மோடி தமிழகம் வருகை – அதிமுக தவிர அனைத்துக்கட்சிகளும் எதிர்ப்பு

இந்திய இராணுவக் கண்காட்சி தொடக்க விழா, அடையாறு புற்றுநோய் மருத்துவமனை வைர விழா ஆகியவற்றில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஏப்ரல் 12,2018) சென்னை வருகிறார்.

சென்னை அருகே கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள திருவிடந்தையில் பாதுகாப்புத் துறை சார்பில் ‘டெபெக்ஸ்போ-2018’ என்ற ராணுவத் தளவாட கண்காட்சி நேற்று தொடங்கியது. இந்தக் கண்காட்சியை முறைப்படி தொடங்கி வைத்து பார்வையிடுதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று சென்னை வருகிறார். 9.20-க்கு சென்னை விமான நிலையம் வருகிறார்.

9.25 மணிக்கு ஹெலிகாப்டரில் மாமல்லபுரம் சென்று, அங்கிருந்து கார் மூலம் இராணுவக் கண்காட்சி நடக்கும் திருவிடந்தைக்கு 9.50 மணிக்கு செல்கிறார். பின்னர் அங்கிருந்து பகல் 12.30 மணிக்கு ஹெலிகாப்டரில் புறப்பட்டு, சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள கிரிக்கெட் மைதானத்துக்கு வருகிறார். அருகில் உள்ள அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் நடக்கும் வைர விழாவில் பங்கேற்ற பின்னர், ஹெலிகாப்டர் மூலம் சென்னை விமான நிலையம் செல்கிறார். பிற்பகல் 2.20-க்கு விமானப்படை விமானத்தில் டெல்லி திரும்புகிறார்.

பிரதமரின் வருகைக்காக, ஐஐடி வளாகத்தில் உள்ள கிரிக் கெட் மைதானத்தில் ஹெலிகாப்டர் இறங்கு தளம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து மருத்துவமனைக்குச் செல்ல வசதியாக சுற்றுச்சுவர் இடிக்கப்பட்டு பாதை அமைக்கப்பட்டுள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தமிழகத்துக்கு இரண்டகம் செய்ததால் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கறுப்புக் கொடி காட்டப் போவதாக அதிமுக, பாஜக தவிர தமிழகத்திலுள்ள அனைத்துக் கட்சிகளும் அறிவித்துள்ளன.

இதனால் பிரதமர் சாலையில் செல்லாமல் வான்வழியாகவே செல்லப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சொந்தநாட்டுக்குள்ளேயே சாலையில் பயணம் செய்யமுடியாத பிரதமர் எஉம் பெயரைப் பெற்றிருக்கிறார் மோடி என்று அனைவரும் விமர்சனம் செய்கிறார்கள்.

Leave a Response