மத்திய அரசு நாடு தழுவிய ஜிஎஸ்டி வரிவிதிப்பை அறிவித்துள்ளது. அதில் திரைப்படங்களுக்கான கட்டணத்திலும் 28% வரி விதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இதற்கு நாடு தழுவிய அளவில் சினிமா துறையினரிடையே அதிருப்தி எழுந்துள்ளது. இதுதொடர்பாக, ஜிஎஸ்டி வரி சினிமாவுக்குப் பொருந்தாது, திரும்பப் பெறப்பட வேண்டும் என்று தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் விஷால் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்நிலையில் தற்போது நடிகர் கமல்ஹாசன் மத்திய அரசின் இந்த முடிவை எதிர்த்து கருத்து கூறியுள்ளார். ஒட்டுமொத்த நாட்டிற்கும் ஒரு வரி என்ற அடிப்படையில் திரைத்துறைக்கு ஒரே மாதிரியான வரியை கொண்டு வருவது சரியானதாக இருக்காது. இந்தி சினிமாவுக்கு இணையாக பிராந்திய மொழி படங்களுக்கு வரி விதிப்பது என்பது தயாரிப்பாளர்களுக்கு கட்டுப்படியாகாத ஒன்று” என அவர் கூறியுள்ளார்.
பிராந்திய மொழி படங்களுக்கு இந்த அளவுக்கு வரி விதித்தால் அது மூழ்கும் நிலையே உருவாகும். எனவே மத்திய அரசு இந்த வரிவிதிப்பை மறு பரிசீலனை செய்து, வாய்ப்பு இருந்தால், வாபஸ் பெற வேண்டும். அப்படியும் 28% ஜிஎஸ்டி வரியை அமல்படுத்தினால் சினிமாவை விட்டு விலகுவதைத் தவிர வேறு வழியில்லை என கமல்ஹாசன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.