குஜராத்தில் வரும் 9 மற்றும் 14 ஆம் தேதிகளில் இரண்டு கட்டமாக சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக பாரதீய ஜனதா கட்சிதான் ஆட்சியமைத்து வருகிறது.
தற்போது லோக்நிதி – சி.எஸ்.டி.எஸ் – ஏ.பி.பி செய்திகள் நடத்திய இறுதிகட்ட கருத்துக்கணிப்புகளின் படி பாஜக, காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளும் 43 சதவிகித வாக்குகளைப் பெற்று சமநிலையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நேற்று மாலை வெளியான இந்த கருத்துக்கணிப்பு முடிவுகளின் படி, பாஜகவின் வாக்கு சதவிகிதம் 16 சதவிகிதம் சில மாதங்களில் குறைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. அதாவது இதே அமைப்புகள் கடந்த ஆகஸ்ட் மாதம் எடுத்த கருத்துக்கணிப்பில் பாஜக 59 சதவிகித வாக்குகள் பெறும் என்றும், நவம்பர் இறுதி வாரத்தில் எடுத்த கருத்துக்கணிப்பில் 43 சதவிகித வாக்குகள் பெறும் என்றும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
குஜராத்தில் 22 ஆண்டுகளாக எதிர்க்கட்சியாக உள்ள காங்கிரஸ் கட்சிக்கு இது முக்கியமான காலகட்டம். கடந்த ஆகஸ்ட் மாத கருத்துக்கணிப்பில், காங்கிரஸ் 29 சதவிகித வாக்குகள் பெறும் என்று கருத்துக்கணிப்புகள் வெளியானது. நவம்பர் இறுதி வாரத்தில் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பின் படி அக்கட்சியின் வாக்குகள் 14 சதவிகிதம் உயர்ந்து 43 சதவிகிதமாக உள்ளது. எனவே பாஜகவும், காங்கிரசும் சமமான வாக்குகள் பெறும் நிலையில் உள்ளதாகத் தெரிகிறது.
அதேபோல், ஆகஸ்ட் மாதத்தோடு ஒப்பிடும்போது பிரதமர் மோடியின் புகழ் 82 சதவீதத்திலிருந்து 18 புள்ளிகள் குறைந்து 64 சதவிகிதமாகியுள்ளதாகவும், ராகுல் காந்தியின் புகழ் 40 சதவிகிதத்திலிருந்து 57 சதவிகிதமாக உயர்ந்துள்ளதாகவும் இந்த புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. இந்த மிகப்பெரிய மாற்றம் குஜராத்தின் வியாபார சமூகத்தாலேயே நிகழ்ந்துள்ளதாகவும் இந்த கருத்துக்கணிப்புகள் தெளிவாகக் கூறுகின்றன.
குறிப்பாக, இம்முறை பெண்களுடைய வாக்குகள், காங்கிரசுக்கு செல்ல வாய்ப்புள்ளதாக தெரிகிறது. முந்தைய கணிப்புகளின் படி, பாஜகவுக்கான பெண் வாக்காளர்களின் ஆதரவு 50 சதவிகிதமாக இருந்ததாகவும், காங்கிரசுக்கான ஆதரவு 39 சதவிகிதமாக இருந்ததாகவும், நவம்பர் மாத கருத்துக்கணிப்புகளின் படி, பாஜகவுக்கான ஆதரவு 42 சதவிகிதமாகவும், காங்கிரசுக்கான பெண்களின் ஆதரவு 44 சதவிகிதமாகவும் மாறியுள்ளதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.
லோக்நிதி – சி.எஸ்.டி.எஸ் – ஏ.பி.பி செய்திகள் நடத்திய இந்த கருத்துக்கணிப்புகள் கடந்த நவம்பர் 23 முதல் 30 ஆம் தேதி வரை, 50 தொகுதிகளில் உள்ள 200 வாக்கு மையங்களில் 3,655 வாக்காளர்களிடம் நடத்தப்பட்டது என்று அந்நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. குஜராத்தில் மொத்தம் 182 தொகுதிகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.