அடிதடி வழக்கில் ஜேசிடி.பிரபாகர் நீக்கம் – சர்ச்சை

அதிமுகவில் ஒற்றைத் தலைமை தொடர்பான சிக்கலில் 2022 ஆம் ஆண்டு ஓபிஎஸ்-இபிஎஸ் ஆகிய இருதரப்பும் தனித்தனியாகப் பிரிந்தனர்.அப்போது, எடப்பாடி தலைமையில், 2022 ஜூலை 11 ஆம் தேதி வானகரத்தில் பொதுக்குழுக் கூட்டம் நடந்தது.அந்தநேரத்தில் ஓபிஎஸ், திடீரென அதிமுக தலைமை அலுவலகத்துக்குச் செல்வதாக அறிவித்தார்.அதேநேரம்,அதிமுக பொதுக்குழுவில் ஓ.பன்னீர்செல்வத்தின் பொருளாளர் பதவி பறிக்கப்பட்டு,கட்சியில் இருந்தும் நீக்கப்பட்டு,கட்சியின் இடைக்காலப் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி நியமிக்கப்பட்டு அதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதேநேரம்,அதிமுக தலைமை அலுவலகத்தைக் கைப்பற்ற ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் இராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் அமைந்துள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் குவிந்தனர்.அதையறிந்த எடப்பாடி பழனிச்சாமி அணியினர், ஓபிஎஸ் ஆதரவாளர்கள், தலைமை அலுவலகத்தில் ஒன்று கூடுவதைத் தடுக்க முயன்றனர்.

அந்தச் சூழ்நிலையில் ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது வீட்டிலிருந்து இராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்துக்குப் புறப்பட்டார்.அவர் வரும்போது அவ்வை சண்முகம் சாலை அருகே எடப்பாடி தரப்பினர் ஓபிஎஸ் வாகனம் மீது கல்வீச்சில் ஈடுபட்டனர்.இதனால் அதிமுக அலுவலக வாசலில் எடப்பாடி – ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பயங்கர ஆயுதங்களுடன் மாறிமாறி மோதிக்கொண்டனர்.

அப்போது ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பூட்டப்பட்டிருந்த அதிமுக தலைமை அலுவலகத்தின் கதவுகளை கடப்பாரையால் அடித்து உடைத்தனர்.பிறகு ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் தலைமை அலுவலகத்திற்குள் நுழைந்து அலுவலகம் மேலே ஏறி ஜெயலலிதா போல கையை அசைத்து அவரது ஆதரவாளர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தினார்.பின்னர் அதிமுக தலைமை அலுவலகத்தைக் கைப்பற்றிய ஓபிஎஸ்,தனது ஆதரவாளர்களுடன் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனையில் ஈடுபட்டார்.

அவருடன் முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கம்,ஜேசிடி.பிரபாகர்,மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.அந்தநேரத்தில் தலைமை அலுவலகத்தில் கட்சியின் முக்கியகோப்புகள்,சாவிகள் மற்றும் முக்கிய ஆவணங்கள் அனைத்தும் அள்ளிச்சென்று வாகனத்தில் ஏற்றினர்.

இதுதொடர்பாக சி.வி.சண்முகம்,இராயப்பேட்டை காவல்நிலையத்தில் கட்சியின் தலைமை அலுவலகத்தை உடைத்து ஆவணங்களை கொள்ளையடித்துச் சென்றதாகவும்,எடப்பாடி ஆதரவாளர்களைக் கடுமையாகத் தாக்கியதாகவும் புகார் அளித்தார்.அந்த புகாரின்படி இராயப்பேட்டை காவல்துறையினர், ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களாக இருந்த வைத்தியலிங்கம்,மனோஜ் பாண்டியன்,ஜேசிடி.பிரபாகர் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.அதேபோல் ஓபிஎஸ் தரப்பில் தங்களது வாகனம் மீது தாக்குதல் நடத்தியதாக எடப்பாடி தரப்பினர் மீது புகார் அளித்தனர்.இந்த இரண்டு புகார்கள் மீது இராயப்பேட்டை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த மோதல் தொடர்பாக உயர்நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது.அப்போது நீதிமன்றம் இந்த வழக்கை சென்னை காவல்துறையில் இருந்து சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட்டது.அதன்படி சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை நடத்திவந்தனர்.

தற்போது 4 ஆண்டுகள் கழித்து சிபிசிஐடி காவல்துறையினர் அதிமுக தலைமை அலுவலக மோதல் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ளனர்.அதில், எடப்பாடி சார்பில் சி.வி.சண்முகம் அளித்த புகாரில் ஓபிஎஸ் ஆதரவாளராக இருந்த ஜேசிடி.பிரபாகர் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு வந்து தாக்கியதாக காணொலிக் காட்சிகளுடன் புகார் அளித்து இருந்தார்.

ஆனால், சிபிசிஐடி காவல்துறையினர், தற்போது ஓபிஎஸ் அணியில் இருந்து விலகி தவெகவில் இணைந்து ஆயிரம்விளக்கு தொகுதியில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராகவும், தவெக அரசில் சட்டப்பேரவைத் தலைவராகவும் உள்ள ஜேசிடி.பிரபாகரை இந்த வழக்கில் இருந்து நீக்கும் வகையில் அவரது பெயரை சிபிசிஐடி பதிவு செய்த முதல்தகவல் அறிக்கையில் குறிப்பிடவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அதேநேரம்,தற்போது திமுகவில் இணைந்து சட்டமன்ற உறுப்பினர்களாக உள்ள ஓபிஎஸ், வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் மீது மட்டும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.முக்கிய நபராக குற்றம்சாட்டப்பட்ட ஜேசிடி.பிரபாகர் பெயர் சேர்க்கவில்லை.

ஜேசிடி.பிரபாகரை பாதுகாக்கும் வகையில் இந்த வழக்கிலிருந்து அவரது பெயரை நீக்கியுள்ளது தற்போது அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.

Leave a Response