போதைப்பொருள்கள் குறித்த ஆபத்துகளையும் அவற்றின் விளைவுகளையும் காட்சிப்படுத்தி சமுதாய விழிப்புணர்வு ஏற்படுத்தும் படங்கள் வரிசையில் சேர்ந்திருக்கும் படம் கலன்.
சிவகங்கை மாவட்டத்தைக் கதைக்களமாக வைத்திருக்கிறார்கள்.அங்கு வசிக்கும் கணவனை இழந்தபின்னும் மகனை அக்கறையோடு படிக்க வைத்து ஆளாக்குகிறார்.அந்த மகன் ஒரு சூழலில் போதைப் பொருள் கடத்தலை ஒழிக்கும் முயற்சியில் இறங்குகிறார்.அதன் விளைவு அவரே அழிகிறார்.அதனால் வெகுண்ட அவரது அம்மா பத்ரகாளி அவதாரமெடுக்கிறார்.அதன்பின் என்னவெல்லாம் நடக்கின்றன? என்பதுதான் திரைக்கதை.
தாயாக நடித்திருக்கும் தீபா,அதற்கு மிகப் பொருத்தமாக இருக்கிறார்.அவருடைய உருண்டு திரண்டு கண்கள் எல்லா இடத்திலும் பெரிதும் உதவியிருக்கிறது.
மகனாக நடித்திருக்கும் யாசர்,மண் மணம்,குணம் மாறாத இளைஞராகவே மாறியிருக்கிறார்.
யாசரின் நண்பராக நடித்திருக்கிறார் அப்புக்குட்டி.நண்பனின் மறைவுக்குப் பிறகு தீபாவுடன் இணைந்து அவர் செய்யும் செயல்கள் வரவேற்புக்குரியன.
கஞ்சா வியாபாரி வேடத்தில் நடித்து அமைதியான காயத்ரியா இப்படி? என அனைவரையும் ஆச்சரியப்பட வைத்திருக்கிறார் காயத்ரி.
வில்லன் வேடத்துக்கெனவே இருக்கும் சம்பத்ராமின் கதாபாத்திரம் வலிமையானது.அதை அவர் சரியாகச் செய்திருக்கிறார்.காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் சேரன்ராஜும் நன்று.
ஜெர்சன் இசையில் பாடல்கள் அனைத்தும் இரசிக்கும்படி அமைந்திருக்கின்றன.வெட்டுடையார் காளி பாடலுக்குப் பெரும் வரவேற்பு.பின்னணி இசையும் அளவு.
ஒளிப்பதிவாளர்கள் ஜெயக்குமார் மற்றும் ஜேகே ஆகியோரின் உழைப்பில், தென்மாவட்ட வாழ்வியல் மற்றும் விழாக்கள் ஆகியன அப்படியே திரையில் வந்திருக்கின்றன.
விக்னேஷ் வர்ணம் மற்றும் விநாயகம் ஆகியோர் படத்தொகுப்பு செய்திருக்கிறார்கள்.படம் தொய்வின்றி நகர்கிறது.
சமூகத்திற்கான ஒரு படமாக இருந்தாலும், அதை வியாபார அம்சங்கள் கலந்து அதே சமயம் நாகரீகமான முறையில் இயக்கியிருக்கிறார் இயக்குநர் வீரமுருகன்.
கலன் சமுதாய நலன்.
– சுரேஷ்