அமெரிக்காவின் முடிவு இந்தப்பூமிக்கு எதிரானது – பிரான்ஸ் அதிபர் கடும் தாக்கு

பாரீஸ் பருவ நிலை ஒப்பந்தம் 2015- ஆம் ஆண்டு வரையறுக்கப்பட்டு, 2016-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கையெழுத்தானது. பாரீஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் இந்தியா உட்பட 175 நாடுகள் கையெழுத்திட்டுள்ளன.

உலகின் வெப்பநிலை உயர்வை 2 டிகிரி செல்சியஸுக்கு மிகாமல் கட்டுப்படுத்த வேண்டும் என்பதே பாரீஸ் ஒப்பந்தத்தின் முக்கிய இலக்கு. மேலும் இந்த ஒப்பந்தத்தின்படி கரியமில வாயுகளை அதிகமாக வெளியேற்றும் நாடுகள் தொழிற்சாலைகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட வேண்டும்.

அமெரிக்காவைப் பொறுத்தவரை அந்நாடு கரியமில வாயுக்களை அதிகமாக வெளியேற்றும் நாடுகளில் இரண்டாம் இடத்தில் உள்ளது. இதனால் நிலக்கரி நிலையங்களை மூடுதல் போன்றவற்றை பாரீஸ் பருவ நிலை ஒப்பந்தம் அமெரிக்காவுக்கு வலியுறுத்துகிறது. இந்த விதிமுறை கரியமில வாயுகளை அதிகமாக வெளியேற்றும் அனைத்து நாடுகளுக்கும் பொருந்தும்.

முன்னாள் அதிபர் ஒபாமா நிர்வாகத்தின் கீழ் பாரீஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் அமெரிக்கா இணைந்தது. ஆனால் அமெரிக்க அதிபராக ட்ரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டது முதல் பாரீஸ் ஒப்பந்தத்தை கடுமையாக விமர்சித்து வந்தார். பாரீஸ் பருவ நிலை ஒப்பந்தம் அமெரிக்கப் பொருளாதாரத்தில் முடக்கத்தை ஏற்படுத்துகிறது என்று ட்ரம்ப் தொடர்ந்து கூறிவந்தார்.

இந்த நிலையில் பாரீஸ் பருவ நிலை ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா வெளியேறியுள்ளது.

டிரம்ப்பின் இந்த முடிவுக்கு பிரான்ஸ் அதிபர் அதிருப்தி தெரிவித்துள்ளார், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரான். இதுகுறித்து வெளியிட்டுள்ள காணொலிப் பதிவில்,

நாம் எங்கு வாழ்ந்தாலும், யாராக இருந்தாலும், நம் அனைவருக்கும் பொறுப்பு ஒன்றுதான். அது, இந்த பூமியைப் பாதுகாப்பது. அமெரிக்காவின் முடிவை மதிக்கிறேன். ஆனால்,அம்முடிவு அமெரிக்கா மற்றும் இந்தப் பூமிக்கு எதிராகச் செய்யப்படும் மிகப்பெரிய தவறு இது’ என மக்ரான் கூறியுள்ளார்.

Leave a Response