பிளாஸ்டிக் பைகளுக்கான மாற்று என்ன? – பொ. ஐங்கரநேசன் விளக்கம்


பிளாஸ்ரிக் பைகளின் சொகுசுக்குப் பழக்கப்பட்ட எங்களுக்கு அவற்றைக் கைவிடுவதற்கு மனம் இல்லாமல் இருக்கிறது. பிளாஸ்ரிக் பைகளுக்கான மாற்று சந்தைக்கு வராமல் அவற்றைக் கைவிட முடியுமா என்றும் பலர் கேட்கிறார்கள். பிளாஸ்ரிக் பைகளுக்கான மாற்று வேறு எங்கேயும் இல்லை. எமது மனங்களில்தான் இருக்கிறது. பிளாஸ்ரிக் பைகளைக் கைவிட வேண்டும் என்று நாம் மனதளவில் உறுதியாகத் தீர்மானித்தால் மாற்று தானாக வரும் என்று வடக்கு சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.
உலக சுற்றுச்சூழல் தினம் மற்றும் தேசிய சுற்றுச்சூழல் வாரம் தொடர்பான நிகழ்ச்சிகள் பாடசாலைகளில் நடைபெற்று வருகின்றன. யாழ் திருக்குடும்பக் கன்னியர்மடம் பாடசாலையில் இன்று வெள்ளிக்கிழமை (02.06.2017) நடைபெற்ற சுற்றுச்சூழல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றியபோது அமைச்சர் பொ.ஐங்கரநேசன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
மனிதன் சூழலில் குவித்து வருகின்ற கழிவுகளில் இயற்கைக்கும் மனித உடல் நலத்துக்கும் மிகுந்த ஆபத்தை ஏற்படுத்தும் கழிவுகளில் பிளாஸ்ரிக் கழிவுகளே முதலிடத்தில் உள்ளன. மண்ணில் உக்காத காரணத்தால் நிரந்தரமாகவே சூழலில் தங்கிவிடும் இவற்றை எரிக்கும்போது டையொக்சின் என்ற நச்சுவாயு வெளியேறுகிறது. இது புற்றுநோய்களையும் மலட்டுத் தன்மையையும் ஏற்படுத்தி வருகிறது.
பிளாஸ்ரிக்கை முற்றாகத் தவிர்க்க இயலாமற்போனாலும், பிளாஸ்ரிக் பைகளையும் ஒருநாள் பாவித்துவிட்டு வீசும் பிளாஸ்ரிக்கினால் ஆன குவளைகள், தட்டுகள், உணவுப் பெட்டிகள் போன்றவற்றையும் நாங்கள் முற்றாகவே கைவிடலாம். திண்மக்கழிவுகளில் இவற்றின் பங்கே மிக அதிகமாக இருக்கிறது. இவற்றுக்கான மாற்றாகக் கடதாசிப்பைகளையும் துணிப்பைகளையும் நாம் பயன்படுத்தலாம். பிளாஸ்ரிக் ஆட்சிக்கு வரும்வரை நாம் எல்லோரும் இவற்றைத்தான் பயன்படுத்தினோம். பிளாஸ்ரிக் இவற்றையெல்லாம் ஓரங்கட்டிவிட்டது.
கடதாசிப்பைகளையும் துணிப்பைகளையும் பயன்படுத்துவதைப் பலர் நாகரிகக்குறைவாகவும் அவமானமானதாகவும் கருதுகிறார்கள். இது எங்கள் மனதில் உள்ள பிரச்சினை. உண்மையில் சூழலை மாசுறுத்தாத, இயற்கைக்கு இசைவான பொருட்களைப் பயன்படுத்துபவர்களே நாகரிகம் மிக்கவர்கள், நற்பண்புகளைக் கொண்டவர்கள். அந்தவகையில் பிளாஸ்ரிக் பைகளுக்கான மாற்றங்களைச் சந்தையில் தேடாமல் முதலில் எமது மனங்களில் மாற்றத்தைத் தேடுவோம் என்றும் தெரிவித்துள்ளார்.

Leave a Response