
அசாமில் 126 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன.2026 ஏப்ரல் 9 ஆம் தேதி அசாமில் ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற்றது.இதில் ஆளும் பாஜக, அசாம் கண பரிஷத் மற்றும் போடோ மக்கள் முன்னணி ஆகிய கட்சிகள் அடங்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) போட்டியிட்டது.
காங்கிரசு தலைமையிலான கூட்டணியில் ராய்ஜோர் தளம், ஏஜெபி, சிபிஐ (எம்), ஏபிஹெச்எல்சி மற்றும் சிபிஐ (எம்எல்) ஆகிய கட்சிகள் போட்டியிட்டன.
இதுதவிர அனைத்து இந்திய ஜனநாயக முன்னணி (ஏஐயுடிஎப்) தனியாகப் போட்டியிட்டது.
இந்தத் தேர்தலில் 85.96% வாக்குகள் பதிவாகின. 722 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
இந்நிலையில்,அசாமில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.ஆட்சியைப் பிடிக்க 64 இடங்கள் தேவைப்படுகின்றன.
இதில் ஆளும் பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணி 102 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.இதில் பாஜக 82, போடோலாந்து மக்கள் முன்னணி 10, அசாம் கண பரிஷத் 10 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன.
இதன்மூலம் இக்கூட்டணி தொடர்ந்து 3 ஆவது முறையாக வெற்றி பெற்றுள்ளது.ஹிமந்த பிஸ்வா சர்மா 2 ஆவது முறையாக முதலமைச்சராகப் பொறுப்பேற்பார் எனத் தெரிகிறது.
அங்கு 2016 ஆம் ஆண்டு பாஜக முதல்முறையாக ஆட்சியைப் பிடித்தது.அப்போது சர்வானந்த சோனோவால் முதலமைச்சரானார்.2021 இல் நடைபெற்ற தேர்தலில் பாஜக 2 ஆவது முறையாக ஆட்சியைப் பிடித்தது.அப்போது, ஹிமந்த பிஸ்வா சர்மா முதலமைச்சரானார்.
காங்கிரசு தலைமையிலான எதிர்க்கட்சிகள் கூட்டணி 21 இடங்களிலும் ஏஐயுடிஎப் 2 இடங்களிலும்
திரிணமூல் காங்கிரசுக் கட்சி ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன.
2021 ஆம் ஆண்டு நடைபெற்ற அசாம் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 75 இடங்களிலும் காங்கிரசுக் கூட்டணி 50 இடங்களிலும் வெற்றி பெற்றன.இந்தத் தேர்தலில் காங்கிரசுக் கூட்டணி வென்ற தொகுதிகள் மேலும்
குறைந்துள்ளன.


