பேராசிரியை நிர்மலாதேவியைத் தப்பவைக்க முயற்சி?

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக்கல்லூரியில் கணிதத்துறை பேராசிரியையாக பணியாற்றி வந்தவர் நிர்மலாதேவி (வயது 47). இவர் கடந்த 2008-ம் ஆண்டு இந்த கல்லூரியில் பணியமர்த்தப்பட்டுள்ளார். அருப்புக்கோட்டை அருகே உள்ள ஆத்திப்பட்டி காவியா நகரில் குடியிருந்து வருகிறார்.

இவருடைய கணவர் சரவண பாண்டியன். வெளி நாட்டில் வேலை பார்த்து திரும்பிய இவர் தற்போது ஒப்பந்தகாரராக உள்ளார். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

மூத்தமகள் சென்னையில் உள்ள தனியார் பல் மருத்துவக்கல்லூரியில் படித்து வருகிறார். கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக சரவணபாண்டியன் தனது 2 மகள்களுடன் தனியாக வசித்து வருகிறார்.

நிர்மலாதேவி தேவாங்கர் கலைக்கல்லூரியில் இறுதி ஆண்டு பட்டப்படிப்பு படிக்கும் 4 மாணவிகளை செல்போனில் தொடர்பு கொண்டு அவர்களை பாலியல் ரீதியாக தவறாக வழிநடத்தும் வகையில் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. அவர் பேசிய ஆடியோ விவரங்கள் சமூகவலைத்தளங்களில் பரவிய நிலையில் நிர்மலாதேவி கல்லூரி நிர்வாகத்தால் பணியிடைநீக்கம் செய்யப்பட்டார்.

இதற்கிடையில் அவரைக் கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. அதன் பேரில் கல்லூரி செயலாளர் ராமசாமி அருப்புக்கோட்டை நகர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் நிர்மலாதேவியின் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து பேராசிரியை நிர்மலாதேவியை நேற்று முன்தினம் கைது செய்து அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் காவல்நிலையத்துக்குக் கொண்டு சென்றனர்.

இதனையடுத்து இவ்வழக்கின் விசாரணை அதிகாரியாக அருப்புக்கோட்டை மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் மயில் நியமிக்கப்பட்டார். அவரது முன்னிலையில் நேற்று முன்தினம் இரவு மாவட்ட காவல்கண்காணிப்பாளர் ராஜராஜன், கூடுதல் கண்காணிப்பாளர் மதி, அருப்புக்கோட்டை துணை கண்காணிப்பாளர் தனபால் ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையின் தொடக்கத்தில் நிர்மலாதேவி தான் செல்போனில் பேசியதைத் தவறாகப் புரிந்து கொண்டு விட்டார்கள் என்று மட்டும் வலியுறுத்திக் கூறியதாகச் சொல்லப்படுகிறது. கல்லூரி நிர்வாகம் பழிவாங்கும் நோக்கத்துடன் தன்மீது நடவடிக்கை எடுத்துவிட்டதாக அவர் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. ஆனாலும் நிர்மலாதேவி, மாணவிகளுடனான செல்போன் உரையாடலில் குறிப்பிட்ட உயர் அதிகாரிகள் யார் என்று கேட்டபோது பதில் சொல்ல மறுத்துவிட்டார்.

நேற்று காலையில் மீண்டும் பேராசிரியை நிர்மலாதேவியிடம் விசாரணையைத் தொடர்ந்தனர். விசாரணையின் போது, நிர்மலாதேவி தனக்கு இம்மாதிரியான தகவலை மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் துறைத்தலைவராகப் பணியாற்றும் ஒருவரும், ஆராய்ச்சிப் படிப்பை மேற்கொண்ட மற்றொருவரும் தெரிவித்ததாகக் கூறியுள்ளார். துறைத்தலைவராக பணியாற்றும் நபர் அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரியிலேயே பேராசிரியை நிர்மலாதேவி முன்பு படித்த போது அவருடன் படித்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து காவல்துறையினர் நிர்மலாதேவி தெரிவித்த அந்த 2 நபர்களிடமும், விசாரணை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் பேராசிரியை நிர்மலாதேவி தெரிவித்துள்ள இந்த 2 நபர்கள் தவிர வேறு யாரேனும் நிர்மலாதேவியை பின்னால் இருந்து இயங்கி உள்ளார்களா என்பது பற்றியும் காவல்துறை விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இவ்வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில்,

பேராசிரியை நிர்மலாதேவி மாணவிகளிடம் செல்போனில் தொடர்பு கொண்டு பேசியபோது மிகுந்த ஜாக்கிரதையாக கவனத்துடன் வார்த்தைகளை பயன்படுத்தி உள்ளார். எந்த இடத்திலும் பாலியல் தொடர்பான வார்த்தைகளை அவர் பயன்படுத்தவில்லை என்று காவல்துறை அதிகாரிகள் தமக்கு நெருக்கமானவர்களிடம் சொல்லிக்கொண்டிருக்கிறார்களாம்.

இதன்மூலம் வழக்கு அடிப்படையிலேயே பலமிழக்க வைக்கப்படுகிறதோ எனும் சந்தேகம் எழுந்துள்ளது.

Leave a Response