பிக்பாஸ் 2 நிகழ்ச்சி, 98 நாட்களாக நடைபெற்று வருகிறது. இன்னும் 5 நாட்கள் கூடுதலாக்கப்பட்டிருக்கிறது. 16 பேர் பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்தார்கள். அவர்கள் ஒவ்வொருவராக நாமினேட் செய்யப்பட்டு வெளியேறினார்கள்.
அனந்த் வைத்தியநாதன், மமதி, ரம்யா, வைஷ்ணவி, மஹத், ஷாரிக் என பலரும் வெளியேறிக்கொண்டே இருந்தார்கள். அதையடுத்து, அதேபோல நித்யா வெளியேறினார். பொன்னம்பலம் வெளியேறினார்.
இதன் பிறகு பாலாஜி, யாஷிகா, மும்தாஜ், சென்றாயன், டேனியல், ஐஸ்வர்யா, ரித்விகா, ஜனனி என இருந்தார்கள். பிறகு வைல்டு கார்டு மூலம் விஜயலட்சுமி உள்ளே வந்தார். பிக்பாஸ் வீடு களைகட்டியது.
இந்த நிலையில், டேனியல் வெளியேறினார். வெளியேறிய கையுடன் காதலித்த பெண்ணை திருமணம் செய்துகொண்டார். அதேபோல் அடுத்த வாரத்தில் சென்றாயன் வெளியேறினார். இப்போது பிக்பாஸ் வீட்டில் பாலாஜி மட்டும்தான் ஆண். மற்ற அனைவரும் பெண்கள்.
இதையடுத்து மும்தாஜ் வெளியேறினார். மும்தாஜ் வெளியேறும்போதுதான் அவர் எவ்வளவு அன்பானவர் என்பதைப் பலரும் புரிந்துகொண்டார்கள்.
நேற்றைய நிகழ்ச்சியில், இந்த முறை இரண்டுபேர் வெளியேறுவார்கள் என கமல் தெரிவித்தார். முதல் கட்டமாக, பாலாஜி வெளியேறுகிறார் என அறிவித்தார்.
பிக்பாஸ் வீட்டில் இருந்து அரங்கிற்கு வந்த பாலாஜி பேசியதாவது:
பிக்பாஸ் வீடு, எனக்குள் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. கமல் சார் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் என்னை யோசிக்க வைத்தது. மனைவி முக்கியம், போஷிகா முக்கியம் என்பதை உணர்ந்தேன்.
கோபக்காரனாக, கெட்டவார்த்தை பேசுபவனாக இருந்தேன். புறம் பேசுவதாகச் சொன்னார்கள். கெட்டவார்த்தை குறைந்தது. புறம் பேசுவது விலகியது. கோபத்தை நிதானமாக்கிக் கொண்டேன். எல்லாம் கமல் சார் சொன்ன அறிவுரையால் விளைந்தவை.
இன்னொரு விஷயம். கவிஞர் சினேகன் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்த போது ஒன்றைச் சொன்னார். அதாவது, நீங்கள் செய்கிற தவறுக்கெல்லாம் உங்களைத் திட்டுகிறார் கமல் சார். ஆனால், வெளியே மக்களிடம் உங்களுக்காக பரிந்து பேசுகிறார். உங்களுக்கு சப்போர்ட் செய்து, தவறுகளைத் திருத்திக்கொள்வார்கள் என்று பேசுகிறார் என்று சொன்னார். இது என்னை ரொம்பவே பாதித்தது.
பிக்பாஸ் வீட்டுக்குள் வந்ததில் இருந்தே, வாராவாரம் சனிக்கிழமையில், கமல் சார் வருகிறார் என்பார்கள். உலக நாயகன் வருகிறார் என்பார்கள். ஆனால் என்னைப் பொருத்தவரை அப்பா வருகிறார், அவரைப் பார்க்கலாம் என்று சந்தோஷமாவேன். ஆமாம், கமல் சார் எனக்கு அப்பா மாதிரி.
கமல் சாரிடம் ஒரு வேண்டுகோள். நான் என் அப்பா கால்ல விழுந்து ஆசீர்வாதம் வாங்கினதே கிடையாது. தயவுசெஞ்சு, உங்க கால்ல விழுந்து ஆசீர்வாதம் வாங்கணும் சார். மறுக்காதீங்க சார்’ என்று சொல்லிவிட்டு, சாஷ்டாங்கமாக கமல் காலில் விழுந்தார்.