பிக்பாஸ் நிகழ்ச்சி பற்றி நடிகை கவுதமி சொல்லும் புதியகருத்து

பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து நடிகை கவுதமி கருத்துத் தெரிவித்துள்ளார். வார ஏடொன்றுக்கு அவர் அளித்துள்ள நீண்ட பேட்டியில் ஒரு கேள்வியாக பிக்பாஸ் பற்றிக் கேட்கப்பட்டுள்ளது.

அதற்கு, இம்மாதிரியான நிகழ்ச்சிகள், ஒரு மிகப்பெரிய வியாபாரம் என்பதை மறுக்க முடியாது. அதனால் தான் ஒரு நிகழ்ச்சியே இத்தனை நாடுகளிலும், மொழிகளிலும் நடத்தப்படுகிறது. அது ஒரு புறம் இருக்கட்டும். ‘ரியாலிட்டி ஷோ ‘ என்பதைத் தாண்டி மீடியாவுக்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய வீச்சு இருக்கிறது. அந்த மீடியாவில் இது ஒரு கான்செப்ட் தான். அந்த வீச்சை வேறு விதமாகப் பயன்படுத்தலாம்.

இதே ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் இருக்கும் அந்த பத்துப் பேரோ, இருபது பேரோ தெரியவில்லை…அவர்களை ஒரு வளமிழந்த, வறட்சியான கிராமத்திற்கு அழைத்துச்சென்று அங்கு, ஒவ்வொரு வாரமும் ஒரு ‘டாஸ்க்’ கொடுக்கலாமே… அதுவும் அவர்களுக்கு மிக புதியதான ஒரு சூழ்நிலை தான்… அங்கே அவர்கள் எப்படிச் செயல்படுகிறார்கள் என்று பார்த்து வெற்றியாளரைத் தேர்வு செய்யலாம். அப்படிச் செய்தால், அந்த நூறு நாட்கள் கழித்து அந்த கிராமமே மாறிவிடும்.

ஊரை சுத்தப்படுத்துறதோ, விவசாயத்துல இறங்கி உதவுறதோ, குழந்தைகளுக்கு மாலை நேரம் வகுப்புகள் எடுக்கவோ செய்து வந்தால் அதில் ரியாலிட்டி ஷோவுக்கான சுவாரசியமும் இருக்கும், நல்லதும் நடக்கும். இப்படி நல்ல விதமா நிகழ்ச்சிகள் நடந்தால், நல்லது என்று கவுதமி சொல்லியிருக்கிறார்.

Leave a Response