ரிக் மற்றும் ஃபோர்வெல் சேவைக்கு ஜிஎஸ்டியிலிருந்து விலக்கு – சத்யபாமா எம்.பி வலியுறுத்தல்

வேளாண்மைக்காக செய்யப்படும் ஆழ்குழாய் கிணறு தோண்டும் மற்றும் துளையிடும் ரிக் (RIG) பணிகளுக்கு சரக்கு மற்றும் சேவை வரியில் (GST) இருந்து விலக்கு அளிக்கக்கோரி இன்று 07.08.2018 பாராளுமன்றத்தில் திருப்பூர் எம்.பி சத்தியபாமா பேசியிருக்கிறார்.

அவருடைய பேச்சில்….

வேளாண்மை மற்றும் வேளாண் சார்ந்த பணிகளுக்காக துளையிடும் ரிக் (RIG) சேவைகளுக்கு சரக்கு மற்றும் சேவை வரியில் இருந்து விலக்களிக்கக்கோரி தென்னக வேளாண்மைக்கான ரிக் (RIG) உரிமையாளர்கள் சங்கத்தினர் மத்திய அமைச்சரிடம் வேண்டுகோள் வைத்துள்ளனர்.

எனது திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் ரிக் பணிகளை மட்டுமே நம்பி வாழும் நூற்றுக்கணக்கான ரிக்/போர்வெல் சேவை வழங்குவோர் உள்ளனர். இந்த தொகுதியில் சுமார் 70% சதவிகித வேளாண்மைப்பணிகள் நிலத்தடி நீரைச் சார்ந்து இருப்பதால் வேளாண்மைக்குத் தேவையான தண்ணீரை விவசாயிகள் பெற நிலத்தடி நீர் மற்றும் ரிக் (RIG) சேவை வழங்குவோர் முக்கியப் பங்குபணி ஆற்றுகின்றனர். பாசனத்துக்குத் தேவையான தண்ணீர், நதிகள் மற்றும் நீர்நிலைகள் மூலமாக கிடைக்கப்பெறாத பகுதிகளில் ரிக் (RIG) செயல்பாடுகள் மிகவும் அத்தியாவசியமானதாக உள்ளன.

ரிக் பணிகளுக்கான ஜி.எஸ்.டி வரி 18% சதவிகிதமாக உள்ளது. பெட்ரோல் மற்றும் டிசல் விலை உயர்வு மற்றும் பணியாளர்களுக்கான ஊதிய உயர்வு ஆகியவற்றால் அதிகம் ரிக் சேவை வழங்குவோர் ஏற்கனவே பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். எரிபொருள் மற்றும் ஊதியம் வழங்குவதற்கான செலவுகள் போர்வெல் சேவைகளை வழங்குவதற்கு ஆகும் செலவுகளில் 75% சதவிகிதத்துக்கும் அதிகமாக உள்ளது. எரிபொருள் மற்றும் ஊதியம் வழங்குவதற்கான செலவுகளை ஈடுகட்டவே துன்பப்படும் ரிக் உரிமையாளர்களுக்கு ஏற்கனவே ஜி.எஸ்.டி வரி செலுத்தப்பட்ட தொகைக்கு ஆன சலுகைகளைப் பெறும் INPUT TAX CREDIT வசதியும் கிடைப்பதில்லை. ரிக் மற்றும் போர்வெல் சேவை வழங்குவோருக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் இருப்பதால் பல இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர்.

எனவே மாண்புமிகு மத்திய அமைச்சர் அவர்கள் வேளாண்மை மற்றும் வேளாண் சார்ந்த பணிகளுக்காக துளையிடும் ரிக் (RIG) சேவைகளுக்கு சரக்கு மற்றும் சேவை வரியில் இருந்து விலக்களிக்க வேண்டும் என்று ரிக் உரிமையாளர்கள் மற்றும் விவசாயிகள் சார்பாக வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி.

இவ்வாறு அவர் பேசியிருக்கிறார்.

Leave a Response