தமிழீழத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தவிர்க்க உறுதிமொழி எடுக்கும் பள்ளிகள்

வடக்கு மாகாணத்தில் உள்ள சகல பாடசாலைகளிலும் எல்லா வகையான பிளாஸ்டிக் பைகளையும் ஒருநாள் பயன்படுத்திவிட்டு வீசும் பிளாஸ்டிக் பொருட்களையும் தவிர்ப்பதற்கான உறுதிமொழி மே 29ஆம் தேதி எடுக்கப்படவுள்ளது என தமிழ்மாகாண அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, யாழ்ப்பாணத்தில் சுற்றாடல் அமைச்சகம் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில்,

ஐக்கியநாடுகள் சபையால் ஆண்டுதோறும் ஜூன் 5ஆம் தேதி உலக சுற்றுச்சூழல் தினமாகச் சர்வதேச அளவில் கொண்டாடப்பட்டு வருகிறது. சுற்றுச்சூழல்பற்றி உலகின் கவனத்தை ஈர்த்து, விழிப்புணர்வை ஏற்படுத்திச் சூழல் பாதுகாப்பில் அனைவரினதும் ஆக்கப்பூர்வ பங்களிப்பை வேண்டுவதே இத்தினத்தின் நோக்கமாகும்.

இதையொட்டி, உலக சுற்றுச்சூழல் தினத்துக்கு முன்னரான, மே 29 தொடங்கி ஜூன் 4 வரையான ஒருவார காலப்பகுதி தேசிய சுற்றுச்சூழல் வாரமாகக் கடைப்பிடிக்கப்படவுள்ளது.

தேசிய சுற்றுச்சூழல் வாரத்தின் தொடக்க நாளான மே 29ஆம் திகதி காலை ஒன்றுகூடலின்போது சகல பாடசாலைகளிலும் எல்லா வகையான பிளாஸ்டிக் பைகள் மற்றும் ஒருநாள் பாவித்துவிட்டு வீசும் பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்பாட்டில் இருந்து விலக்குவது தொடர்பாக அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் சத்தியப்பிரமாணம் மேற்கொள்ள வடக்கு சுற்றாடல் அமைச்சு கல்வி அமைச்சுடன் இணைந்து ஏற்பாடுகள் செய்துள்ளது. அன்றைய தினம்,

பிளாஸ்டிக் கழிவுகளினால் இயற்கைச் சூழலுக்கும் மனித உடல் நலத்துக்கும் ஏற்பட்டுள்ள பெரும் பாதிப்புகளைக் கருத்திற் கொண்டும், வருங்கால சந்ததிகளுக்கு ஆரோக்கியமான சுற்றுச்சூழலைக் கையளிக்கும் நோக்குடனும் எல்லாவகையான பிளாஸ்டிக் பைகளையும், ஒருநாள் பாவனைக்குரிய பிளாஸ்டிக்கினால் ஆன குவளைகள், போசன விரிப்புகள் உணவுத் தட்டுகள், உணவுப் பெட்டிகள் ஆகியவற்றையும் இன்றில் இருந்து பயன்படுத்தவும் கொள்வனவு செய்யவும் மாட்டோம்”. என்ற உறுதி மொழி சகல பாடசாலைகளிலும் எடுக்கப்படவுள்ளது.

அத்தோடு, பாடசாலை நிதியில் அல்லது பாடசாலையுடன் தொடர்புடைய சங்கங்களின் நிதியில் பிளாஸ்டிக் பைகள் மற்றும் ஒருநாள் பாவனைக்குரிய பொருட்கள் கொள்வனவு செய்வதை முற்றாகத் தவிர்க்கவும் ஆவண செய்யப்பட்டுள்ளது என அந்தச்செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Response