2004 பாஜக செய்ததை 2026 இல் திருப்பிச் செய்த காங்கிரசு – பாராளுமன்ற பரபரப்பு

நாடாளுமன்றத்தில் 2026- 27 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை கூட்டத் தொடர் சனவரி 28 ஆம் தேதி தொடங்கியது. முதல் நாளில் இருஅவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையாற்றினார்.

பிப்ரவரி 1 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்றி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார்.

பிப்ரவரி 2 ஆம் தேதி மக்களவையில் குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் தொடங்கியது.

அப்போது முன்னாள் இராணுவ தளபதி நரவனேவின் நினைவுக் குறிப்பின் அடிப்படையில் எழுதப்பட்ட புத்தகத்தை மேற்கோள் காட்டி எதிர்க்கட்சித் தலைவர் இராகுல் காந்தி பேச முயன்றார். இந்திய, சீன எல்லைப் பிரச்சினை குறித்து அவர் பேசுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது.

இதன் காரணமாக கடந்த சில நாட்களாக காங்கிரசு உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மக்களவையில் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர்.

குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி பிப்ரவரி 4 புதன்கிழமை மாலை 5 மணிக்கு பதிலுரை அளிப்பார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் எதிர்க்கட்சிகளின் அமளியால் பிரதமரின் பதில் உரை இரத்து செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து மக்களவை நேற்று காலை கூடியதும் இராகுல் காந்தி பேசுவதற்கு அனுமதி வழங்கவேண்டும் என்று கோரி காங்கிரசு உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். அவர்களை அமைதி காக்குமாறு அவைத்தலைவர் ஓம் பிர்லா பலமுறை கூறினார்.ஆனால்,எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர்.

இதனால் மதியம் 12 மணி வரை மக்களவை ஒத்திவைக்கப்பட்டது. அவை 12 மணிக்குக் கூடிய பிறகும் அமளி நீடித்ததால் பிற்பகல் 2 மணி வரையும், அதில் இருந்து 3 மணி வரையும் ஒத்திவைக்கப்பட்டது. அவர்களின் அமளிக்கு நடுவே குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.

அப்போது அவைத்தலைவர் ஓம் பிர்லா கூறியதாவது….

புதன்கிழமை பிரதமர் மோடியின் இருக்கையைச் சூழ்ந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அநாகரிகமாக போராட்டம் நடத்தினர். குறிப்பாக பெண் உறுப்பினர்கள், பிரதமரின் இருக்கையைச் சூழ்ந்த காட்சியை ஒட்டுமொத்த நாடும் பார்த்து அதிர்ச்சியில் உறைந்தது. பிரதமர் மீது தாக்குதல் நடத்த அவர்கள் திட்டமிட்டு இருந்தனர். அன்றைய தினம் பிரதமருக்கு என்ன வேண்டுமானாலும் நடந்திருக்கலாம். இது இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் கரும் புள்ளியாகும்.அசம்பாவிதங்களை தவிர்க்கவே அவைக்கு வரவேண்டாம் என்று பிரதமர் நரேந்திர மோடியிடம் வேண்டுகோள் விடுத்தேன்.இதை பிரதமரும் ஏற்றுக் கொண்டார்.ஜனநாயகத்தில் கருத்து வேறுபாடுகள் இயல்பானது.ஆனால் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவையின் மாண்பைச் சீர்குலைக்கும் வகையில் நடந்து கொண்டனர். குறிப்பாக காங்கிரசு உறுப்பினர்கள் மிகவும் அநாகரிகமாக செயல்பட்டனர். அவர்களின் நடவடிக்கைகளை மிகவும் வன்மையாக கண்டிக்கிறேன்.

இவ்வாறு ஓம் பிர்லா தெரிவித்தார்.

இதுகுறித்து காங்கிரசு பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது….

பிரதமர் நரேந்திரமோடியைத் தாக்கும் வகையில் நாங்கள் யாரும் செயல்படவில்லை.அவர் மீது தாக்குதல் நடத்த நாங்கள் திட்டமிடவும் இல்லை.இதுதொடர்பான குற்றச்சாட்டு அப்பட்டமான பொய்.மூன்று பெண்களைப் பார்த்து பிரதமர் மோடி அஞ்சுகிறார்.மக்களவைத் தலைவருக்கு பின்னால் அவர் ஒளிந்து கொண்டிருக்கிறார் என்று தெரிவித்தார்.

2004 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கை கூட்டத் தொடரின்போது பாஜக உறுப்பினர்களின் அமளியால் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கின் பதிலுரை இல்லாமல் குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 22 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது மீண்டும் பிரதமர் நரேந்திர மோடியின் பதில் உரை இல்லாமல் மக்களவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

Leave a Response