ஈபிஎஸ் -ஓபிஎஸ் அணியின் 12 திருப்புமுனைத் தீர்மானங்கள் – பேராசிரியர் ராஜநாயகம்

அ.தி.மு.க அம்மா மற்றும் புரட்சித்தலைவி அம்மா அணிகள் இணைந்த பின்னர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று அக்கட்சியின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்று நடைபெற்றது.

அதில், தமிழக அரசின் சார்பின் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை வெகு சிறப்பாக நடத்துவதற்குப் பாராட்டு தெரிவித்தும், மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவால் முன்னர் நியமிக்கப்பட்ட கட்சி நிர்வாகிகள் அந்தந்த பொறுப்புகளில் தொடர்ந்து நீடிப்பார்கள். கட்சிப்பொறுப்புகளில் புதியவர்களை நியமித்தும், பொறுப்பு வகித்து வந்தவர்களை நீக்கியும் டி.டி.வி தினகரன்
வெளியிட்ட அறிவிப்புகள் செல்லாது எனவும், பொதுச்செயலாளராக சசிகலாவை நியமனம் செய்தது செல்லாது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழகத்தின் முதலமைச்சர் கலந்துகொண்டிருக்கும் குழுக்கூட்டத்தில் மக்கள் நலன் சார்ந்து ஒரு தீர்மானம் கூட நிறைவேற்றப்படவில்லை, சமகாலச் சிக்கல்கள் எதையும் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை எனும் கோபம் வெகுமக்கள் மத்தியில் இருக்கிறது.

அவற்றைப் பிரதிபலிக்கிற மாதிரி பேராசிரியர் ராஜநாயகம் எழுதியுள்ள குறிப்பு….

திருப்புமுனைத் தீர்மானங்கள்…12
#
1. அனிதா மரணத்துக்கு ஆழ்ந்த அனுதாபங்களை இந்தப் பொதுக்குழு தெரிவித்துக் கொள்கிறது.
2. அனிதா மரணத்துக்கு இடமளிக்கும் விதத்தில் நடந்துகொண்ட அரசு மன்னிப்புக்கோர வலியுறுத்துகிறது.
3. நீட் தேர்வுக்கு எதிராகப் போராடும் மாணவர்களை மனதாரப் பாராட்டுகிறது.
4. கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற மத்திய அரசுக்குக் கோரிக்கை விடுக்கிறது.
5. அரசு ஊழியர்களின் போராட்டத்தை நிறுத்த அரசு முறையான பேச்சுவார்த்தை நடத்துமாறு கேட்டுக்கொள்கிறது.
6. போராடும் ஆசிரியர்களால் மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகோள் விடுக்கிறது.
7. சமச்சீர் கல்வியை மேம்படுத்தி, தாய்மொழிவழிக் கற்றலை நடைமுறைப்படுத்திக் கல்வித்தரத்தை உயர்த்த வலியுறுத்துகிறது.
8. டெங்கு காய்ச்சலை உடனடியாய்க் கட்டுப்படுத்தி ஏழை எளிய மக்களின் உயிர்களைக் காப்பாற்ற அரசுக்கு ஆணையிடுகிறது.
9. மரணக்கூடங்களாகி வரும் மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதாரநிலையங்களின் தேவைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டுகிறது.
10. விவசாயிகளின் வாழ்வாதாரங்களைக் கொள்ளைகொள்ளும் திட்டங்களை உறுதியாய் எதிர்த்துத் தடுக்கக் கோருகிறது.
11. இயற்கை வளம் பேணி, நிலைத்திட்டங்கள், நலத்திட்டங்கள் மூலம் மக்கள் வாழ்வை மேம்படுத்த உறுதிபூணுமாறு கேட்டுக்கொள்கிறது.
12. மேற்கண்ட எதையும் இப் பொதுக்குழு செய்யாததால், மக்களை மறந்த ஆட்சியையும் கட்சியையும் இத்துடன் கலைத்துவிடுவதாக ஏகமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

Leave a Response