நாம் தமிழர் கட்சி வரலாற்றில் முதன்முறையாக..– தமிழ் உறவுகளுக்கு சீமான் கடிதம்

கதிராமங்கலம், நெடுவாசல் பகுதிகளில் போராடிக் கொண்டிருக்கிற மக்களின் போர்க்குரலுக்கு வலுசேர்க்கிற ஒன்றுகூடல் உழவர் பாதுகாப்பு மாநாடு… அனைவரும் வருக என்று சீமான் அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில்,

வரலாற்றில் எப்போதும் இல்லாத அளவிற்குத் தமிழ்த்தேசிய இனமும், தமிழகமும் அளப்பெரிய நிலவளச் சுரண்டலுக்கும், ஒடுக்குமுறைகளுக்கும் உள்ளாகி நிற்கின்றன. முப்போகமும் விளைந்து செழித்து உலகிற்கே உணவிட்ட தாய்த்தமிழ் நிலம் இன்று தரிசுக்காடாகி அழிந்து வருகிறது. ‘உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம் தொழுதுண்டு பின்செல்பவர் ‘ என்று தமிழர் மறை போதிக்கிறது. ஆனால், கடவுளாகப் போற்றப்பட வேண்டிய தமிழக வேளாண் பெருமக்கள் நம் கண்முன்னால் தங்கள் நிலம் மடிந்து பாலைவனமாகப் போவதைக் கண்டு செயவதறியாது தற்கொலை செய்து மாண்டு போகிறார்கள்.

நூறு நாட்களுக்கு மேலாக ஹைட்ரோ கார்பன் எடுப்பிற்கு எதிராக நெடுவாசலில் தொடர்கிற போராட்டம், பல ஒடுக்குமுறைகளுக்கு மத்தியில் கதிராமங்கலம் மக்களின் நிறைவேறாத போராட்டம் என தமிழகமே போராட்டக்களமாகி நிற்கின்றது. இத்தகையக் கொடியச் சூழலில் நினைத்துப் பார்க்கக்கூட மத்திய, மாநில அரசுகள் விரும்பவில்லை. அம்பானிகள் மீதும், அதானிகள் மீதும் காட்டுகிற அக்கறையைப் போராடி வருகிற அப்பாவி மக்கள் மீது காட்ட மறுப்பதோடு, போராடி வரும் மக்கள் மீதே பொய் வழக்குப் போட்டு மத்தியில் ஆளும் மோடி அரசுக்கு மாநிலத்தை ஆளும் எடப்பாடி பழனிச்சாமி அரசு கைப்பாவையாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில்தான், கதிராமங்கலம் மண்ணைக் காத்திட, நெடுவாசல் மண்ணை மீட்டிட நம் ஆதித்தொழில் வேளாண்மையை மீட்டுப் பாதுகாத்திட நாம் தமிழர் கட்சியின் எழுச்சிமிகு உழவர் பாசறை வரும் ஆகத்து 05, காரிக்கிழமை (சனி) தஞ்சைத்தரணியின் இதயமாக விளங்குகிற கும்பகோணத்தில் மாபெரும் உழவர் பாதுகாப்பு மாநாட்டை நடத்துகிறது.
அன்று காலை சரியாக 10 மணியளவில் கும்பகோணம், காமராசர் சாலையில் அமைந்துள்ள எசு.இ.டி அரங்கத்தில் வேளாண் பெருங்குடியோன் நம்மாழ்வார் நினைவுக் கருத்தரங்கு நடைபெறவிருக்கிறது. இதில் பஞ்சாப் மாநிலத்திலிருந்து பெருமைக்குரிய முனைவர் ஜக்மோகன் சிங், அசாமிலிருந்து சூழலியல் போராளி பெருமைக்குரிய பத்மஸ்ரீ ஜாதவ் பெயிங் பங்கேற்கிறார்கள்.
இக்கருத்தரங்கில் என் ஆருயிர் தம்பி சூழலியல் ஆய்வாளர் ம.செந்தமிழன், எனது பெருமைக்குரிய இளங்கோ கல்லானை, பெருமதிப்புக்குரிய இறைநெறி இமயவன், நாம் தமிழர் கட்சியின் சோழமண்டலத்தளபதி அன்புக்குரிய அண்ணன் சட்டத்தரணி அ.நல்லதுரை போன்றோர் கருத்துரை வழங்கவிருக்கிறார்கள்.

அன்று மாலை 5 மணியளவில் கும்பகோணம் காந்தியடிகள் சாலையில் நாம் தமிழர் கட்சியின் உழவர் பாசறை நடத்தும் மாபெரும் உழவர் பாதுகாப்பு மாநாடு நடைபெறுகிறது. இந்நிகழ்வில் கதிராமங்கலத்தின் போராட்டக்குழுவினரும் கலந்துக் கொண்டு சிறப்பிக்க இருக்கிறார்கள். மேலும் ஆருயிர்த்தம்பி நெடுவாசல் செந்தில் தாசும் இம்மாநாட்டில் பங்கேற்கிறார்.
நாம் தமிழர் கட்சி வரலாற்றில் முதன்முறையாக நடைபெறும் வேளாண்மைக்கு என தனி மாநாடாக இந்நிகழ்வு நடைபெற உள்ளது.

நமது தாய்மண்ணைக் காக்க, எதிர்காலத் தலைமுறைக்கு நமது பண்பாட்டு விழுமியங்களைக் கொண்டு சேர்க்க நாம் அனைவரும் குடந்தையில் கூடுவோம்!

கதிராமங்கலம், நெடுவாசல் பகுதிகளில் போராடிக் கொண்டிருக்கிற மக்களின் போர்க்குரலுக்கு வலுசேர்க்கிற ஒன்றுகூடலாக இம்மாநாடு நடைபெறவிருக்கிறது.

எம் தாய்த் தமிழ் உறவுகள் உங்கள் ஒவ்வொருவரையும் தாய்நிலத்தை காத்திட..
இம் மாபெரும் நிகழ்விற்கு அழைக்கிறேன்.

உழவை மீட்போம்! உலகைக் காப்போம்!

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Response