தமிழுக்காக 9 நாட்களாக உண்ணாநிலை, ஒருவரும் கண்டுகொள்ளவில்லை – உணர்வாளர்கள் கொதிநிலை

தமிழை வழக்காடும் மொழியாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக எழுப்பப்பட்டு வருகிறது. முந்தைய திமுக ஆட்சியின் சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை அலுவல் மொழியாக்குவதற்கான தீர்மானத்தை 06.12.2006 அன்று சட்டப்பேரவையில் அப்போதைய முதல்வர் கலைஞர் கொண்டு வந்து நிறைவேற்றினார். ஆனாலும் அது நடைமுறைக்கு வரவில்லை.

சென்னை உயர் நீதிமன்றத்திலும், அதன் மதுரைக் கிளையிலும் தமிழை வழக்காடும் மொழியாக ஆணையிட வலியுறுத்தி, வழக்கறிஞர்கள் மற்றும் இன உணர்வாளர்கள் 9 பேர், சூலை 27 – 2017 முதல் மதுரை மாநகர் காளவாசல் பகுதியில், காலவரம்பற்ற உண்ணாப் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இந்த உண்ணாப் போராட்டத்தில், வழக்கறிஞர் கு. பகத்சிங், வழக்கறிஞர் வே. முருகன், வழக்கறிஞர் ச. எழிலரசு, வழக்கறிஞர் மு. வேல்முருகன், வழக்கறிஞர் மு. செல்வக்குமார், வழக்கறிஞர் வே. திசையிந்திரன், மே பதினேழு இயக்கத்தைச் சேர்ந்த மெய்யப்பன், மருது மக்கள் இயக்கம் செ. முத்துப்பாண்டியன், இசுலாமிய சனநாயக முன்னணி மதுக்கூர் அ. மைதீன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

அதில் ஒருவரான மெய்யப்பன் அவர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏற்கெனவே வழக்கறிஞர் முருகன் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

ஆகஸ்ட் 4 ஆம் நாள், போராட்டம் 9வது நாளை எட்டியுள்ளது. அரசு தரப்பில் இருந்து உரிய முறையில் இந்த விசயத்தில் நடவடிக்கை எடுக்க அதிகாரமும் தகுதியும் உள்ள ஒருவர் கூட திரும்பிப் பார்க்கவில்லை.

மாவட்ட வருவாய் அலுவலர் வந்து உண்ணாவிரதத்தை முடித்து கொள்ள வற்புறுத்தியதாகச் சொல்லப்படுகிறது.

பா.ம.க நிறுவனர் ராமதாஸ், சென்னை உயர்நீதிமன்றத்தின் அலுவல் மொழியாக தமிழை அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி மதுரையில் 9 வழக்கறிஞர்கள் மேற்கொண்டுள்ள காலவரையற்ற உண்ணாநிலை இன்று ஒன்பதாவது நாளை எட்டியிருக்கிறது. அவர்களில் இரு வழக்கறிஞர்களின் உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஆனாலும் கோரிக்கைகள் ஏற்கப்படாதது கண்டிக்கத்தக்கது எனத் தெரிவித்துள்ளார்.

தமிழுக்காக ஒன்பது நாட்களாக உண்ணாநிலைப் போராட்டம் நடத்துபவர்களைத் தமிழக அரசு கண்டுகொள்ளவில்லையே? இது தமிழர்களுக்கான அரசா? என்கிற குமுறல் தமிழுணர்வாளர்கள் மத்தியில் பெரிதாக எழுகிறது. மக்கள் மனதிலும் அந்தக்கேள்வி எழுந்தால்..?

Leave a Response