அனிதாவின் தற்கொலைக்கு அவருடைய சகோதரர் மணிரத்தினம்மீது பழிசுமத்திக் கருத்துகள் பதிவிடப்படுகின்றன. குறிப்பாக,
அவதூறு செய்தி வெளியிட்டுள்ள ‘நெற்றிக்கண்’ இதழுக்கு அனிதாவின் அண்ணன் மணிரத்தினத்தின் பதில். கிருஷ்ணசாமி, தமிழிசைகளுக்கும் இது தான் பதில்.
மணிரத்தினம் தன்னுடைய முகநூல் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார்.
அந்தப் பதிவில், ”என் தங்கையின் இழப்பிலிருந்து வெளிவர முடியுமா என்று தெரியவில்லை? இருப்பினும், தமிழகத்தின் தங்கை அனிதாவுக்காக நான் பேசித்தான் ஆக வேண்டும். தி.மு.க-வின் செந்துறை ஒன்றியச் செயலாளர் அண்ணன் ஞானமூர்த்தி என்பது எனக்குத் தெரியும். அவரை நான் பார்த்திருக்கிறேன். ஆனால், இதுநாள்வரை சந்தித்தது இல்லை. இருக்கட்டும். ஞானமூர்த்தி அண்ணன்தான் என்னை, சிவசங்கர் அண்ணனிடம் அழைத்துச் சென்றதாக அந்த பத்திரிகையில் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால், நான் முதன்முதலாகச் சிவசங்கர் அண்ணனைச் சந்தித்தது ஜூலை 12 அன்று தி.க தலைமையில் நடைபெற்ற நீட் எதிர்ப்பு போராட்டத்தில்தான். அங்குகூட நான், ஞானமூர்த்தி அண்ணனைப் பார்க்கவில்லை. சிவசங்கர் அண்ணனைச் சந்தித்த பத்து நாள்களுக்குப் பிறகுதான் (23/07/2017) நாங்கள் பொறியியல் கலந்தாய்வுக்கே சென்றோம்.
அப்படியிருக்கையில், பொறியியல் படிக்க எப்படி உதவி கேட்டிருக்க முடியும்? ஜூலை 12 அன்று அனிதா பற்றி, முகநூலில் அண்ணன் சிவசங்கர் அவர்கள் பதிவிடுகிறார்கள். அதைப் பார்த்து மாணவர் அமைப்பினர் என்னைத் தொடர்புகொண்டு ஜூலை 17 பத்திரிகையாளர் சந்திப்புக்கு அழைப்புவிடுத்தனர். ஜூலை 20 கால்நடை மருத்துவக் கலந்தாய்வு, ஜூலை 23 பொறியியல் கலந்தாய்வு ஆகியவற்றை முடித்துவிட்டு வந்துவிடலாம் என்று சென்னை கிளம்பினோம். பத்திரிகையாளர் சந்திப்பு முடிந்த பிறகு, அண்ணன் பிரின்ஸ் கஜேந்திரபாபு அவர்களை முதன்முதலாகச் சந்தித்தேன். அன்றே எதிர்க்கட்சித் தலைவர்களை மாணவர்கள் அனைவரும் சந்தித்தோம். நான் சந்திக்கத் துடித்தது அண்ணன் எழுச்சித் தமிழர் அவர்களைத்தான். அன்று, அவர் திருநெல்வேலி சென்றுவிட்டதாகச் சொன்னார்கள். அதன்பிறகு, சட்டமன்ற உறுப்பினர்கள் விடுதிக்குச் சென்று தோழர்கள் ஹமீது அன்சாரி மற்றும் தனியரசு அவர்களைச் சந்தித்தோம். அங்கிருந்து பெரியார் திடல் சென்று ஆசிரியர் மற்றும் கவிஞர் அவர்களை சந்தித்தோம். அங்கேயே உணவருந்தினோம். தளபதி அவர்களைச் சந்திக்க மாலையில் நேரம் ஒதுக்கியுள்ளதாகச் சொன்னார்கள். அதன் பின்புதான் நான், சிவசங்கர் அண்ணனிடம்… ‘தளபதியைச் சந்திக்கப் போகிறோம்’ என்று சொன்னேன். (அவர், என்னைத் தளபதியிடம் அறிமுகப்படுத்தவில்லை). சி.பி.ஐ., சி.பி.எம் தோழர்களைச் சந்தித்துவிட்டு மாலையில் அண்ணா அறிவாலயத்தில் தளபதி அவர்களையும் சந்தித்து எங்கள் கோரிக்கைகளை வலியுதித்தினோம். தளபதியுடனான சந்திப்புதான் நீண்ட சந்திப்பு. அவசரப்படாமல் நாங்கள் அனைவர் சொன்னதையும் அவர் காதுகொடுத்துக் கேட்டார்.
