தமிழ்நாட்டிற்கு அளிக்க வேண்டிய பங்கு தொகை மட்டுமின்றி, தமிழ்நாட்டிற்குள் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களுக்காக இந்திய அரசு செலவிடும் தொகையும் மிகக் குறைவானதே! இந்திய அரசின் நேரடித் திட்டங்களுக்காக கடந்த 2014 – 2015ஆம் நிதியாண்டில், தமிழ்நாட்டிற்குள் செலவழிக்கப்பட்ட ஒட்டுமொத்தத் தொகை 13,633.12 கோடி ரூபாய் மட்டுமே என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி இந்திய நிதி ஆணையம் (தற்போது நிதி ஆயோக்) நமக்களித்த விடையில் தெரிவித்துள்ளது (கடிதம் எண்: PLCOM/R/2015/80237). அடுத்தடுத்த ஆண்டுகளிலும் இத்தொகை பெரிதாக அதிகரித்துவிடவில்லை! மாறாக, தமிழ்நாட்டிற்கு “நிதி வெட்டு” தான் பரிசாகக் கிடைக்கிறது!

இந்தியத்தின் இனப்பாகுபாடு
———————————————
இதே காலகட்டத்தில்தான் நாம் தொடர்ச்சியாக பேரிடர்களை சந்தித்துக் கொண்டிருந்தோம். இவற்றை “பேரிடர்” என்றுகூட அறிவிக்காத இந்திய அரசு, இதற்கு குறைந்தபட்ச “நிவாரண நிதி”யைக் கூட அளிக்க மறுத்து வருவது, தமிழர் மீதான இனப்பாகுபாடு அல்லாமல் வேறென்ன?

ஆனால், இதே காலகட்டத்தில், 2013ஆம் ஆண்டு உத்தரகண்ட்டில் வெள்ளம் ஏற்பட்ட போது, அம்மாநில அரசு கோரிக்கை வைக்காத நிலையிலேயே, 1000 கோடி ரூபாய் நிதியை உடனடி உதவியாக இந்திய அரசு அறிவித்ததும், அதன்பிறகு மறுகட்டமைப்புக்கும் ஏராளமாக வழங்கியதும் நமக்கு எதை உணர்த்துகின்றது?

காவிரிச் சிக்கல், முல்லைப் பெரியாறு அணை உரிமை மறுப்பு, பாலாற்று உரிமை மறுப்பு, சிறுவாணி உரிமை மறுப்பு, கச்சத்தீவு பறிப்பு, தமிழீழ விடுதலை எதிர்ப்பு, அணு உலைத் திணிப்பு, ஏறுதழுவல் உரிமை மறுப்பு என தமிழ்நாட்டின் முகாமையான சிக்கல்கள் அனைத்திலும் தமிழர்களுக்கு எதிராக செயல்பட்டு வரும் இந்திய அரசு, நிதி வழங்கலிலும் தமிழ்நாட்டுக்கு எதிராக – இனப்பாகுபாட்டுடன் செயல்படுவது இதற்கு முன்னரே பலமுறை அம்பலமாகியிருக்கிறது.

கடந்த 1991ஆம் ஆண்டின் பிற்பகுதியில், காவிரி டெல்டா மாவட்டங்களில் இதேபோன்று பெருமழையும் வெள்ளமும் பெரும் சேதம் ஏற்படுத்தியது. சராசரியாக 864 மில்லி மீட்டர் மழை பெய்ய வேண்டிய நிலையில், அப்போது 2,814 மில்லி மீட்டர் மழைக் கொட்டியது. தமிழ்நாட்டின் பெரும்பகுதி மக்கள் வெள்ளத்தால் சேதங்களைச் சந்தித்தனர். சற்றொப்ப 185 பேர் பலியாயினர். அப்போது இந்திய அரசு என்ன செய்தது தெரியுமா? தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட்டு வந்த மானிய விலை அரிசியை திடீரென 81,000 டன்னிலிருந்து 65,000 டன்னாக குறைத்தது, இந்திய அரசு!

கடந்த 08.03.2016 அன்று, இந்திய மக்களவையில் இந்திய அரசின் உள்துறை இணையமைச்சர் கிரண் ரிஜ்ஜூ, கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கும்போது, (கேள்வி எண் : 158), தேசியப் பேரழிவு நிதியிலிருந்து (National Disaster Response Fund – NDRF), எந்தெந்த மாநிலங்களுக்கு எவ்வளவு தொகை அளிக்கப்பட்டிருக்கின்றன எனத் தெரிவித்தார்.

அதன்படி, 2015 – 2016 காலகட்டத்தில் நடைபெற்ற புயல், பெருவெள்ளம், நிலச்சரிவு, மேக வெடிப்பு, நிலநடுக்கம் உள்ளிட்ட பேரழிவுகள் காரணமாக உத்திரப் பிரதேசத்தில் இடிந்து போன வீடுகளின் மொத்த எண்ணிக்கை 14. இறந்த கால்நடைகளின் எண்ணிக்கை 15. இறந்த மனிதர்களின் எண்ணிக்கை 40 என்று அவர்களது கணக்கீடு கூறியது. ஆனால், தேசியப் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து அம்மாநிலத்திற்கு வழங்கப்பட்ட நிதியோ 2,875 கோடி ரூபாய்!

இராசஸ்தானிலோ, இடிந்த வீடுகளின் மொத்த எண்ணிக்கை 17, இறந்த மனிதர்களின் எண்ணிக்கை 40. ஆனால் ஒதுக்கப்பட்ட பேரிடர் நிதியோ 1378.13 கோடி ரூபாய்!

இயற்கைப் பேரிடர் நடைபெற்ற மாநிலங்களின் பட்டியலில் இடம்பெறாத கர்நாடக மாநிலத்துக்குக் கூட 1645.53 கோடி ரூபாய் வழங்கப்பட்டதாக அவர் அறிவித்தார்.

ஆனால், தமிழ்நாட்டில் 2015 – 2016 காலகட்டத்தில் நடந்த புயல் பேரிடர் காரணமாக சற்றொப்ப 4,75,762 வீடுகள் இடிந்து வீழ்ந்தன; 12,030 கால்நடைகள் உயிரிழந்தன; 470 மனித உயிர்கள் பலியாகின. இவ்வளவு இழப்பிற்குப் பிறகும் அப்போது தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட்ட பேரிடர் நிதி வெறும் 2195.45 கோடி ரூபாய் மட்டுமே!

தமிழ்நாட்டிலிருந்து பல இலட்சம் கோடி ரூபாய் வருமானம் பெற்றுக் கொள்ளும் இந்திய அரசு, பேரிடர் காலங்களில் கூட நமக்கு ஏற்பட்ட இழப்புகளை ஈடுகட்ட போதிய அளவில் நிதி அளிக்க மறுப்பதற்குப் பெயர் இனப்பாகுபாடு அல்லாமல் வேறென்ன?

நாளெல்லாம் இந்திய செல்வத்தை அள்ளிச் சென்ற வெள்ளை ஏகாதிபத்திய அரசைவிட தமிழ்நாட்டைக் கொடுமையாகக் கொள்ளை அடிக்கும் தில்லி ஏகாதிபத்தியத்தின் இந்த இனப்பாகுபாட்டைப் புரிந்து கொண்டு, அதற்கு எதிராகச் செயலாற்ற வேண்டியதே இன்றைய தேவை!

“கசா” புயல் தமிழர்களுக்கு வழங்கியுள்ள அரசியல் பாடம் இது!

– க.அருணபாரதி
தலைமைச் செயற்குழு உறுப்பினர்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்.

Leave a Response