கௌதம் கார்த்திக்கிற்கு பொதுமேடையில் பாண்டிராஜ் அறிவுரை..!


சமீப காலங்களில் வாரிசு நடிகர்களில் மிக பெரிய அளவில் அறிமுகம் கிடைத்தது கார்த்திக்கின் மகன் கௌதம் கார்த்திக்கிற்காகத்தான் இருக்கும். மணிரத்னம் படத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு அந்தப்படம் சரியாக போகாவிட்டாலும் கூட, கௌதமிற்கு நிறைய வாய்ப்புகளும் எதிர்பார்ப்புகளும் உருவாகின.. ஆனால் அவரோ தனது திரையுலக வாழ்க்கையை பற்றி கவலைப்படாதவர் போல ஏனோ தானாவென்றே படங்களில் நடித்து வருகிறார்..

என்னடா இந்தப்பையன் கிடைச்ச நல்ல வாய்பை இப்படி வீணாக்குகிறானே என்கிற ஆதங்கம் சினிமாவில் பலருக்கும் உண்டு.. இன்று இவன் தந்திரன்’ இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட இயக்குனர் பாண்டிராஜ் கௌதமின் முகத்துக்கு நேராகவே தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியதோடு, அவர் தன்னை சினிமாவுக்கேற்றபடி மாற்றிக்கொண்டு நல்ல இடத்திற்கு வரவேண்டும் என அறிவுரையும் கூறினார்..

அடுத்ததாக பேசிய கௌதம் கார்த்திக், ஒரு அண்ணனை போல பாண்டிராஜ் கூறிய அறிவுரையை தான் ஏற்றுக்கொள்வதாகவும் தற்போது அந்தப்பாதையில் செல்வதற்கு ஏற்கனவே அடியெடுத்து வைத்துவிட்டதாகவும் கூறினார்.. குறிப்பாக ‘தனது தந்தை கார்த்திக் ஒழுங்காக ஷூட்டிங் வரமாட்டார்’ என சம்பாதித்த அவப்பெயரை தான் நிச்சயம் சம்பாதிக்கமாட்டேன் என்பதில் உறுதியாக இருப்பதாகவும் கூறினார்.

கடந்த வெள்ளியன்று வெளியான ரங்கூன் படத்தில் கௌதம் கார்த்திக்கின் நடிப்பு பேசப்படும் விதமாக அமைந்திருப்பதாக நல்ல விமர்சனங்கள் எழுந்துள்ளன. தற்போது ஆர்.கண்ணன் இயக்கத்தில் நடித்துள்ள இவன் தந்திரன் படம் அவரை அடுத்த கட்டத்திற்கு கொண்டு போகும் என நம்புவோம்.

Leave a Response