அடுத்த நாள், சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் (த.நா) தலைவர் திருநாவுக்கரசர் அவர்களைச் சந்தித்தோம். அன்றும் திருமா அண்ணன் சென்னையில் இல்லை. அடுத்த நாள், முதல்வரைச் சந்திக்கலாம் என்று சட்டப்பேரவைக்குச் சென்றோம். சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்களை மாலையில் சந்தித்தோம். ‘தமிழக அரசு மட்டும் தனியாகப் போராடிக் கொண்டிருக்கிறது. ‘நீட்’டால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் அனைவரும் இதுபோன்று முன்வர வேண்டும். நீங்கள் எல்லாம் வந்திருப்பது மகிழ்ச்சி’ என்றவர், இன்று இரவு நீட் தொடர்பாகப் பேசுவதற்கு டெல்லி செல்வதாகச் சொன்னார். அதன் பிறகு ஆகஸ்ட 16 அன்று மாலை, ‘அரசு சார்பாக நீட்டால் பாதிக்கப்பட்ட மாணவர்களை அரசு செலவில் உச்ச நீதிமன்றம் அழைத்துச் செல்கிறார்கள். இரவுக்குள் சென்னை வரை இயலுமா’ என்று கேட்டார்கள்? ‘இரவுக்குள் வர முடியாது’ என்று சொல்லிவிட்டேன்.
அதன்பிறகுதான் இரவு, பிரின்ஸ் கஜேந்திர பாபு அண்ணன் என்னை அழைத்து அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்களுடனும் கருணாஸ் எம்.எல்.ஏ-வுடனும் பேசினார்கள். ‘நாளை உச்ச நீதிமன்றத்தில் நீட் தொடர்பான வழக்கு நடைபெற உள்ளதால், தொலைக்காட்சியில் மட்டும் பேசினால் போதாது. பாதிக்கப்பட்ட மாணவர் யாரையாவது அழைத்து வாருங்கள்’ என்று அவர்கள் சொன்னதாகச் சொன்னார். ‘செலவுகளை நான் பார்த்துக்கொள்கிறேன். வரமுடியுமா மணி’ என்று கேட்டார். அரசு அழைத்தும் செல்லவில்லை என்றால், அது நல்லா இருக்காது. இந்த ஓர் ஆண்டுக்கு மத்திய அரசு எப்படியும் விலக்கு வழங்கிவிடும் என்ற ஆசையில், இரவு சென்னை கிளம்பி ஆகஸ்ட் 17 விடியற்காலை விமான நிலையம் வந்தடைந்தேன். எனக்கு முன்பே பிரின்ஸ் அண்ணன் காத்துக்கொண்டிருந்தார்.
விமான நிலையத்திலேயே காலைக்கடன்களை முடித்துக்கொண்டு, ஆளுக்கு இரண்டு இடலி சாப்பிட்டுவிட்டு 9.50 விமானத்துக்குக் காத்திருந்தோம். அந்தச் சமயத்தில்தான் சிவசங்கர் அண்ணன் என்னைத் தொடர்புகொண்டு… ‘மணி டெல்லி போறீங்களா’ என்று கேட்டார். மேலும், ‘பிரபல நியூஸ் சேனலைச் சேர்ந்த ஒருவரை உங்கள் எண்ணுக்கு அழைக்கச் சொல்கிறேன்’ என்றார். அதற்குள் அந்த நியூஸ் சேனலைச் சேர்ந்தவர், பிரின்சு அண்ணன் எண்ணுக்குத் தொடர்புகொண்டு அனிதாவிடம் பேசினார். நாங்கள் மூன்று பேர் மட்டும்தான் டெல்லி சென்றோம். மதியம் இரண்டு மணியளவில் உச்ச நீதிமன்றத்தை அடைந்தோம். மதியம் சாப்பிடக்கூட நேரமில்லை. மாலையில் சம்சா மட்டும் சாப்பிட்டோம். இரவு 9.30-க்குச் சென்னைக்கு விமானம். இரண்டு மணிநேரம் முன்கூட்டியே செல்ல வேண்டும். நள்ளிரவு 12.30-க்கு சென்னை வந்தோம். இரவு முழுவதும் என் மடியில்தான் என் தங்கை தூங்கினார். காலை 6.30-க்கு வீட்டுக்கு வந்துவிட்டோம். …….. ஹோட்டல் எங்கு இருக்கிறது என்று எனக்குத் தெரியாது? இதுநாள் வரை விமானக் கட்டணம்கூட எவ்வளவு ஆயிற்று என்றும் தெரியாது.
அது சரி, தி.மு.க-வில் செல்வராஜ் யார் என்றே எனக்குத் தெரியாது. எனது முகநூல் பதிவுகளை எல்லாம் புரட்டிப் பாருங்கள். தி.மு.க ஆதரவு பதிவை எங்காவது காட்ட முடியுமா? நான் இதுநாள்வரை என் தோழிகளைக்கூட வாடி, போடி என்று அழைத்தது இல்லை. அப்படி எங்களை வளர்க்கவும் இல்லை. நானோ, எங்கள் தந்தையோ, என் தம்பிகளோ ஒருநாள்கூட அனிதாவை நோக்கி கை ஓங்கியது இல்லை. ஒருவேளை, தி.மு.க ஆளும் கட்சியாக இருந்திருந்தாலும் அரசின் உதவிகளை நிராகரித்திருப்போம். உங்கள் தங்கை, தாயைக் கொன்று உங்க வேலை முன்னேற்றத்துக்குப் பயன்படுத்த உங்களின் புத்தி வேலை செய்யலாம்”
என்று அதில் குறிப்பிட்டிருக்கிறார்.