கட்சிகள் இன்றி திரண்ட பெருங்கூட்டம் – ஸ்டெர்லைட் நிர்வாகம் மிரண்டது

தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை அமைந்துள்ளது. இந்த ஆலையால் சுற்றுச்சூழல் மாசுபடுவதாகவும் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறி இந்த மாவட்ட மக்கள் மற்றும் மாணவர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே ஸ்டெர்லைட் ஆலையை விரிவாக்கம் செய்ய நிர்வாகம் திட்டமிட்டது. அதற்கான முதற்கட்டப் பணிகளை தொடங்கியுள்ளது. இதற்கு அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆலை அமைந்துள்ள குமரெட்டியார்புரம் கிராம மக்கள் தங்களின் வாழ்வாதாரம் இதனால் பாதிக்கப்படும் என்பதை வலியுறுத்தி பிப்ரவரி மாதம் முதல் பல கட்டங்களாகப் போராடி வருகின்றனர்.

தூத்துக்குடி ராஜாஜி பூங்காவில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகக் கடந்த 17-ம் தேதி விழிப்புணர்வு பிரசார பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் இந்தக் கூட்டத்திற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுத்துவிட்டது. இதையடுத்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த உயர்நீதிமன்றம் 24-ம் தேதி தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராட்டம் நடத்த அனுமதியளித்து உத்தரவிட்டது.

நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து மார்ச் 24 அன்று ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்கள் இயக்கத்தினர் மற்றும் வியாபாரிகள், பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டன. தானிகள், பங்குதானிகள் மற்றும் சிற்றுந்துகள் ஆகியன ஓடாததால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மாலையில் விவிடி.சிக்னல் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அரசியல்கட்சிகள் எதுவும் முன்னெடுக்காத இந்தப்போராட்டத்துக்கு மிகப்பெரிய கூட்டம் திரண்டதால் ஸ்டெர்லைட் நிர்வாகம் அதிர்ச்சி அடைந்துள்ளதாகச் சொல்லப்படுகிறது.

Leave a Response